Salaar Review: சலார் விமர்சனம்.. ஒரு பெரிய இதிகாசத்தை எழுதியிருக்காரு பிரசாந்த் நீல்.. ஆனால்?
நடிகர்கள்: பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன்
இசை: ரவி பஸ்ரூர்
இயக்கம்: பிரசாந்த் நீல்
ரேட்டிங்:
சென்னை: இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக மேப்பிற்கே தெரியாத ஒரு சாம்ராஜ்யமாக கான்சார் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் உலகம் போல கான்சார் உலகத்தையும் செம டார்க்காக வடிவமைத்துள்ளார்.
மகாபாரதம், ராமயாணம், பொன்னியின் செல்வன், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல பிரசாந்த் நீல் ஒரு பெரிய இதிகாசத்தை பிரபாஸை வைத்து படைக்க நினைத்துள்ளார்.

ஆனால், ஓவர் பில்டப்பாகவும் மற்றவர்களுக்கு பெரிய ஸ்கோப் கொடுக்காமல் மொத்த வெயிட்டையும் பிரபாஸ் மீது இறக்கி உள்ள நிலையில், சலார் சாம்ராஜ்யம் ரசிக்கும் படி உள்ளதா? இல்லை திகட்டுகிறதா? என்கிற முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க...
சலார் கதை: இந்த கதை 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கதை என கொடூரமான கொள்ளையர்கள் கூட்டமாக சேர்ந்து மூன்று குழுக்களாக ஒரு இடத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலேயர்களாலேயே அவர்கள் இடத்தை பிடிக்க முடியவில்லை என்றும் பெரிய பில்டப் கொடுக்கின்றனர். மேலும், மேப்பில் இருந்தே அந்த நகரத்தை அழித்து விட்டு ரகசியமாக ஆனால், உலகின் உள்ள அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது போல மார்வெல் தயாரிப்பில் வெளியான பிளாக் பாந்தர் வாழும் வகாண்டா ஊர் போல காட்டுகின்றனர்.

ஜகபதி பாபு துரையாக உள்ள நிலையில், அவர் இருக்கும் போதே அவரது மகன் ராஜ மன்னார் (பிருத்விராஜ்) அரியணை ஏற வேண்டும் என சொல்லி விட்டு, அதற்கு முன்னாடி நான் வெளியே கொஞ்ச காலம் போயிட்டு வந்து முடிசூட்டி விடுகிறேன் என சொல்கிறார்.
பாபி சிம்ஹா மற்றவர்களை சகுனி வேலை செய்து தூண்டிவிட அப்பா போன உடனே பிருத்விராஜை போட்டுத் தள்ளி விட்டால் அவர் எப்படி துரை ஆவார் என்கிற சதி நடக்கிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஆர்மியை அழைத்து வருகின்றனர். ஆனால், தன்னுடைய ஆர்மியாக சிறு வயதில் பிரிந்து சென்ற தேவாவை (பிரபாஸ்) அழைத்து வருகிறார் பிருத்விராஜ். இதை பார்த்து பிருத்விராஜின் தம்பியே சிரிக்கிறார். ஆனால், தேவா எவ்ளொ பெரிய பைத்தியக்கார நண்பன் என்றும் நட்புக்காக எத்தனை படைகள் வந்தாலும் பீமன் போல தனி ஒருவனாக நின்று துவம்சம் செய்து விடுவான் என்பதை நன்கு அறிந்து கொண்டு அவனை வைத்து தான் விரும்பிய அரியணையை பிடிக்க நினைக்கிறார்.

பிருத்விராஜ் நினைத்தது நடந்ததா? பிரபாஸுக்கும் பிருத்விராஜுக்கும் இடையே பிரச்சனை எப்படி வெடிக்கிறது? என்பதெல்லாம் மீதிக் கதை அல்ல, அடுத்த பார்ட் பார்த்தால் தான் தெரியும் என தலையை சுற்ற வைத்து விடுகின்றனர்.
திரைக்கதை எப்படி இருக்கு?: மேலே சொன்ன படத்தின் கதையே இடைவேளைக்கு மேல் தான் மைம் கோபி ஸ்ருதிஹாசனிடம் சொல்கிறார். அதற்கு முன்னதாக முதல் பாதி முழுக்க அம்மாவின் பேச்சைக் கேட்டு அமைதிப்படையாக வாழ்ந்து வருகிறார் பிரபாஸ். ஸ்ருதிஹாசன் அப்பாவின் பேச்சை மீறி இந்தியா வந்து விட அவரை போட்டுத் தள்ள ஸ்ரேயா ரெட்டியின் ஆட்கள் துடிக்கின்றனர். ஸ்ரேயா ரெட்டி பிருத்விராஜின் சகோதரி. பைத்தியம் பிடித்த நீலாம்பரி போல 7 வருஷமாக பழி வாங்க துடித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ருதிஹாசன் இந்தியா வந்ததும் அவரை காப்பாற்ற ஒரே ஆளால் தான் முடியும் என பிரபாஸை காட்டுகின்றனர். கேக் வெட்ட பிளாஸ்டிக் கத்தியை எடுத்தாலே அவங்க அம்மா ஈஸ்வரி ராவ் கண்டிக்கும் அளவுக்கு இருக்க, ஸ்ருதிஹாசனை காப்பாற்ற பிரபாஸ் போராடுவதற்காகத்தான் தான் தனது நண்பனையே எதிர்க்கும் சூழல் உருவாவதாக காட்டுகின்றனர். ரொமான்ஸ் போர்ஷன் எல்லாம் எதுவும் இல்லை.

பிளஸ்: நடிகர் பிரபாஸ் ஆஜானு பாகுவாக இருப்பதே இந்த படத்திற்கு பிளஸ் தான். எத்தனை படைகள், எத்தனை பேர் வந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் தனது நண்பன் பிருத்விராஜ் மீது கை வைத்தால் அவர்கள் தலை துண்டிக்கப்படும். கணக்கே இல்லாமல் இரண்டாம் பாதி முழுக்க பலரை துவம்சம் செய்து கொன்றுக் கொண்டே இருக்கிறார். கான்ஸார் மேப்பிலேயே இல்லை என முன்னாடியே கதை சொன்னதால் இந்த கதையில் போலீஸுக்கோ, ராணுவத்துக்கோ, இண்டர்போலுக்கோ வேலையில்லை. பிரபாஸை தொடர்ந்து பிருத்விராஜ் சிறப்பாக நடித்துள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு கதையை ஸ்டார்ட் பண்ணி வைக்கிற வேலை மட்டும் தான். கேம் ஆஃப் த்ரோன்ஸ் போல ஒரு தனி சாம்ராஜ்ய கதையை ஃபுல் டார்க் தீமில் கொடுக்க பிரசாந்த் நீல் ஸ்க்ரிப்ட் வொர்க் செய்திருப்பதும் அதை விஷுவலாக காட்டியிருப்பதும் பெரிய பிளஸ். இந்த படத்தை தியேட்டரில் மட்டும் தான் பார்க்க வேண்டும். அந்தளவுக்கு பிரம்மாண்டம்.
மைனஸ்: ஆரம்பத்திலேயே கரன்ட் ஷாக்கில் கை வைத்து கொடுக்கப்படும் பில்டப்பில் இருந்து அத்தனை படையினர் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்க அசால்ட்டாக அந்த இடத்தில் தண்டனை கொடுக்கக் கூடியவரின் தலையையே வெட்டி வீசுவது உள்பட வெறும் பில்டப் எல்லாம் இல்லை பிரம்மாண்ட பில்டப் தான் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலவீனம் என்று சொல்ல வேண்டும். மேலும், துப்பாக்கி வைத்துக் கொண்டு இருக்கும் பலர் திடீரென பிரபாஸ் அடிக்க ஆரம்பித்ததும் வெறும் கத்திகளை மட்டுமே தூக்கிக் கொண்டு வந்து அதே கத்திகளால் பிரபாஸிடம் வெட்டு வாங்கி செல்கின்றனர்.
ஸ்ருதிஹாசனை காப்பாற்றவா இவ்வளவு போராட்டம் என்பதும் ஆரம்பத்திலேயே சவுரங்க வம்சத்தில் ஒருத்தன் இருந்தாலும் ஆபத்து என சொல்லும் போதே பிரபாஸ் அந்த வம்சத்தை சேர்ந்தவன் தான் என யூகிக்க வைப்பது, இந்த சீனில் அவன் அடிப்பான் பாரேன் என சொல்ல அவரும் 50 பேரை அடித்து துவம்சம் செய்கிறார். ஏகப்பட்ட டிராமா, அரசியல், நிபந்தனை என பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஓடிடியில் பல வருடங்கள் வெப்சீரிஸாக வரவேண்டிய ஒரு கதையை 2 மணி நேரம் 55 நிமிடங்களில் காட்டியிருப்பதே 200 ரூபாய் டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு தலையில் ஒரு பெரிய இதிகாசத்தை திணித்தது போலத்தான் உள்ளது. கண்டிப்பாக பிரபாஸ் ரசிகர்களுக்கு பெரிய வேட்டை. சாமானிய ரசிகர்களுக்கு ரவி பஸ்ரூர் இரண்டாம் பாகத்தில் அடித்த இசைக்கு தலைவலி தான் மிச்சம்.


Click it and Unblock the Notifications











