Kisi Ka Bhai Kisi Ki Jaan Review : வீரம் இந்தி ரீமேக்.. கிஸி கா பாய் கிஸி கி ஜான் பட விமர்சனம்!
நடிகர்கள்: சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ்
இசை: ரவி பஸ்ரூர்
இயக்கம்: ஃபர்ஹத் சம்ஜி
மும்பை: ஃபர்ஹத் சம்ஜி இயக்கத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் நடித்துள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். டோலிவுட் நடிகர் வெங்கடேஷ் டகுபதி, ஷெனாஸ் கில், பாலக் திவாரி, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிறுத்தை சிவா வீரம் படத்தை இயக்கி அதன் பிறகு வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த, இப்போ சூர்யாவை வைத்து கங்குவா வரை சென்று விட்டார். இந்நிலையில், அந்த பழைய மாவை வைத்து பாலிவுட்டில் பெரும் பட்ஜெட்டில் சல்மான் கான் நடித்துள்ள கிஸி கா பாய் கிஸி கி ஜான் படம் என்ன ஆனது என்பதை இங்கே பார்ப்போம்..
தெரிந்த கதை தான்: வீரம் படத்தை பார்த்த அனைத்து ரசிகர்களுக்கும் சல்மான் கானின் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தின் கதை தெரிந்திருக்கும். இந்தி படத்துக்காக புதிதாக இயக்குநர் எந்த கதையையும் மாற்றவில்லை. பிரம்மாண்டமாக காட்சிகளுக்குத் தான் பணத்தை செலவு செய்துள்ளனர்.

கல்யாணம் செய்துக் கொண்டால் வரப்போற பொண்ணு தம்பிகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவாளோ என்கிற பயத்தினால் அண்ணன் சல்மான் கான் திருமணம் செய்துக் கொள்ளாமல் தனது 3 தம்பிகளுடன் கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு வாழ்ந்து வருகிறார்.
அண்ணனுக்குத் தெரியாமல் ஆளுக்கொரு பெண்ணை காதலித்து வரும் தம்பிகளான சித்தார்த் நிகாம், ராகவ் ஜுயால், ஜெஸி கில் மூவரும் எப்படியாவது அண்ணனுக்கும் ஒரு பெண்ணை செட் பண்ணி விட்டுவிட்டால் தங்கள் காதல் கைகூடும் என பாக்கியலக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டேவை சல்மான் கானுக்கு ஜோடியாக முயற்சி செய்வார்கள்.
இந்த பஞ்சாயத்திலேயே முதல் பாதி முடிய இரண்டாம் பாதியில் பூஜா ஹெக்டேவின் ஊருக்குச் செல்லும் சல்மான் கான் அவருக்கும் வெங்கடேஷ் குடும்பத்துக்கும் எதிரியாக இருக்கும் ஜகபதி பாபுவை எப்படி அந்த குடும்பத்துக்கே தெரியாமல் காவல் தெய்வமாக இருந்து பந்தாடுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

இன்னொரு ரீமேக் சொதப்பல்: தென்னிந்திய படங்களையும் குறிப்பாக தமிழ் படங்களையும் அதிகளவில் ரீமேக் செய்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அதே பிரச்சனை தான் இந்த வீரம் இந்தி ரீமேக் படத்திற்கும் எழுந்துள்ளது.
பிரம்மாண்டம், கூட்டம் கூட்டமாக ஆட்கள், நம்ப முடியாத அனல் அரசு மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் என எதுவுமே ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. பதான் படத்தில் பத்து நிமிடம் சல்மான் கான் வந்து சென்றாலும், தியேட்டரே தெறித்த நிலையில், இந்த படத்தில் அவரது ஆக்ஷன் காட்சிகளை தவிர காமெடி போர்ஷனும், காதல் போர்ஷனும் கொஞ்சமும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
பிளஸ்: வழக்கம் போல சல்மான் கான் தனது ரசிகர்களுக்காக மெனக்கெட்டு செய்யும் அந்தனை ஸ்டன்ட் காட்சிகளும் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. பூஜா ஹெக்டே ரொம்பவே அழகு பொம்மையாக தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.

நடிகர் வெங்கடேஷ் மற்றும் வில்லனாக வரும் ஜகபதி பாபு உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பு இந்த படத்துக்கு பெரும் பிளஸ் ஆக அமைந்துள்ளது. கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு வெயிட்டான பின்னணி இசையை கொடுத்துள்ளார்.
மைனஸ்: சல்மான் கானை தவிர்த்து அவரது தம்பிகளாக வரும் நடிகர்களும், அவர்களுக்கு ஜோடிகளாக வரும் பாலக் திவாரி, ஷெனாஸ் கில் உள்ளிட்டவர்களின் போர்ஷன் பெரிதாக ஒட்டவில்லை. ஒட்டும்படி திரைக்கதையை இயக்குநர் கையாளவில்லை. தமிழிலேயே அந்த போர்ஷன் மிகப்பெரிய கிரிஞ்சாகத்தான் இருக்கும். இந்தியில் சொல்லவா வேண்டும்!
சல்மான் கானை காமெடி பண்ண வைத்து நல்லா காமெடி பண்ணி விட்டார் இயக்குநர் என்று தான் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். சல்மான் கானின் ஹார்ட்கோர் ரசிகர்களுக்கு அவரது ஆக்ஷனை பார்க்க இந்த ரம்ஜான் பண்டிகையில் செம ட்ரீட்டாக இருந்தாலும், ஜெனரல் ஆடியன்ஸுக்கு இந்த படம் பயங்கர கடி தான். டைகர் 3 காப்பாற்றும் என நம்புவோம்!


Click it and Unblock the Notifications











