Sambhavam Adhyayam Onnu Review: ஓட்டுப்போட்டு வந்து இந்த படத்தை பாருங்க.. சம்பவம் அத்தியாயம் ஒன்னு விமர்சனம்!
சென்னை: மலையாள சினிமாவில் போலீஸ் அதிகாரிகளை வைத்து ஏகப்பட்ட வெரைட்டிகளில் படங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகி உள்ள 'சம்பவம் அத்தியாயம் ஒன்னு' நிஜமாகவே மெர்சல் சம்பவம் தான்.
பேய்க் கதை, டைம் டிராவல், ஆன்மிகம், த்ரில் என கலந்துக் கட்டி அடித்து ஒரு கதையை உருவாக்கி படத்தை பார்த்து முடிக்கும் அந்த கடைசி ஷாட் வரை கதிகலங்க வைத்துவிட்டார் இயக்குநர் ஜீத்து சதீஷன் மங்களத்து.

காணாமல் போகும் போலீஸ்காரர் ஒருவரை தேடி காட்டுக்குச் செல்லும் 3 போலீஸ்காரர்கள் என்ன ஆகின்றனர். காக்கா கடவுள் பண்ணும் சித்து வேலைகள் என்ன? என்பதை திரையில் காட்டியுள்ள விதத்தில் மிரட்டி விடுகின்றனர். சீட் எட்ஜ் த்ரில்லர் என சொல்வது போல படம் பரபரப்புக்கு கடைசி வரை பஞ்சமில்லாமல் செல்கிறது.
என்ன கதை?: தனது மனைவி பிரசவ நேரம் நெருங்கிய நிலையில், டியூட்டியில் ஜாயின் செய்வதற்காக ஆனந்த் எனும் காவலர் வேலைக்குச் செல்கிறார். அவர் செல்லும் வழியிலேயே காட்டுப்பக்கம் அந்த ஸ்டேஷன் போலீஸார் சிலர் அவரை சந்தித்து தங்கள் ஜீப்பில் ஏற்றிக் கொள்கின்றனர். அதே நேரம் வாக்கி டாக்கியில் காட்டில் ஒரு போலீஸார் சிக்கிக் கொண்டதாகவும் உயிருக்கு போராடுவதுமாக பேசுகிறார். அவருக்கு உதவி பண்ண வேண்டாம் இந்த காடு ஒரு மாதிரியான காடு என ஒரு போலீசார் தடுக்க, புதிதாக வந்த ஆனந்த் என்ன சார் பயமா? அங்க ஒரு போலீஸ்காரர் உயிருக்கு போராடுகிறார் வாங்க போய் காப்பாத்தலாம் என காட்டுக்குள் செல்கின்றனர்.
ஒரு துளி ரத்தம் மற்றும் அதிக சத்தம் (துப்பாக்கி சுடுதல்) கேட்டால் அந்த காடு திடீரென இருட்டாக மாறி பேய்கள் நடமாடும் இடமாக மாறி விடுகிறது. ஆனால், அதையும் தாண்டி அந்த காட்டுக்குள் இருக்கும் அமானுஷ்யம் என்ன? போலீஸாரை காப்பாற்ற சென்றவர்கள் அந்த போலீஸாரை காப்பாற்றினார்களா? அல்லது அவர்களும் அந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டார்களா? கிளைமேக்ஸில் வரும் ட்விஸ்ட் உள்ளிட்டவை தான் இந்த படத்தின் கதை.

ஓட்டுப்போட்டு வந்து பாருங்க: ஒரு காட்டை வைத்துக் கொண்டு அதன் நடுவே ஒரு காகத்தின் சிலையை வைத்துக் கொண்டு ஃபிளாஷ்பேக்கில் வரும் அனிமேஷன் கூட ரொம்பவே எளிமையான பட்ஜெட்டில் சுமாராக இருந்தாலும், அது சொல்லியிருக்கும் விஷயங்களும், மகன் அப்பாவை தேடுவதும், அக்கா என சிறுமியை வயது முதிர்ந்த போலீஸ் அதிகாரி தேடி ஓடுவதும் போன்ற காட்சிகள் தலையை சுற்ற வைத்துவிடும்.
பெரிய நடிகர்களின் படங்களில் பில்டப்புகள் மட்டுமே உள்ளன. நல்ல கதைகளையும் வித்தியாசமாக ரசிகர்களை சிந்திக்கவும் சிலாகிக்கவும் வைக்கும் படங்கள் ரொம்பவே குறைவாக வரும் நிலையில், மலையாளத்தில் இருந்து அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
படத்தை பற்றிய அதிக ஸ்பாய்லர்களை பண்ண விரும்பவில்லை. ஓட்டுப் போட்டுவிட்டு ஜாலியாக வீட்டுக்கு வந்து குடும்பத்துடன் உட்கார்ந்து இந்த படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் பார்த்து ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications