For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'சத்யா' - படம் எப்படி? #SathyaReview

  By Vignesh Selvaraj
  |

  Rating:
  3.0/5
  Star Cast: சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி
  Director: பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

  பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, சதிஷ், யோகிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'சத்யா'. தெலுங்கில் கடந்த வருடம் வெளியான 'க்‌ஷணம்' படத்தின் ரீமேக் தான் இந்த 'சத்யா.

  தெலுங்கில் வெற்றிபெற்ற 'க்‌ஷணம்' படத்தை தமிழில் அப்படியே எடுத்திருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அருண்மணி பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கௌதம் ரவிச்சந்திரன் எடிட்டராகப் பணியாற்றி இருக்கிறார். சைமன் கே கிங் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

  பத்து வருடங்களுக்கும் மேலாக பலவிதமான கேரக்டர்களில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகர் என்கிற இடத்துக்கு வரமுடியாமல் தவிக்கும் சிபிராஜுக்கு க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையான 'சத்யா உதவி செய்திருக்கிறதா..? வாங்க பார்க்கலாம்...

  சத்யா

  சத்யா

  ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஐ.டி.நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார் சிபிராஜ். அவருடன் யோகிபாபுவும் வேலை பார்க்கிறார். அதே நேரத்தில் சென்னையில், முகமூடிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கோமாவுக்குப் போகிறார் ரம்யா நம்பீசன். திடீரென சிபிராஜுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அழைத்தது முன்னாள் காதலியான ரம்யா நம்பீசன். பார்க்கவேண்டும் என அவர் கூறவே, யோசிக்காமல் ஃப்ளைட் பிடிக்கிறார் சிபி. சென்னைக்கு வந்தால், 'என் குழந்தையை யாரோ கடத்திட்டாங்க... நீதான் கண்டுபிடிச்சுத் தரணும். ஹெல்ப் பண்ணுவியா' எனக் கேட்டு கலவரப்படுத்துகிறார். அப்பாவுக்கு கேன்சர் வந்ததால் வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலி ரம்யாவுக்காக குழந்தையைக் கண்டுபிடித்துத் தர தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் சிபி.

  விறுவிறு திரைக்கதை

  விறுவிறு திரைக்கதை

  தேடுதலின் முதல் நிலையிலேயே திடுக்கிடும் திருப்பங்களைச் சந்திக்கிறார். ரம்யாவுக்கு குழந்தையே இல்லை என, கேட்பவர்கள் அனைவருமே சொல்கிறார்கள். இதில் ஏதோ சதி இருக்கிறது என எண்ணி, நாளிதழில் குழந்தையின் புகைப்படத்தோடு காணவில்லை அறிவிப்பு தருகிறார். ஆனால், இந்தக் குழந்தை தன்னுடையது என ஒருவர் ஆல்பம் முதல் பர்த் சர்டிஃபிகேட் வரையும் ஆதாரமாகக் காட்டுகிறார். தலையைப் பிய்த்துக்கொள்ளும் சிபி, உண்மையிலேயே குழந்தை இருந்ததா, அல்லது ரம்யா கோமாவில் இருந்து மீண்டதால் உளறுகிறாரா எனப் புரியாமல் கலங்குகிறார். சிபிராஜே நம்ப மறுத்ததால், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார் ரம்யா நம்பீசன்.

  சஸ்பென்ஸ் த்ரில்லர்

  சஸ்பென்ஸ் த்ரில்லர்

  பின், வீட்டுக்குள் இருக்கும் ஹைட் மார்க்ஸை வைத்து குழந்தை இருந்ததை யூகிக்கிறார் சிபி. ரம்யாவின் கணவனும், அவனது தம்பியும் இணைந்துதான் குழந்தையைக் கடத்தியிருக்கவேண்டும் என முடிவுக்கு வருகிறார். போலீஸும் அவர்களது திட்டத்திற்கு துணை போயிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறார். அவர்களைப் பிடிக்க ஒவ்வொருவராக ஃபாலோ பண்ணும்போதே வரிசையாக வந்து மொத்தக் கூட்டணியும் சிக்குகிறார்கள். குழந்தையை ரம்யா கணவரின் தம்பிதான் கடத்தினார் என்பது தெளிவான நிலையில், அவரும் கொல்லப்படுகிறார். இனி யாரை வைத்து குழந்தையைக் கண்டுபிடிப்பது என வரும்போது, ரம்யாவின் கணவர் மட்டுமே மிச்சம் இருக்கிறார். அப்பாவே ஏன் தனது குழந்தையைக் கொல்லத் துடிக்கிறார் எனும் காரணம் அதிர்ச்சி. பிறகுதான், குழந்தையைத் தேட தன்னை ஏன் ரம்யா அழைத்தார் என்பதற்கான விடையைக் கண்டுபிடிக்கிறார் சிபி. விறுவிறுப்பாக தொடர்ந்த படம், இறுதியில் நெகிழ்வாக முடிகிறது.

  வரலட்சுமி சரத்குமார்

  வரலட்சுமி சரத்குமார்

  சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ஐ.பி.எஸ் அனுயா பரத்வாஜாக வரலட்சுமி சரத்குமார் மிரட்டுகிறார். ஆனந்தராஜ் , ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ரோலுக்கு செம பொருத்தம். சிரிக்க வைக்கும் காமெடிகளை விடவும் அவரது மொக்கை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. பழைய பாணி காமெடி வசனங்களை சற்றே தவிர்த்திருக்கலாம். முதற்பகுதியில் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் யோகிபாபு கலகலக்க வைக்கிறார். விநோதினி வைத்யநாதன், நிழல்கள் ரவி ஆகியோர் சிச்சுவேஷன் ஆர்டிஸ்ட்களாக வந்துபோகிறார்கள். திரைக்கதையின் வேகத்தோடு ஓட நடிகர்கள் அத்தனை பேரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

  சதீஷ்

  சதீஷ்

  காமெடியன் சதீஷுக்கு இந்தப் படத்தில் சீரியஸ் வேடம். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அவர், பிறகு மனம் மாறி குழந்தையைக் கண்டுபிடிக்க முடிச்சுகளை அவிழ்த்து விடுகிறார். சிபிராஜுக்கு உதவி செய்வதற்காகவே நேர்ந்து விடப்பட்டவர் போல எல்லா உதவிகளையும் அவரே தேடி வந்து செய்கிறார் சதீஷ். விடை தெரியாமல் விறுவிறுப்பை ஏற்படுத்தும் திரைக்கதையில், சில சிக்கல்களை சதீஷ வைத்தே சுலபமாக அவிழ்ப்பது தொய்வு. அதையும், அடுத்தடுத்து உருவாகும் கேள்விகள் மீண்டும் நிமிர்ந்து ஓடச் செய்கின்றன என்பது பலம்.

  பரபர தேடல்

  பரபர தேடல்

  எதிர்பாராத திருப்பங்களால் தொடர்ந்து பரபரவென பயணிக்கிறது படம். ஒன்றுக்கு அடுத்து இன்னொன்று என அடுத்தடுத்து தேடல்களுக்கான கேள்விகள் அதிகரித்துகொண்டே போகின்றன. இறுதியாக அத்தனை கேள்விகளுக்குமான ஒற்றை விடையைக் கண்டுபிடித்தாரா சிபி, அந்த அதிர்ச்சியிலிருந்து சிபிராஜை விடுவிப்பது எது என்பதெல்லாம் கிளைமாக்ஸ். ஒரு கேள்வியை மட்டுமே நோக்கிப் பயணிக்காத நான்-லீனியர் கதையில், அடுத்தடுத்த திருப்பங்களின் மூலம் பார்வையாளர்களைக் குழப்பாமல், ஒவ்வொரு முடிச்சும் அவிழும்போது அடுத்த முடிச்சைக் காட்டுவது சுவாரஸ்யம்.

  யவ்வனா - ஃபீல் குட்

  மெதுவான காதல் காட்சிகள், பரபர தேடல் காட்சிகள் என ஒவ்வொன்றிற்கும் ஏற்ற விதத்தில் கேமராவோடு பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருண்மணி பழனி. சிக்கலாகத் தொடரும் திரைக்கதையைச் சிக்கல்கள் இல்லாமல் ஷார்ப்பாக செதுக்கித் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கௌதம் ரவிச்சந்திரன். பின்னணி இசையின் மூலம் கதையில் பரபரப்பு கூட்டுகிறார் இசையமைப்பாளர் சைமன் கே.கிங். 'யவ்வனா...' பாடல் காதல் தாளம். 'காதல் ப்ராஜெக்ட்' பாடல் கிடார் மெலடி.

  திருப்பங்கள்

  திருப்பங்கள்

  திருப்பங்கள் நிறைந்த இந்தப் படம் சிபிராஜுக்கு நல்ல திருப்பம். ஒவ்வொரு உண்மையும் வெளிவரும்போது சிபிராஜ் காட்டும் அமைதியான அதிர்ச்சி கதைக்குப் பொருத்தம். ஹீரோ ஆக்‌ஷன் காட்டி அதிரடிக்காமல், கதை ஓடும் வேகத்திற்கு கதாநாயகன் நகர்வது நல்ல முயற்சி. சில இடங்களில் குறைகள் இருந்தாலும் மொத்தப் படத்தையும் விறுவிறுப்பாகக் கொண்டுபோய் கிளைமாக்ஸ் வரை உட்கார வைத்ததில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர். 'சத்யா' நிச்சயம் போரடிக்காத பரபர பயணம்.

  English summary
  Read 'Sathya' movie review here. 'Sathya' lead by Sibi sathyaraj and Remya nambeesan directed by Pradeep Krishnamoorthy. 'Sathya' is remake of 'Kshanam' telugu movie. This film is in Suspense crime thriller genre.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X