»   »  சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sattam Oru Iruttarai - Review
Rating:
2.0/5
நடிகர்கள்: தமன், ரீமா சென், பிந்து மாதவி, பியா, எஸ்ஏ சந்திரசேகரன்
இசை: விஜய் ஆன்டனி
தயாரிப்பு: எஸ்ஏ சந்திரசேகரன் & விமலா ராணி
இயக்கம்: சினேகா பிரிட்டோ

பழைய படங்களை ரீமேக் பண்ணுவது தவறல்ல. ஆனால் அவை இன்றைய சூழலுக்குப் பொருந்துமா? இன்றைய ரசனை மாறுதல்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அவற்றை மாற்ற முடியுமா என்பதைப் புரிந்து ரீமேக் செய்வதுதான் புத்திசாலித்தனம்.

பழைய வெற்றிப் படங்களை இன்றும் நாம் ரசித்துப் பார்ப்பதற்குக் காரணம், "அட, பெரிய வசதி வாய்ப்பில்லாத அந்த காலத்திலேயே என்னமா எடுத்திருக்காங்க," என்று நம் மனதுக்குள் இருக்கும் ஒரு சின்ன பிரமிப்பு காரணமாகத்தான். அதைப் புரிந்து கொள்ளாமல், மீண்டும் அதே படத்தை அதே தரம் அல்லது அதற்கும் சற்று குறைந்த தரத்தில் தரும்போது ரொம்பவே அமெச்சூர்த்தனமாகிவிடுகிறது.

எண்பதுகளில் வெளியாகி இப்போது ரீமேக் வடிவில் ரிலீசாகியிருக்கும் சட்டம் ஒரு இருட்டறை படமும் இந்த ரகத்தில்தான் சேர்ந்திருக்கிறது.

தன் காதலியை கண்ணெதிரில் கொன்ற மூன்று பேரை ஆதாரமில்லாமல் கொன்று பழிதீர்க்கிறான் ஹீரோ. இத்தனைக்கும் ஹீரோவின் அக்கா ஒரு உயர் போலீஸ் அதிகாரி. அக்காவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இதை எப்படி செய்கிறான் ஹீரோ என்பதுதான் கதை.

இதற்கு நடுவில் ஏகப்பட்ட பாடல்கள், பார்ட்டிகள், சண்டைகள், காதல்கள் என்று திணித்திருக்கிறார்கள். எதுவும் ஒட்டவில்லை.

படத்தின் இயக்குநர் சினேகா பிரிட்டோ என்று டைட்டில் சொன்னாலும், காட்சிகள், அதை எடுத்திருக்கும் விதம் எல்லாமே இதில் எந்த அளவு எஸ் ஏ சியின் பங்கிருக்கிறது என்பதை பறை சாற்றிவிடுகிறது. நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் எத்தனை சரளமாக, பார்வையாளர்களை நெளிய வைக்காமல் காட்சிகள் நகரும்... அந்தப் படங்களைத் தந்த எஸ்ஏசியிடமிருந்தா இப்படி ஒரு படம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

படம் முழுக்க விஜய் புராணத்தை வேறு வலிந்து திணித்திருக்கிறார்கள். காதில் ரத்தம் வருகிறது. போதாக்குறைக்கு க்ளைமாக்ஸ் காட்சியையே எஸ்ஏசிக்கு என்று எழுதி வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

அந்த ஹாங்காங் காட்சிகள் பார்க்க ஓகே. ஆனால் அடிக்கடி பியாவும் ஹீரோ தமனும் மோதிக் கொள்வதும், ஒவ்வொரு முறையும் 'வாட் டூ யு திங் அபௌட் யுவர்செல்ப்' என்று பியா கேட்பதும், நத்திங் என்று தமன் சொல்வதும் செம கடி.

நிறைய லாஜிக் மிஸ்ஸிங், போலீஸ் துறையின் அடிப்படைக் கட்டமைப்பு பற்றிய குறைந்தபட்ச தகவல்களைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பார்கள் போல. இன்ஸ்பெக்டர் திடீரென்று ஏசியாவதும், திடீரென்று ஜெயிலராக மாறுவதும்... ஒரே காமெடி போங்க.

வெளிநாட்டில் வசதியாக செட்டிலாகிவிட்ட மகா வில்லன், இப்படியா தன் பிள்ளையோடு வந்து வம்படியாக அடிபட்டு சாவான்!

தமன் (ஏற்கெனவே ஆச்சர்யங்கள் படத்தில் நடித்தவர்) ஹீரோ. சொன்ன வேலையைச் சரியாகத்தான் செய்திருக்கிறார். ஆனால் இப்படியொரு ஆக்ஷன் வேடத்தில் அவரைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை (இதே படத்தில் விஜயகாந்த் நடித்த போது அவரும் புதுமுகம்தானே என்று நினைத்து எஸ்ஏசி இவரைப் போட்டாரோ என்னமோ!)

பியா, பிந்து மாதவி இருவரின் பாத்திரங்களைப் போலவே நடிப்பும் மகா செயற்கை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாருக்காவது தண்டனை தரவேண்டும் என போலீசார் விரும்பினால், நம்ம சாய்ஸ் காமெடி என்ற பெயரில் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்திய ஈரோடு மகேஷ் என்ற நபர்தான்!

நன்றிக் கடனுக்காக இசையமைத்திருப்பார் போலிருக்கிறது விஜய் ஆன்டனி. சொய்ங்.... டொய்ங்.... என்றெல்லாம் பாட்டுப் போட்டு தன் கோபத்தைக் காட்டியிருக்கிறார்.

எஸ்ஏ சந்திரசேகரன் போன்ற சீனியர்கள் ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து படமெடுக்க வேண்டும் என்று விரும்புவது நல்ல விஷயம்தான். ஆச்சர்யமானதும் கூட. ஆனால் அப்படி வரும் படங்கள் குறைந்தபட்சம் பார்க்க உத்தரவாதம் தரக்கூடியதாக இருந்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்!

சட்டத்தில் இருப்பது வெறும் ஓட்டை என்றால்... இந்த இருட்டறைக்குள் இருப்பது பெரும் ஓட்டை!

-எஸ்எஸ்

English summary
Sattam Oru Iruttarai is a big disappointing amateur movie from veteran S A Chandrasekaran camp.
Please Wait while comments are loading...