Sattamum Needhiyum review: சட்டமும் நீதியும் விமர்சனம்.. சித்தப்பு சரவணன் நடிப்பு எப்படி?.. வொர்த்தா?
சென்னை: தமிழில் தொடர்ந்து வெப்சீரிஸ்கள் நல்ல கதைகளுடன் வெளியாகி வருகின்றன. கடைசியாக புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் உருவான சுழல் 2 வெப்சீரிஸில் வில்லனாக நடித்து மிரட்டிய நம்ம சித்தப்பு சரவணன் லீடு ரோலில் நடித்துள்ள 'சட்டமும் நீதியும்' வெப்சீரிஸ் வரும் ஜூலை 18ம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தியில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் வெப்சீரிஸ்களில் நடித்து வரும் நிலையில், தமிழிலும் அவ்வப்போது திரைப்படங்கள் அளவுக்கு செலவு செய்து ஓடிடி வெப்சீரிஸ்களும் உருவாகி வருகின்றன. கோலமாவு கோகிலா, ஜெயிலர், ராயன் என தொடர்ந்து சினிமாவிலும் நடித்து கலக்கி வரும் சரவணன் 15 ஆண்டுகள் கழித்து ஹீரோவாக நடித்துள்ள வெப்சீரிஸ் நாளை வெளியாக உள்ளது.

சமீபத்தில், இதன் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில், தற்போது அந்த வெப்சீரிஸின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சட்டமும் நீதியும் கதை: சட்டத்தை விட நீதி தான் மிகவும் முக்கியமானது என்றும் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்கிற மிக முக்கியமான விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ளார். சாதாரண நோட்டரியாக நீதிமன்றத்துக்குள் செல்லாமல் வெளியே வரும் புகார்களை டைப் அடித்துக் கொண்டிருக்கும் சுந்தரமூர்த்தி (சரவணன்) அசிஸ்டன்ட்டாக அருணா (நம்ரிதா) வேலைக்குச் சேர முயல்கிறார். நானே கேஸ் இல்லாமல், வெளியே இருக்கிறேன். நீயேம்மா என்னிடம் சேரத் துடிக்கிற, ஒரு நல்ல வழக்கறிஞரிடம் அசிஸ்டன்ட்டாக சேர சிபாரிசு செய்கிறார். ஆனால், யாருமே அருணாவுக்கு வேலை கொடுக்கவில்லை.
நீதிமன்ற வளாகத்தில் குப்புசாமி என்பவர் தீக்குளித்து இறக்க, அவருக்கு நீதியை தேடித் தரவேண்டும் என முடிவு செய்யும் சுந்தரமூர்த்தி பொதுநல வழக்கு போடுகிறார். தனது மகளை காணவில்லை என குப்புசாமி போலீஸாரிடம் முறையிட அவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல், அவரை விரட்டி அடிக்கின்றனர். அதன் காரணமாகவே குப்புசாமி தீக்குளித்தார் என்று வழக்கை சுந்தரமூர்த்தி ஆரம்பிக்க, இறந்து போன குப்புசாமி 20 ஆண்டுகளாக மன வளர்ச்சி காப்பகத்தில் இருந்தார் என்றும் அவரது மகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனதாக ஒவ்வொரு எபிசோடிலும் கதையில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் வர கடைசியாக இந்த வழக்கு என்ன ஆனது? சுந்தரமூர்த்தி பல வருடங்களுக்குப் பிறகு எடுத்த கேஸில் ஜெயித்தாரா? இல்லையா? குப்புசாமியின் மகள் வெண்ணிலாவுக்கு என்ன நடந்தது என்பது தான் இந்த 'சட்டமும் நீதியும்' வெப்சீரிஸின் கதை.

பார்க்கலாமா? வேண்டாமா?: பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தை தமிழில் அஜித் குமார் நேர்கொண்ட பார்வை என ரீமேக் செய்து நடித்திருந்தார். அந்த படத்தில் சொல்லப்பட்டதை போல ஒரு சிக்கலான கதையாகவே இந்த சட்டமும் நீதியும் கதையும் உருவாகி இருக்கிறது. கதையாக கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சிறப்பாகவே உள்ளது.
வழக்கறிஞராக நடித்துள்ள சரவணன் நடிப்பில் குறையேதும் இல்லை. அவருக்கு அசிஸ்டன்ட் ஆக நடித்துள்ள நம்ரிதாவின் நடிப்பும் ஓகே ரகம் தான். அரசு தரப்பு வழக்கறிஞராக ஆரோல் தாஸ் நடித்துள்ளார். குப்புசாமியாக சண்முகம் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார். பரீட்சையமான முகங்கள் இல்லாமல், ஏகப்பட்ட புது முகங்கள் நடித்துள்ள நிலையில், பல இடங்களில் நடிப்பு பற்றாக்குறை தெரிகிறது. சரவணன் மட்டுமே கடைசி வரை வெப்சீரிஸை பார்க்க வைக்கிறார். 20 முதல் 25 நிமிடங்களில் ஒரு எபிசோடு முடிவடைவதே மிகப்பெரிய ஆறுதல் தான். 7 எபிசோடுகளையும் அதிகபட்சம் 2.45 மணி நேரத்துக்குள் பார்த்து விடலாம். இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களுக்குச் செல்ல நேரமில்லை என்றால் சட்டமும் நீதியும் வெப்சீரிஸை தாராளமாக ஒருமுறை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











