twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சவரக்கத்தி' - படம் எப்படி? #SavarakathiReview

    By Vignesh Selvaraj
    |

    Rating:
    3.5/5
    Star Cast: மிஷ்கின், ராம், பூர்ணா
    Director: ஜி.ஆர்.ஆதித்யா

    மிஷ்கினின் கதை, திரைக்கதையில், மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அவரது தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'சவரக்கத்தி'.

    இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் எமோஷனல் காமெடி படமாக உருவாகியிருக்கிறது. 'சவரக்கத்தி' படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார்.

    கார்த்திக் வெங்கட்ராமன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் குமார் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார். லோன் வுல்ஃப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக மிஷ்கின் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

    சவரக்கத்தி

    சவரக்கத்தி

    வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல இல்லாதிருப்பதே இயக்குநர் மிஷ்கினின் தனித்துவம். மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி இருக்கும் 'சவரக்கத்தி' திரைப்படத்தை அவரது உதவியாளரும் தம்பியுமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். மிஷ்கினின் தனித்துவமிக்க கதையமைப்பை ரசிப்பதற்காகவே இந்தப் படத்தை பலர் எதிர்பார்த்தனர். அந்த வகையில், படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பூட்டும் விதமாக இருந்தது நட்சத்திரத் தேர்வு. இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம், நடிகை பூர்ணா ஆகியோர் முறையே மங்கா, பிச்சை மூர்த்தி, சுபத்ரா ஆகிய முன்னணி ரோல்களில் நடித்திருக்கின்றனர். இவர்கள் தீட்டிய சவரக்கத்தி ஷார்ப்பாக வந்திருக்கிறதா... மொன்னையாகியிருக்கிறதா? வாங்க பார்க்கலாம்.

    கதை

    கதை

    பார்பராக இருக்கும் பிச்சைமூர்த்தி (ராம்) தனது மனைவி சுபத்ரா (பூர்ணா) மற்றும் இரண்டு பிள்ளைகளோடு வண்டியில் போகும்போது எதிர்பாராவிதமாக தாதா மங்காவை (மிஷ்கின்) சந்திக்கிறார். மங்கா சிலபல குற்றங்கள் புரிந்து பரோலில் வெளியே வந்திருக்கும் குற்றவாளி. அன்று மாலை ஆறு மணிக்கு மீண்டும் ஜெயிலுக்கு செல்லவேண்டும். இதற்கிடையே, ஒரு பிரச்னையால் பார்பர் பிச்சை மூர்த்திக்கும் தாதா மங்காவுக்கும் இடையே தகராறாகிறது. தனது மனைவியின் தம்பியின் திருமணத்திற்காக செல்லும் பிச்சை மூர்த்தியை மங்கா தனது ஆட்களுடன் துரத்துகிறான். இன்னொரு பக்கம் பிச்சை மூர்த்தியின் மைத்துனர் தனது மகளுடன் திருட்டுத் திருமணம் செய்யவிருப்பதாக ஒரு தாதா துரத்துகிறார்.

    மெசேஜ்

    மெசேஜ்

    இருவரின் துரத்தல்களுக்குள் மாறி மாறிச் சிக்கிக்கொண்டும், தப்பித்தும் பிச்சை மூர்த்தி விளையாடும் டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டமே 'சவரக்கத்தி'. எளிமையான கதையை வெகு எளிதான இயல்புகளுடன் படமாக்கியிருக்கிறார்கள். கமர்சியல் படமென மாயாஜாலம் செய்யாமல் யதார்த்த மனிதர்களுக்கிடையேயான மோதலையும், அது தீரும் கணத்தையும் நெகிழ்ச்சியூட்டும் விதமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். 'வாய் வார்த்தைகள் சில நேரங்களில் வாள் கத்திச் சண்டை போலாகிவிடும்' என்ற மெசேஜும் சொல்கிறது படம். "கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்" என வெகு எளிமையாக, அதே நேரத்தில் அதி அழுத்தமாக அன்பையும் மனிதத்தையும் உணர வைக்கிறது இந்த 'சவரக்கத்தி'.

    ராம்

    ராம்

    வாயைத் திறந்தாலே பொய் பேசும் மனிதராக, பார்பர் கடை வைத்திருக்கும் கேரக்டருக்கு ராம் அத்தனை பொருத்தம். தொளதொள சட்டை, அழுக்கு பேன்ட், பெரிய கண்ணாடி, பல நாள் தாடி என பிச்சை மூர்த்தி கதாபாத்திரத்துக்கு அப்படியே ஃபிக்ஸ் ஆகியிருக்கிறார் டைரக்டர் ராம். காது கேளாத நிறைமாதக் கர்ப்பிணி மனைவியாக பூர்ணா. அப்பாவியாக பேசி மாட்டிக்கொள்வது, கணவனைத் திட்டிக் குவிப்பது, காது கேட்காமல் போனை குற்றம் சொல்வது போன்ற காட்சிகளில் யதார்த்த நடிப்பு. சுபத்ரா எனும் அந்தக் கேரக்டருக்கு வேறு எந்த நடிகையும் இத்தனை பொருத்தமாக இருந்திருப்பாரா என்றால் சந்தேகமே.

    மிஷ்கின்

    மிஷ்கின்

    பரோலில் வெளிவந்திருக்கும் தாதா மங்காவாக இயக்குநர் மிஷ்கின். தன்னைச் சீண்டியவனை வெறிகொண்டு தேடித் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் அலைகிற காட்சிகளில் அசத்துகிறார். வழக்கமான மிஷ்கினின் வெறித்தன ரியாக்‌ஷன்ஸ் இப்படத்திலும் தொடர்கிறது. பெரிய கண்கள், முரட்டு உடம்பு, லவுட் ஸ்பீக்கர் பேச்சு என கூட இருப்பவர்களையே நடுங்க வைக்கும் ரௌடியாக மிரட்டியிருக்கிறார். பிச்சை மூர்த்தியை தேடி ஓடுவது, தப்பித்ததும் வீறிட்டுக் கத்துவது, அடியாட்களை போட்டு மொத்துவது என எதையும் யோசிக்காமல் செய்யும் வில்லனுக்கான மேனரிசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். பூர்ணா வயிற்று வலியால் துடிக்கும் காட்சியில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லி கோபமாகப் பேச, 'நீ ரொம்ப பேசிட்ட... கூட்டிட்டு போ' என சிம்பிளாக சொல்லும் இடம் என சிற்சில காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

     நடிப்பு

    நடிப்பு

    பிச்சை மூர்த்தியின் பார்பர் ஷாப்பில் வேலை பார்க்கும் கொடுக்கு கேரக்டரில் நடித்தவர், மங்காவின் அடியாட்கள், காதல் ஜோடிகளாக நடித்திருப்பவர்கள், அவர்களது பெற்றோர் என எல்லோரும் மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மிஷ்கின் - ராம் துரத்தல்களுக்கு இடையே, நிறைமாதக் கர்ப்பிணி பூர்ணா மற்றும் குழந்தைகளின் சென்டிமென்ட் பகுதிகள், கர்ப்பிணிப் பெண்ணை இயல்பாகவே சாஃப்ட் கார்னருடன் பார்க்கும் மனிதர்கள், நெகிழவைக்கும் காதல் ஜோடி, காதலுக்கு பிரச்னை என்றவுடன் ஜோடி மாறி நிற்கும் காதலர்கள் என உருக வைக்கிறது இன்னொரு பக்கம். இதற்கு மத்தியில் தனி ட்ராக் இல்லாமல் சீரியஸான காட்சிகளிலேயே மெல்லிய நகைச்சுவையும் தூவியிருக்கிறார்கள். சில இடங்கள் தவிர்த்து பெரும்பாலும் ஓகே.

     மிஷ்கின் கதை

    மிஷ்கின் கதை

    மிஷ்கினின் கதைகள் கற்சிலைகளுக்கிடையே முளைக்கிற நம்பிக்கை துளிர்க்கச் செய்யும் சிறுசெடிகள் போலானவை. வெறித்தனம் பொங்கும் அவரின் கதைகளூடே மெல்லிய பிணைப்பாக அன்பு சூழ்ந்திருக்கும். இதிலும் அப்படித்தான். குற்றவாளியாக இருந்தாலும் தனக்கென ஒரு நியாயம் வைத்துக்கொள்கிறவனாகத்தான் இருக்கிறான் மங்கா. கொலை செய்யச் செல்கையில் ஒரு மீன் கடையில் காசை அள்ளிப் போட்டுவிட்டு கத்தியை எடுத்துச் செல்கிறான். துரத்தலுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிற பொழுதில் வாய் பேச, கேட்க முடியாத டீ மாஸ்டரின் தன்னம்பிக்கை ஊட்டுகிற செயலுக்காக கையில் இருக்கும் அத்தனை காசையும் அள்ளிக் கொடுத்துவிட்டுச் செல்கிறான் பார்பர் பிச்சை. அதே காசுக்காகத்தான் அதற்குச் சற்றுமுன்பு வரை அத்தனை போராடியிருப்பான். இவர்கள் இருவருக்கும் தெரியும் அந்தச் சொற்பக் காசுகள் அவற்றிற்கு விலையாகி விடாதென்று. இதுதான் மிஷ்கின் டச்.

     பின்னணி இசை

    பின்னணி இசை

    அரோல் கொரேலியின் பின்னணி இசை கதைக்கு உயிர் சேர்த்திருக்கிறது. படத்தின் இரண்டு பாடல்களும் சிறப்பாக வந்திருக்கின்றன. கதையின் அடிநாதம் சொல்லும் 'தங்கக்கத்தி' பாடல் வெகுவாக ஈர்த்திருக்கிறது. துரத்தல் காட்சிகளை கேமரா கண்களால் விடாமல் துரத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன். ஒரே பகுதியில் சுற்றிச் சுற்றித் துரத்தித் திரிவது ஒரு கட்டத்தில் எப்போ முடியும் எனக் கொஞ்சம் அயர்ச்சியூட்டுகிறது. அவற்றை சுவாரஸ்யமான காட்சிகளாக மாற்றி இருக்கலாம் அல்லது சவரக்கத்தியால் கீறித் தூக்கியிருக்கலாம். அதையும் கடந்தால் அழகான மெசேஜ் சொல்லி முடிகிறது படம். 'சவரக்கத்தி' நிஜமாகவே தங்கக்கத்தி தான்! எழுத்தாளராக மிஷ்கின் முத்திரை பதித்துவிட்டார்.

    English summary
    Ram, Mysskin and poorna starred 'Savarakathi' is an emotional comedy drama film. This film was directed by Mysskin's brother G.R.Adhithya. Read Savarakathi Review here..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X