Shaitaan Review: ஜோதிகாவின் ”ஷைத்தான்” படத்துக்கு குவியும் விமர்சனம்.. சூர்யா ரியாக்ஷன்!
மும்பை: பாலிவுட் இயக்குநர் விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா நடித்துள்ள ”ஷைத்தான்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரிலீஸாக வெளியாகி இருக்கிறது. இந்தி மொழியில் மட்டுமே இந்த படம் வெளியானாலும் படத்தின் ஹாரர் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு நடைபெற்ற ஸ்பெஷல் ப்ரீமியர் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகாவுடன் பங்கேற்றார். மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் விழாவில் சூர்யா மற்றும் அவரது குழந்தைகள் கலந்து கொண்டனர். ”ஷைத்தான்” படத்தின் ரிலீஸ் புரமோஷன் வேலைகளில் இருந்த ஜோதிகா கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், ஜோதிகா நடித்து பல ஆண்டுகள் கழித்து இந்தியில் வெளியாகி உள்ள ஷைத்தான் படத்தை சூர்யா மனைவியுடன் பார்த்து ரசித்தார். இன்று காலையிலேயே தியேட்டர்களில் வெளியான ஷைத்தான் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ஷைத்தான் விமர்சனம்: பாலிவுட்டின் பிரபல விமர்சகரான தரன் ஆதர்ஷ் ”ஷைத்தான்” படத்தை பார்த்து விட்டு ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வின்னர் என விமர்சனம் கொடுத்துள்ளார். மேலும், தனது விமர்சனத்தில், அந்த படத்துக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். மகளை மாந்திரீகம் செய்து கட்டிப் போடும் நபராக வீட்டுக்குள் மாதவன் நுழைகிறார். எதுவுமே செய்ய முடியாத அப்பாவாக அஜய் தேவ்கன் இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். பல ஆண்டுகள் கழித்து பாலிவுட்டுக்கு வந்துள்ள ஜோதிகா தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றனர். படத்தில் கஷ்டமான வேலையே மகளாக நடித்த அந்த இளம் நடிகை ஜான்கி போதிவாலா மிரட்டி விட்டார் என தரன் ஆதர்ஷ் தனது நீண்ட நெடிய ட்விட்டர் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
சூர்யா ரியாக்ஷன்: மலையாளத்தில் ஜோதிகா நடித்த ”காதல் தி கோர்” படமும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றது. தற்போது பாலிவுட்டில் ஜோதிகா நடித்துள்ள ”ஷைத்தான்” படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், நடிகர் சூர்யா தரன் ஆதர்ஷின் தரமான விமர்சனத்துக்கு ஹார்ட்டின் போட்டுள்ளார்.
பிளாக்பஸ்டர்: அஜய் தேவ்கன் மறுபடியும் ”திரிஷ்யம்” மோடுக்கு சென்று இருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. 4 முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இயக்குநர் விக்ரம் பால் நடத்திய சித்து விளையாட்டு தியேட்டரில் ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது. இந்த படம் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் தான் என நிஷித் ஷா எனும் பாலிவுட் விமர்சகரும் விமர்சித்துள்ளார்.
ஒரு மிஸ்டேக் கூட இல்லை: சமீப காலமாக ரசிகர்கள் படத்தில் என்ன குறை இருக்கிறது என கண்டுபிடிக்கும் விமர்சகர்களின் மன நிலையிலேயே படங்களை அணுகி வருகின்றனர். இந்த ரசிகர் படத்தில் எங்கேயாவது குறை இருக்குமா என தேடி தேடி பார்த்தாலும், ஒரு குறை கூட இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், பான் இந்தியா ரிலீஸாக வெளியாகாத நிலையில், இந்த படம் 200 கோடி வசூலை தாண்டுவது கடினம் தான் எனக் கூறியுள்ளார். ஷைத்தான் படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











