twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவலிங்கா - சந்திரமுகி பார்ட் 6!

    By Shankar
    |

    சந்திரமுகி படத்துல ரஜினி ஜோதிகாவப் பத்தி ஒரு வசனம் சொல்லுவாரு. 'கங்கா சந்திரமுகி அறைக்குப் போனா.. கங்கா சந்திரமுகியா நின்னா.. கங்கா சந்திரமுகியா நடந்தா.. கங்கா சந்திரமுகியாவே தன்னை நினைச்சிக்கிட்டா'ன்னு. இந்த வசனம் ஜோதிகாவுக்கு பொருந்துச்சோ இல்லையோ... நம்ம பி.வாசு சாருக்குத்தான் கரெக்டா பொருந்துது. மனுசன் சந்திரமுகியாவே மாறிட்டாரு போல.. அத விட்டு வெளில வரவே மாட்டேங்குறாரு. கடந்த 12 வருசத்துல கிட்டதட்ட நாலு சந்திரமுகி எடுத்துருக்காரு!

    முதல்ல மலையாள மணிச்சித்ரதாள கன்னடத்துல விஷ்ணுவர்தன வச்சி ஆப்தமித்ரான்னு எடுத்தாரு. அது ஹிட்டான உடனே அத சந்திரமுகின்னு ரஜினிய வச்சி தமிழ் & தெலுகுல எடுத்து மெகா ஹிட்டாக்குனாரு. திரும்ப கன்னடத்துக்கே போயி ஆப்தமித்ராவோட சீக்குவல் ஆப்தரக்‌ஷகாவ எடுத்தாரு. விஷ்ணுவர்தனோட கடைசிப் படம்ங்குறதாலா படம் பிச்சிக்கிட்டு ஓடுச்சி. அதே படத்த தமிழ்ல சந்திரமுகி-2ன்னு எடுக்க ரஜினிய அப்ரோச் பன்னி அது முடியாமப் போக, அதே கதைய தெலுகுல 'நாகவல்லி'ங்குற பேர்ல வெங்கடேஷ், அனுஷ்காவ வச்சி எடுத்தாரு. அதாவது வெங்கடேஷ் அந்தப் படத்துல சந்திரமுகி சரவணனோட சிஷ்யானா வந்துருப்பாரு. சீக்குவல்னவுடே என்னென்னவோ நினைச்சிடாதீங்க. ஹீரோ ஹீரோயின மட்டும் மாத்திட்டு அதே கதைய அப்டியே திரும்ப எடுத்துருப்பாரு.

    Sivalinga - Audience review

    ஆக மொத்தம் பி வாசு கணக்குல நாலு சந்திரமுகி. இது இல்லாம அரண்மனைங்குற பேர்ல சுந்தர்.சி வேற ரெண்டு தடவ சந்திரமுகிய எடுத்துருக்காரு. அது வேற கணக்கு விடுங்க. இந்தப் பக்கம் நம்ம ராகவா லாரண்ஸ்.. கடந்த பத்து வருஷத்துல அவர் முனி மட்டும்தான் எடுத்துருக்காரு. அடுத்த பத்து வருஷத்துலயும் முனி மட்டும்தான் எடுப்பாரு போல. ஏன்னா இன்னும் முனி-4, முனி-5ன்னு நிறைய வரவேண்டியிருக்கு.

    இப்ப இந்த பி.வாசு, ராகவா லாரன்ஸ் ங்குற ரெண்டு வெவ்வேறு மந்தையில் இருந்த ஆடுகள் ஒண்ணா சந்திச்ச போது ஏற்பட்ட அசம்பாவிதம்தான் இந்த சிவலிங்கா. படம் முழுக்க சந்திரமுகியும், முனியும்தான் மாத்தி மாத்தி ஓடுது. க்ளைமாக்ஸ்ல பி.வாசு இயக்கத்துல கவுண்டரும் சத்யராஜூம் இணைந்து நடிச்சி மெகா ஹிட்டான மலபார் போலீஸ் படத்தோட க்ளைமாக்ஸ் சீன அப்டியே எடுத்து சேத்துக்கிட்டுருக்காங்க. அவ்ளோதான். ஏற்கனவே பி.வாசுக்கு நாலு சந்திரமுகி. இப்ப சிவலிங்கா ஒண்ணு அஞ்சி. சிவலிங்காவே கன்னட சிவலிங்கா படத்தோட ரீமேக்தான். ஆக மொத்தம் ஆறு... ச்சியேர்ஸ்!

    படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் நம்ம வடிவேலு. ரொம்ப நாளுக்கு அப்புறம் அவரோட காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கு. நமக்கெல்லாம் புடிச்ச பழைய வடிவேலுவா செமையா சிரிக்க வச்சிருக்காரு. ஒரு நாலஞ்சி சீன்தான் வர்றாரு. ஆனா வந்த சீனெல்லாம் செம காமெடி. எப்புடி திருடுனேன்னு ஊர்வசிக்கிட்ட சொல்லிக்காட்டுற சீன் தாறு மாறு.

    அடுத்து ராகவா லாரன்ஸ்.. ஆளு சூப்பரா இருக்காரு. நல்லா டான்ஸ் ஆடுறாரு. ஆனா என்ன ரொம்ப அதிகப் பிரசங்கித்தனம் பன்றாரு. முனி-1 ல பேயப் பாத்து பயப்படுவேன்னு ஆரம்பிச்சி இன்னும் அதே ரம்பத்தப் போட்டுக்கிட்டு இருக்காரு. எப்ப நிறுத்தப்போறாருன்னு தெரியல.

    போன படத்துல 'மக்கள் சூப்பர் ஸ்டார்'ன்னு போட்டு எல்லார்கிட்டயும் நல்லா வலுவா வாங்கிக் கட்டிக்கிட்டாரு. இதுல என்னன்னு பாத்தா அவரு பேரு சிவ லிங்கேஸ்வரன்... அதுலயும் படத்துல அடிக்கடி 'இந்த லிங்கா... சிவலிங்கேஸ்வரன் இத செய்யாம விடமாட்டன்.... லிங்கா இத கண்டுபிடிக்காம விடமாட்டான்'ன்றாராப்ள.. இன்னும் உச்சக்கட்டம் இண்ட்ரோ சாங்கு. இவரு சின்னக் கபாலியாம்... பல பேரு ரஜினி பேர சொல்லாம சூப்பர் ஸ்டாருன்னு போட்டுக்குறாங்க... இவரு ரஜினி படத்த ஸ்க்ரீன்ல காமிச்சிட்டு நாந்தான் அடுத்த ரஜினின்னு சொல்லிக்கிறாரு. மத்தபடி அவய்ங்களுக்கும் இவருக்கும் எந்த வித்யாசமும் இல்லை.

    பி.வாசுவோட மகன் சக்தி ஒரு ரோல் பண்ணிருக்காரு. அந்த ரோலுக்கு கரெக்ட்டா மேட்ச் ஆயிருக்காரு. நல்லா நடிக்கவும் செஞ்சிருக்காரு. தமன் பாட்டெல்லாம் கேக்குற மாதிரிதான் போட்டுருக்காரு. பின்ணனி இசைதான் கொஞ்சம் இறைச்சல்.

    Sivalinga - Audience review

    மைனஸ் அப்டின்னு சொல்லனும்னா எக்கச்சக்கமா சொல்லலாம். மொதல்ல ஏற்கனவே பலதடவ பாத்து பழக்கப்பட்ட அதே கதை திரைக்கதை. இந்தப் படத்த ஒரு பேய் படமா இல்லாம ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் டைப் படமா எடுத்துருந்தா மலபார் போலீஸ் மாதிரி நல்ல படமா வந்திருக்க வாய்ப்பு இருந்துருக்கும்.

    அடுத்து ரித்திகா சிங்...சந்திரமுகில ஜோதிகா பண்ண ரோல பன்னிருக்காங்க. அந்தப் புள்ளைக்கு நடிக்கவும் வரல.. அந்த ரோலுக்கு செட்டும் ஆகல.. மேக்கப்பும் சரியில்லை... ஸ்க்ரீன்ல வந்து எதோ பண்ணிட்டு இருக்கு. ஊர்வசியும் அதே தான்!

    இன்னொரு கொடுமையான விஷயம் மேக்கப். சமீப காலத்துல இவ்வளவு மோசமான மேக்கப்ப படங்கள்ல பாத்த்தே இல்லை. கரகாட்டம் ஆடுறப்போ மூஞ்சி ஃபுல்லா ரோஸ் பவுட நல்லா அள்ளி அப்பி, அடிக்கிற கலர்ல ஒரு லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு இருப்பாங்களே... அதே மாதிரிதான் இருக்கு இதுல ரித்திகா சிங், ஊர்வசி.. பனுப்பிரியா எல்லாரோட முகங்களும்.

    மொத்ததுல ஒருதடவ போய்ப் பாக்கலாம்.. குறிப்பா வடிவேலு காமெடிக்காக!

    - முத்துசிவா

    English summary
    Audience review of Raghava Lawrence's P Vasu Directed Sivalinga
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X