Sorgavaasal Review: சொர்க்கவாசல் விமர்சனம்.. விருமாண்டி, வடசென்னை ரேஞ்சுக்கு வொர்த்தான ஜெயில் படமா?
நடிகர்கள்: ஆர்ஜே பாலாஜி, சானியா ஐயப்பன், செல்வராகவன்
இசை: கிறிஸ்டோ சேவியர்
இயக்கம்: சித்தார்த் விஸ்வநாத்
சென்னை: கலகலப்பான காமெடியனாக நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ரன் பேபி ரன் படத்திலேயே சற்று வித்தியாசமான முயற்சியை எடுத்திருந்தார். அவருடைய அடுத்த வித்தியாசமான முயற்சியாக இந்த சொர்க்கவாசல் படம் அமைந்துள்ளது. அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் 1999ம் ஆண்டு மத்திய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து புனைவு கதையாக இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி மட்டுமே இந்த படத்தின் கதாநாயகன் என சொல்லிவிட முடியாத அளவுக்கு மற்ற கதாபாத்திரங்களுக்கும் தேவையான முக்கியத்துவத்தை இயக்குநர் கொடுத்திருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். செல்வராகவன், கருணாஸ், நட்டி நட்ராஜ், பாலாஜி சக்திவேல், ரவி ராகவேந்திரா, ஷராஃப் யுதின், ஹக்கிம் ஷா மற்றும் சாமுவேல் ராபின்சன் என அனைவரும் படத்திற்கு பக்க பலமாக நடித்துள்ளனர்.

சொர்க்கவாசல் படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு முதல் பாதி கவராதது தான் ரசிகர்களை சற்றே சோதிக்கிறது. படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் உள்ளிட்ட முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
சொர்க்கவாசல் கதை: தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல சிறைச்சாலை படங்களை பார்த்திருக்கிறோம். விருமாண்டி, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை சிறைக்குள் சிறை பிடித்து திகிலூட்டியிருந்தது. இந்த ஆண்டு பொங்கலுக்கு அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படமும் சிறைச்சாலை படம் தான். அந்த வரிசையில் ஆண்டு இறுதியில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள சிறைச்சாலை படமாக ரொம்ப ராவாக சொர்க்கவாசல் படம் வெளியாகி இருக்கிறது. 1999ம் ஆண்டு சென்னை மத்தியச் சிறையில் நடைபெற்ற கலவரத்தில் துணை ஜெயிலரை எரித்தே கொன்று விட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற விசாரணை தான் இந்த படத்தின் கதை. துணை ஜெயிலரை எரித்துக் கொன்றது யார்? அங்கே நடைபெற்ற கலவரத்துக்கு யார் முக்கிய காரணம் என்பதை செம சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட்டுடன் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.

படம் எப்படி இருக்கு?: தள்ளுவண்டி கடை நடத்தி வந்த பார்த்தி (ஆர்ஜே பாலாஜி) செய்யாத கொலை குற்றத்திற்காக சிறைக்குச் செல்ல அங்கே அதைவிட ஏகப்பட்ட கொடுமைகள் அரங்கேறுவதை பார்த்து அதிர்ந்து போகிறார். வட சென்னையையே சிறைக்குள் இருந்துக் கொண்டே ஆளும் தாதாவாக சிகா கதாபாத்திரத்டில் செல்வராகவன் நடித்துள்ளார். விசாரணை கமிஷனராக நட்டி நட்ராஜ் சிறை காவலராக கருணாஸ் என ஒவ்வொருவரும் நடிப்பில் மிரட்டுகின்றனர்.
படத்தின் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் இடங்கள் தான் ரசிகர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்துகிறது. அதற்காக முதல் பாதியை கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு பார்க்கும் அளவுக்கு சுமாரான மேக்கிங்காக உருவாக்கியது தான் ஏன் என தெரியவில்லை. ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் நல்லா நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், இன்னமும் பயிற்சி தேவை என்று தான் சொல்லத் தூண்டுகிறது.

பிளஸ்: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிராக இருந்த பழைய மத்திய சிறைச்சாலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதற்கே கலை இயக்குநர் ஜெயச்சந்திரனுக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். அறிமுக ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சனின் கலர் டோன் செலக்ஷன் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் அப்ளாஸ் அள்ளுகிறது. செல்வராகவன், கருணாஸ் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. ஒட்டுமொத்தமாக படத்தை முடித்துவிட்டு போகும் போது நல்ல படமாகவே தெரிவது ரசிகர்களை நிச்சயம் நிம்மதியில் ஆழ்த்துகிறது.

மைனஸ்: முதல் பாதியை இன்னமும் கூடுதல் கவனத்துடன் திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்தி இயக்குநர் சித்தார்த் செதுக்கியிருந்தால் படம் வொர்த் வர்மா என்றே சொல்லத் தூண்டியிருக்கும். ஆனாலும், யங் டீம் ஆர்ஜே பாலாஜியை வைத்துக் கொண்டு இப்படியொரு புது முயற்சியை எடுத்து அதை முடிந்தவரை சரியாக செய்துள்ளனர் என்பதற்காக பாராட்டலாம்.


Click it and Unblock the Notifications