Sumo Review: சுமோ விமர்சனம்.. சுமாரா கூட இல்லையே.. மீண்டும் சொதப்பிய அகில உலக சூப்பர் ஸ்டார்!
சென்னை: பட்டணத்தில் பூதம் போல இப்படியொரு கதையை வைத்துக் கொண்டு திரைக்கதையிலும் காமெடி காட்சிகளிலும் விளையாடி இருந்தாலே வடிவேலுவின் கேங்கர்ஸ் படத்துக்கு செம டஃப் கொடுத்திருக்க முடியும். ஆனால், இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின் சிவா சொன்னதை போல இவரை வைத்து அவதார் படமா எடுக்க முடியும் என சும்மா ஒரு படத்தை எடுத்து அதற்கு சுமோ என டைட்டில் வைத்துள்ளார்.
நடிகை பிரியா ஆனந்த் நடித்த படங்கள் பல வருட தாமதத்திற்கு பிறகு ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. கடந்த வருடம் பிரசாந்த் உடன் இணைந்து அவர் சில வருடங்களுக்கு முன்பாகவே நடித்த அந்தகன் படம் வெளியானது. ஆனால், அந்த படம் அவருக்கு ஓரளவுக்கு வெற்றிப் படமாகவே அமைந்தது. இந்தமுறை அவருக்கு மீண்டும் சொதப்பல் தான்.

சிவாவுடன் ஏற்கனவே அவர் வணக்கம் சென்னை படத்தில் நடித்த நிலையில், அதே மேஜிக் மீண்டும் ஒர்க்கவுட் ஆகும் என நம்பி இயக்குநர் பிரியா ஆனந்தை புக் பண்ணியிருக்கலாம். அவர் தனது பங்குக்கு முடிந்தளவுக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த முறை கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை.
சுமோ கதை: ரெஸ்டரன்ட் ஒன்றை நடத்தி வருகிறார் விடிவி கணேஷ். அவரது ரெஸ்டரன்ட்டில் வேலை பார்த்துக் கொண்டே சர்பிங்கிலும் ஆர்வம் காட்டி வரும் படத்தின் ஹீரோ சிவா, பிரியா ஆனந்தை காதலித்து வருகிறர். ஒரு நாள் கடலில் அடித்துக் கொண்டு வந்து கரையோரம் ஒரு ராட்சத உருவம் ஒதுங்க அதை பார்க்கும் சிவாவுக்கு ஷாக் ஆகிறது. அந்த உருவத்துக்கு உயிர் இருப்பதை அறிந்து முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். அவர் ஒரு சுமோ வீரர் என்பதை தெரிந்துக் கொள்ளும் சிவா அவரை மீண்டும் ஜப்பானுக்கு அனுப்ப போராடுவதும், கடைசியாக நடக்கும் சுமோ போட்டியில் யோஷினோரி தஷிரோ (Yoshinori Tashiro) வென்றாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: கதையாக கேட்கும் போது இதுவே போதும் ஒரு நல்ல காமெடியான கடைசியில் எமோஷனல் டச் உடன் குழந்தைகளை கவரக்கூடிய சம்மர் லீவுக்கு ஏற்ற படமாக கொடுத்து விடலாம். ஆனால், இயக்குநர் இயக்கத்தில் பெரிய அனுபவம் இல்லாத நிலையில், பல இடங்களில் சொதப்பி வைத்திருக்கிறார். அதன் காரணமாகவே படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை. எந்தவொரு கதாபாத்திரத்தையும் வலுவாகவோ சுவாரஸ்யமாகவோ சித்தரிக்கவில்லை.
கடைசியாக சிவா நடிப்பில் வெளியான சூது கவ்வும் 2 திரைப்படம் அதன் முதல் பாகத்தை எந்தளவுக்கு மொக்கை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பிய நிலையில், அதே வரிசையில் இந்த சுமோ படமும் சுமார் ரகம் என்றுகூட சொல்ல முடியாத அளவுக்கு ரசிகர்களை சோதித்து விடுகிறது.
பிளஸ்: சுமோ வீரராக நடித்துள்ள யோஷினோரி தஷிரோ ஓரளவுக்கு நடிக்க முயற்சி செய்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பு பணிகளுக்காக சிவா படத்துக்கு சற்று தாராளமாகவே பட்ஜெட்டையும் ஒதுக்கியுள்ளார். நடிகை பிரியா ஆனந்தின் நடிப்பு சில இடங்களில் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைகிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் படத்திற்கு பலம் தான்.
மைனஸ்: இயக்குநர் சொதப்பிய சொதப்பல் தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியுள்ளது. எடிட்டர் பிரவினிடம் என்னமாதிரியான ஃபூட்டேஜ் கொடுத்து எப்படி படமாக்க சொன்னார்கள் என்பதே கேள்விக்குறியாகத்தான் உள்ளது. வழக்கம் போல சிவா எந்தவொரு மெனக்கெடலும் இல்லாமல் ஜாலியாக வந்து ஜாலியாக செல்கிறார். யோகி பாபு, சதீஷ் என பல காமெடி நடிகர்கள் தலை காட்டினாலும் படத்தில் காமெடி சுத்தமாக எடுபடவில்லை. மொத்தத்தில் சுமோ சூப்பராக இல்லை!


Click it and Unblock the Notifications











