Suriya's Saturday Review: சூர்யா சாட்டர்டே விமர்சனம்.. சனிக்கிழமை பாட்ஷா நானி.. எஸ்.ஜே. சூர்யா தரம்!
நடிகர்கள்: நானி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன்
இசை: ஜேக்ஸ் பிஜோய்
இயக்கம்: விவேக் ஆத்ரேயா
சென்னை: நேச்சுரல் ஸ்டார் நானி வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து தனக்கான ரசிகர்களை அதிகரித்து வருகிறார். தசரா, ஹாய் நான்னா படங்களை தொடர்ந்து இந்த படமும் அவருக்கு ஹாட்ரிக் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.
ஃபேமிலி டிராமா, எமோஷனல், சனிக்கிழமை மட்டும் சண்டை போடும் கான்செப்ட், அழகான காதல், ஆக்ஷன், பிஜிஎம் என பக்கா பேக்கேஜ் படமாக உருவாகியிருக்கிறது இந்த சரிபோதா சனிவாரம் என்கிற சூர்யாவின் சாட்டர்டே படம்.

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நடிப்பில் ஃபீல் குட் படமாக வந்த அடடே சுந்தரேசா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் க்ளிக் ஆகாத நிலையில், அவருடன் இணைந்து கண்டிப்பாக ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என களமிறங்கிய நானிக்கு எந்தளவுக்கு வெற்றிக் கிடைத்தது என்பது குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
சூர்யா சாட்டர்டே கதை: அம்மாவுக்கு கொடுத்த சத்தியத்தை கடைபிடிக்கும் நானி மற்ற 6 நாட்களும் என்ன கோபம் வந்தாலும் அதை எழுதி வைத்துக் கொண்டு சனிக்கிழமை மட்டுமே தனது கோபத்தை கொட்டித் தீர்க்கும் இளைஞனாக மாறுகிறார். படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது மாவீரன் போன்று ஃபேண்டஸி படமாக தெரிந்த நிலையில், படத்தை பார்த்தால் வேறுவொரு கதையை இயக்குநர் சொல்லியிருக்கிறார். உண்மையான கோபம் என்பது மற்றவர்களை பயம் கொள்ள வைக்கக் கூடாது என்றும் அடுத்தவர்களை தைரியப்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தை ஹைலைட் செய்து இந்த படத்தின் கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார்.
சோகுல பாலம் எனும் இடத்தில் வசிக்கும் மக்களை தனக்கு கோபம் வரும் போதெல்லாம் போட்டு அடிக்கும் அரக்க குணம் கொண்ட போலீஸ் அதிகாரி தயாளனாக எஸ்.ஜே. சூர்யா வருகிறார். அவருக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை வெடிக்க பாலமாக நாயகி பிரியங்கா மோகனும் சோகுல பாலம் மக்களும் மாறும் நிலையில், கடைசியில் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்றும் தமிழில் சூர்யா சாட்டர்டே என்றும் இந்த படம் வெளியாகியுள்ளது. நானி சூர்யா எனும் கதாபாத்திரத்திலும் பிரியங்கா மோகன் சாருலதாவாகவும் எஸ்.ஜே. சூர்யா தயாளன் கதாபாத்திரத்திலும் நடிப்பில் மிரட்டியுள்ளனர். எஸ்.ஜே. சூர்யாவின் அண்ணனாக வரும் முரளி ஷர்மா, நானியின் அப்பாவாக நடித்துள்ள சாய்குமார், அக்காவாக நடித்துள்ள அதிதி பாலன் என காஸ்டிங்கை சரியாக தேர்வு செய்த இடத்திலேயே இயக்குநருக்கு வெற்றி கிடைத்து விட்டது.
சாதாரண லைஃப் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக மாணிக்கமாகவும் சனிக்கிழமையானால் சண்டை போடும் பாட்ஷாவாகவும் மாறும் டெம்பிளேட் கதை என்றால் அதை எடுத்துக் கொண்டு சென்ற விதம் ரசிக்கும் படி அமைந்தது. நானிக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையே வரும் ஆடு புலி ஆட்டம் 2ம் பாதியில் ரசிகர்களை ரோலர் கோஸ்டர் ரைடுக்கு கொண்டு சென்றது.
பிளஸ்: வித்தியாசமான திரைக்கதை வடிவமைத்து அதில், ஃபேமிலி டிராமா மற்றும் ஆக்ஷன் பிளாக்கை வைத்த இடத்தில் இயக்குநர் ரைட்டிங்கில் ஸ்கோர் செய்து விட்டார். ஜி. முரளியின் ஒளிப்பதிவு படத்தின் டோனை சரியாக கொண்டு செல்ல பெரும் உதவியாய் இருந்தது. ராம் லட்சுமணன் இரட்டையர்கள், ஜி.எம். சேகர் மற்றும் கார்த்திக் ஸ்ரீனிவாஸ் என படத்திற்கு உழைத்த சண்டை பயிற்சி இயக்குநர்கள் அனைவருமே அட்டகாசமான பணியை செய்ய அனைத்துக்கும் மேலாக பின்னணி இசையில் ஜேக்ஸ் பிஜோய் சிவ தாண்டவத்தையே ஆடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். நானி மற்றும் பிரியங்கா மோகன் இடையே வரும் அந்த நான் ஈ பட காட்சிகள், முரளி ஷர்மா நானியை கையும் களவுமாக பிடித்த பின்னர், எஸ்.ஜே. சூர்யா அண்ணன் அவன் இல்லைன்னா என சொல்லும் இடங்கள் எல்லாம் அப்ளாஸ் அள்ளுகின்றன.
மைனஸ்: ஆரம்பத்தில் ஒரு 20 நிமிடங்கள் ஹீரோ ஏன் சனிக்கிழமை மட்டும் சண்டை போடுகிறார் என்பதை கட்டமைக்கவே ரொம்பவே நேரத்தை இயக்குநர் எடுத்துக் கொண்டது இழுவையாகி விட்டது. அதை மட்டும் கொஞ்சம் எடிட்டர் கார்த்திக் ஸ்ரீனிவாஸ் கருணை காட்டாமல் கத்தரி போட்டிருந்தால் நிச்சயம் முதல் பாதி கொஞ்சம் லெந்தாகவும் லேக் ஆகவும் இருந்திருக்காது. ஆனால், படத்தில் எஸ்.ஜே. சூர்யா வந்த பின்னர், படம் பரபரப்பை பற்றிக் கொண்டு இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் என பட்டையை கிளப்புகிறது. ஹீரோ நானிக்கு ஆரம்பம் முதல் கிளைமேக்ஸ் வரை சலார் படத்தில் பிரபாஸுக்கு கொடுக்கப்படும் பில்டப் போல கொடுத்திருப்பதையும் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











