Etharkkum Thunindhavan Review: அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் பெண்ணே.. எதற்கும் துணிந்தவன் விமர்சனம்!
நடிகர்கள்: சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ்
இசை: இமான்
இயக்கம்: பாண்டிராஜ்
ரேட்டிங்: 3/5
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
பல திரையரங்குகளில் இந்த படத்தை திரையிடக் கூடாது என மறைமுக எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கடைசி நேரத்தில் பிரச்சனைகள் ஓரளவு சுமூகமான நிலையில், திட்டமிட்டப்படி இந்த படம் திரைக்கு வந்திருக்கிறது. சில திரையரங்குகள் இந்த படத்தை வலிமை ஓடுவதால் திரையிட முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
Recommended Video
சூரரைப் போற்று, ஜெய்பீம் என கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சூர்யா, இந்த முறை மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பி உள்ளார். சமூக கருத்துக்காக பொள்ளாச்சி சம்பவத்தையும் ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமரா பெண்களை எந்தளவில் சீரழிக்கிறது என்கிற கதையை கொடுத்திருக்கிறார்.
முதல் சீனை மிஸ் பண்ணிடாதீங்க
எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடுவதற்கு முன்பாக சூர்யாவின் மாஷ்அப் ஒன்றை எதற்கும் துணிந்தவன் படக்குழுவினரே வெளியிட்டுள்ளனர். அதனை மிஸ் பண்ணிடாதீங்க என இயக்குநர் பாண்டிராஜ் ட்வீட் போட்டிருந்தார். சூர்யாவின் உயரத்தை சன் மியூசிக் விஜேக்கள் கிண்டல் செய்தது முதல், அவர் சினிமாவில் செய்த முயற்சிகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் தொகுத்து ஒரு வீடியோவாக போட்டுள்ளனர். அதன் பிறகு தான் எதற்கும் துணிந்தவன் படமே போடப்படுகிறது.
மீண்டும் கமர்ஷியல்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் என இரு படங்களும் ஆரம்பத்தில் இருந்தே கதையை நோக்கி மட்டுமே டிராவல் செய்யும். ஆனால், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள நிலையில், இன்ட்ரோ சாங், ஃபைட், ஹீரோயின் என்ட்ரி, ஹீரோயினுடன் ரொமான்ஸ் பாட்டு, சூரியின் மொக்கை காமெடி என முதல் பாதி ரொம்ப சுமாராகவே நகர்கிறது.
பாண்டிராஜ் டச்
கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை என கிராமத்து பின்னணி படங்களை சிறப்பான திரைக்கதையுடன் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவை வைத்து இப்படியொரு கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். வழக்கம் போல அவரது டச் இந்த படத்தில் நிறைய இடங்களில் தென்படுவதே ரசிகர்களுக்கு ஏதோ பழைய படத்தை பார்க்கும் அனுபவத்தையே கொடுக்கிறது.
ஆபாச வில்லன்
சூர்யா ஊருக்கும் வினய் ஊருக்கும் இடையே பிரச்சனை இருக்கிறது. அந்த ஊர் பெண்களை இந்த ஊர்காரங்களுக்கும் இந்த ஊர் பெண்களை அந்த ஊர் காரங்களுக்கும் கட்டித் தர முடியாது என பிரச்சனை கிளம்பிய நிலையில், வினய் பக்கத்து ஊர் பெண்களை ஆபாசமாக படம் எடுப்பது, இளைஞர்களுடன் காதல் வலையில் விழவைத்து ஆபாச படம் எடுப்பது என படு மோசமான காரியங்களை செய்துக் கொண்டிருக்கும் ஊர் பெரியமனுஷனாக இன்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டாக்டர் படம் அளவுக்கு இந்த கதாபாத்திரம் வினய்க்கு ஒட்டவில்லை என்று தான் தோன்றுகிறது.
கண்ணபிரான்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் வில்லன் நட்டி நட்ராஜுக்கு வைக்கப்பட்ட அதே கண்ணபிரான் பெயர் தான் இந்த படத்தில் சூர்யாவுக்கு சூட்டியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். இதில், ஏதாவது உள்குத்து குறியீடு இருக்கா? என ரசிகர்கள் தியேட்டரிலேயே கலாய்த்து வருகின்றனர்.
என்ன கதை
வழக்கறிஞர் கண்ணபிரானாக சூர்யா நடித்துள்ளார். இளம் வயதிலேயே தனது தங்கையை சிலர் பலாத்காரம் செய்து விட அவரை காப்பாற்ற போராடி முடியாமல் போக தங்கையின் போட்டோவை சுவற்றில் மாட்டி சூர்யாவின் குடும்பமே சாமியாக கும்பிட்டு வருகிறது. பெண்களை ஆபாசமாக வீடியோ எடுக்கும் வினய்யின் வலையில் சூர்யாவே ஒரு கட்டத்தில் சிக்க அதிலிருந்து எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றி பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் படமாக எதற்கும் துணிந்தவன் அமைந்திருக்கிறது.
எதை பார்ப்பது
இரண்டாம் பாதியில் சூரியின் காமெடி சில இடங்களில் நல்லாவே வொர்க்கவுட் ஆகி இருக்கு. ஆனால், ஒரு கஷ்டமான சீன் ஒரு காமெடி சீன் என மாற்றி மாற்றி கலவை சாதமாக பாண்டிராஜ் கொடுத்திருப்பது பெரிய குறையாக மாறியுள்ளது. இரண்டில் எதை பார்ப்பது, எதை ரசிப்பது என்றே தெரியவில்லை.
அந்த வீடியோவை நானும் பார்த்தேன்
செல்போனில் கேமரா இணைக்கப்பட்டு இருப்பது பெண்களுக்கு சமூகத்தில் எந்தளவுக்கு பாதிப்புகளை கொண்டு வருகிறது என்பதை சொல்லியிருக்கும் படம் தான் எதற்கும் துணிந்தவன். மற்றவர்களுக்கு வரும் பிரச்சனையை சூர்யா தடுப்பார் என நினைத்த நிலையில், அவரது அந்தரங்க வீடியோவையே வில்லன் வினய் எடுக்க அதிலிருந்து தன்னையும் தனது மனைவியையும் எப்படி காப்பாற்றுகிறார் என்றும் பெண்கள் வீக்கர் செக்ஸ் இல்லை என்றும் இதுபோன்ற மிரட்டலுக்காக உயிரை விடுவது கோழைத்தனம் என்பதை உணர்த்தி உள்ளார்.
மகளிர் தின ஸ்பெஷல்
மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான படமாக மாறியுள்ளது எதற்கும் துணிந்தவன். இமானின் இசை ஃபிரெஷ்ஷாக இல்லாமல் ஏற்கனவே கேட்ட இசையை மீண்டும் கேட்பது போலவே இருக்கிறது. சும்மா சுர்ருன்னு பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் அனல் தெறிக்கின்றன. எடிட்டர் ரூபன் காமெடி காட்சிகளையும், கன்டென்ட் காட்சிகளையும் கச்சிதமாக எடிட் செய்ய சற்று சிரமப்பட்டு இருப்பார் என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகளில் சூர்யா மிரட்டுகிறார். வலிமை படத்தை போலவே பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் இந்த படம் ரொம்பவே பிடிக்கும்.


Click it and Unblock the Notifications











