Suttupidikka Utharavu Review : விக்ராந்தையும், சுசீந்திரனையும் சுட்டு பிடிக்க போராடும் மிஷ்கின்..!
கொள்ளையர்கள், போலீஸ், தீவிரவாதிகளுக்கு இடையே நடக்கும் சண்டையே சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தின் ஒன்லைன்.
Recommended Video
சென்னை: வங்கி கொள்ளையர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் சண்டையில் தீவிரவாதிகளும் நுழைந்தால், அதுவே சுட்டுப்பிடிக்க உத்தரவு.
விக்ராந்த்தும், சுசீந்திரனும் மேலும் இருவருடன் சேர்ந்து ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. பொதுமக்களையும் காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுவிட்டு அவர்கள் தப்பிக்கிறார்கள். அவர்களை பிடிக்கும் பொறுப்பை காவல் அதிகாரி மிஷ்கின் எடுத்துக்கொள்கிறார்.

மிஷ்கினின் துப்பாக்கிக்கு ஒரு கொள்ளையன் பலியாக மீதி 3 பேரும் தப்பிக்கிறார்கள். தப்பித்து செல்லும்போது ஒரு குடியிருப்பு பகுதியில் நடக்கும் விபத்தால் அந்த குடியிருப்பு பகுதிக்குள் சிக்கி கொள்கிறார்கள். அந்த ஒட்டுமொத்த குடியிருப்பையுமே அலர்ட்டாக்கி அந்த கொள்ளையர்களை பிடிக்க மிஷ்கின் உத்தரவிடுகிறார். அந்த குடியிருப்பு பகுதியில் தீவிரவாதிகளும் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அன்றைக்கு ஒரு மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிடுகிறார்கள். அந்த குண்டுவெடிப்புக்கும் விக்ராந்த், சுசீந்தரன் கொள்ளை அடித்ததற்கும் என்ன தொடர்பு? மிஷ்கின் தலைமையிலான காவல் குழு குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை பிடித்ததா? என்பதே மீதிக் கதை.

பாடல்களோ, காதல் காட்சிகளோ, தனியாக நகைச்சுவை காட்சிகளோ இல்லாமல் பரபரப்பான திரைக்கதையை மட்டுமே நம்பி படத்தை எடுத்து இருக்கிறார் ராம்பிரகாஷ். முதல் காட்சியிலேயே படம் வேகம் எடுக்கிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதிக்குள் சிக்கும் விக்ராந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் போல வேகமும் முடங்கி விடுகிறது.

படத்தில் இரண்டு பெரிய இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடிப்பதுடன் தங்களுடைய கடமையை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிக்ஷின் ஓவராக நடித்து நம்மை டார்ச்சர் செய்திருக்கிறார். சுசீந்திரனுக்கு அந்த கதாபாத்திரம் பொருந்தவே இல்லை.

விக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும், சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து கடுப்பேற்றுகிறார்கள்.

படத்தின் ஒரே ஆறுதல் பேபி மானஸ்வி தான். இமைக்கா நொடிகளில் வாயாடியாக வந்து கவர்ந்தவர், இந்த படத்தில் சைகை மொழியில் பேசி நெகிழச் செய்கிறார். சிறப்பான நடிப்பு மானஸ்வி.

சந்துபொந்து, இண்டு இடுக்குகளில் எல்லாம் நுழைந்து, பரபரப்பாக இயங்கியிருக்கிறது சுஜித் சாரங்கின் கேமரா. ஆனால் திரைக்கதை நொண்டியடிப்பதால், அவரது உழைப்பு வீணாகிவிட்டது. ஜேக்ஸ் பிஜாயின், இசை கேட்கும்படியாக இல்லாததால், அவரைப் பற்றி பேச எதுவும் இல்லை. படத்தில் இன்னும் நிறைய காட்சிகளை சுட்டுத்தள்ளியிருக்கலாம் எடிட்டர் ராமாராவ்.

கடைசி 10 நிமிடங்களில் வரும் டுவிஸ்டை நம்பி ராம்பிரகாஷ் கதையை எழுதி இருக்கிறார். பரபரப்பான திரைக்கதை இருந்தாலும் நம்பகத்தன்மை இல்லாத கதையால் படம் ஒரு கட்டத்தில் சலிப்படைய செய்து விடுகிறது. அந்த டுவிஸ்டையும் ஏற்கனவே யூகிக்க முடிவது பலவீனம்.

எனவே சுட்டுப்பிடிக்க உத்தரவு ஒரு வித்தியாசமான முயற்சி மட்டுமே.



Click it and Unblock the Notifications











