Sweetheart Review: ஸ்வீட்ஹார்ட் விமர்சனம்.. ஜோ போல ஜோராக இருந்ததா?. இல்லை போரா?.. ரியோ ராஜ் எப்படி?
சென்னை: அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ் நடிப்பில் இன்று வெளியான ஸ்வீட்ஹார்ட் படம் இளைஞர்களை கவரும் விதமாக உருவாகியுள்ளது. ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் உறவு சிக்கல்களை பற்றி கதை பேசியிருக்கிறது. ரியோ ராஜ் படத்துக்கு படம் தனது நடிப்பை மெருகேற்றி வரும் நிலையில், இந்த படம் அவருக்கு வெற்றிப் படமாக அமையுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை கோபிகா ரமேஷ் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். முதல் சீனில் இருந்தே ஹீரோயின் இந்த படத்துக்கு நான் தான் என்பதை உறுதி செய்து கடைசி வரை தனது தேர்ந்த நடிப்பால் பாராட்டுக்களை அள்ளுகிறார்.

ரியோ ராஜ் ஹீரோவாக நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இருந்து நடித்து வருகிறார். அவர் நடித்த படங்களிலேயே ஜோ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. சமீபத்தில் வெளியான நிறம் மாறும் உலகில் படம் கைகொடுக்காத நிலையில், ஸ்வீட் ஹார்ட் படம் கைகொடுத்ததா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம் வாங்க..
ஸ்வீட் ஹார்ட் கதை: பெற்றோர்கள் சேர்ந்து வாழாத நிலையில், ரிலேஷன்ஷிப் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருகிறார் வாசு (ரியோ ராஜ்). ஆனால், படத்தின் நாயகி மனுவுக்கு (கோபிகா ரமேஷ்) காதல் மற்றும் குடும்பத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்படுகிறது. வாசுவுடன் நெருங்கி பழகும் மனுவுக்கு அவரை பிடித்துவிட காதலிக்க முடிவு செய்கிறார். ஆனால், அதெல்லாம் செட்டாகாது என வாசு விலக, அதை செட் செய்து பார்த்து விடலாம் என இருவரும் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுகின்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக ஹீரோயின் கர்ப்பமாக அதை கலைத்து விடலாம் என வாசு சொல்கிறான். அதன் பின்னர், கருவை கலைத்தார்களா? இல்லை இருவரும் அந்த குழந்தைக்காக சேர்ந்து வாழ்ந்தார்களா? என்பது தான் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: டாடா, ஆதலால் காதல் செய்வீர், பேச்சுலர், லவ்வர் போன்ற படங்களின் சாயல் கதையில் இருப்பதாக மொட்டை மாடி பார்ட்டியில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ரியோவை விஜே சித்து டிராகன் படத்துக்கு பண்ணதை போலவே புரமோஷனுக்கு செய்தனர். முதல் பாதி இந்த படம் ஜாலியாக நகர, 2வது பாதி எமோஷனல் காட்சிகளை வலிந்து திணித்து ரசிகர்களை படத்துடன் ஒன்றவிட முடியாமல் இயக்குநர் செய்திருப்பது தான் பெரிய குறையாக மாறியுள்ளது.
பிளஸ்: ரியோ ராஜின் நடிப்பு மெருகேறி வருவது இந்த படத்திற்கு பலம் தான். கோபிகா ரமேஷ் தனது கதாபாத்திரம் அறிந்து அதற்கு தேவையான நடிப்பை நச்சென வழங்கியுள்ளார். நண்பனாக வரும் அருணாச்சலம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் படத்திற்கு ரிச்சான ஒளிப்பதிவை வழங்கி அசத்தியுள்ளார். தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தனக்கே உரிய பாணியில் மேஜிக் நிகழ்த்தியுள்ளார்.
மைனஸ்: திரைக்கதை நான் லீனியராக சென்றாலும் கதை ஆழமானதாக இல்லாமல் மேம்போக்காக இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. பல இடங்களில் படத்துடன் ரசிகர்கள் கனெக்ட் ஆகவே முடியவில்லை. அதிலும், அந்த ஜவ்வான 2ம் பாதி பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. எடிட்டர் இன்னமும் கத்தரியை சரியாக பயன்படுத்தியிருக்கலாம். அந்த கிளைமேக்ஸ் போர்ஷனில் வரும் எமோஷன் காட்சிகள் ஓகே என்றாலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. ஜோ அளவுக்கு ஜோராக இல்லையென்றால் பெரிதாக போரடிக்கவில்லை. ஒருமுறை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











