Takkar Review: பணத்தை வைத்து ஒரு நீயா நானா.. சித்தார்த்தின் ’டக்கர்’ விமர்சனம் இதோ!
நடிகர்கள்: சித்தார்த், திவ்யான்ஷா கவுசிக், யோகி பாபு
இசை: நிவாஸ் பிரசன்னா
நேரம்: 2 மணி நேரம் 19 நிமிடங்கள்
இயக்கம்: கார்த்திக் ஜி. க்ரிஷ்
சென்னை: இயக்குநர் கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கவுசிக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 9ம் தேதி வெளியாகி உள்ள படம் தான் டக்கர்.

நடிகர் சித்தார்த்துக்கு நீண்ட காலமாக படங்கள் சரியாக அமையாத நிலையில், டக்கர் படம் தனக்கு கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் என நம்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள டக்கர் படம் அவரது நம்பிக்கையையும் அவரது ரசிகர்களின் நம்பிக்கையையும் காப்பாற்றியதா? அல்லது வழக்கம் போல காலை வாரி விட்டதா என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
டக்கர் கதை: எப்படியாவது பெரிய பணக்காரன் ஆகி விட்டால் வாழ்க்கையில் கஷ்டமே இருக்காது என குருட்டுத்தனமாக நம்பும் நாயகன் குணசேகரன் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்துள்ளார். அவருக்கு அப்படியே ஆப்போசிட்டாக பெரிய பணக்காரியாக இருப்பதாலேயே பல துன்பங்களுக்கு ஆளாகும் லக்கியாக நாயகி திவ்யான்ஷா கவுசிக் நடித்துள்ளார்.

பணத்தை வைத்து பட்டிமன்றம் மற்றும் நீயா நானா நடத்தியதை போல ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். குணசேகரன் பணக்காரனாகி சந்தோஷம் அடைந்தாரா? லக்கி பணத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்தாரா என்பது தான் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு: பணத்தை சம்பாதிக்க வேண்டும் அதுவும் நேர்மையாக சம்பாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் சித்தார்த்தின் கதாபாத்திரத்தை பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியவில்லை. பல இடங்களில் அதன் காரணமாகவே அவருக்கு வேலை சரியாக அமையவில்லை.

கடைசியாக கேப் டிரைவராக மாறி வேலை பார்த்து வருகிறார். இன்னொரு பக்கம் திருட்டுத்தனமாக பணம் சம்பாதிக்க இளம் பெண்களை ஒரு கூட்டம் கடத்துகிறது. அந்த கூட்டத்தில் சேரும் சித்தார்த் சந்திக்கும் பிரச்சனைகளும், பணத்தின் காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து வரும் லக்கியை குணசேகரன் சந்திக்க இருவரது வாழ்க்கையில் என்ன மாதிரியான திருப்புமுனை ஏற்படுகிறது என்பதை காதல், காமெடி, அடிதடி என மசாலா படமாகவே இயக்குநர் கொடுத்துள்ளார்.
பிளஸ்: நடிகர் சித்தார்த் மொத்த படத்தையும் வழக்கம் போல தனது தோளில் தூக்கி சுமந்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்துகிறது. பாடல்களும் பராவாயில்லை ரகம் தான். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆறுதல்.

மைனஸ்: வேகத்தடையாக இரண்டாம் பாதி படத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. ஹீரோயின் நடிப்பு பெரிதாக படத்திற்கு கை கொடுக்கவில்லை. சித்தார்த்துக்கு இணையாக நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை அமைத்து விட்டு ஹீரோயின் விவகாரத்தில் இயக்குநர் கோட்டை விட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். யோகி பாபுவிற்கு இந்த படத்திலும் சரியான ரோல் அமையாத நிலையில், அவரது காமெடிகள் பெரும் பின்னடைவாக படத்திற்கு அமைந்துள்ளன. மொத்தத்தில் டக்கர் - டாப் டக்கர் இல்லை!


Click it and Unblock the Notifications











