Oru Nodi Review: கிரைம் திரில்லர் பாணியில் உருவான ஒரு நொடி..படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ!
இயக்குநர்: பி மணிவர்மன்
நடிகர்: தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர்,
இசை: சஞ்சய் மாணிக்கம்
சென்னை: இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ஒரு நொடி. இந்த படத்தில் தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், பழ. ராமமூர்த்தி, தீபா சங்கர், நிகிதா, அருண் கார்த்திக் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மதுரை அழகர் மூவிஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் உருவான இந்த திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியான நிலையில், இப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
இந்த படத்தின் ஹீரோவான (பருதி இளமாறன்) தமன் குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருடைய காவல் நிலையத்திற்கு வரும் பெண், தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கும் போது, அந்த பெண், தனக்கு ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் தான் தன் கணவரை கடத்தி இருப்பார் என்றும் சொல்கிறார். இதையடுத்து. போலீசார் கரிமேடு தியாகு என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது விசாரித்து வருகின்றனர்.

இப்படி ஒரு பக்கம் கதை சென்று கொண்டு இருக்க, மற்றொரு பக்கம் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். பின் அவருடைய கொலைக்கு காரணம் என்ன என்பதை கதையின் நாயகன் விசாரித்து வருகிறார். இப்படி இரண்டு கேசுக்குமான விடையைத் தேடி ஓட ஆரம்பிக்கார் பருதி இளமாறன். கடைசியில் காணாமல் போன நபர் கிடைத்தாரா? இளம் பெண்ணை கொன்றது யார்? என்பதுதான் ஒரு நொடி திரைப்படத்தின் கதை. இந்த படத்தை போரடிக்காமல் க்ரைம் திரில்லர் பாணியில் சுவாரசியமானத் திரைப்படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர் மணிவர்மன். அது மட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்திற்கான லீடையும் இந்த படத்தில் விட்டு இருக்கிறார்.
திரைக்கதையில் சுவாரசியம்: ஒரு சிறு பிசிறு தட்டினாலும் குழம்பும் திரைக்கதையில் சிறு குழப்பமும் இல்லாமல் கதை அழகாக நகர்கிறது. அடுத்தடுத்த விசாரணை, குற்றவாளி யாராக இருக்கும் என், தொடர்ந்து விசாரணை காட்சிகள் வந்தாலும், ஒவ்வொரு விசாரணையின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் இருப்பதால் படம் ரசிக்கும்படி இருந்தது. மேலும், கதாபாத்திர தேர்வு கதைக்கு கூடுதல் பலமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
எதார்த்தமான நடிப்பு: எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்டாக செய்து முடிக்கும் எம். எஸ். பாஸ்கர் இந்தப் படத்தில் சேகரனாக சபாஷ் போட வைக்கிறார். அதேபோல, அரசியல் பின்புலம் கொண்ட தாதாவாக தனது கேரக்டரை கனக்கச்சிதமாக நடித்துள்ளார் வேல ராம மூர்த்தி. அதே போல இன்ஸ்பெக்டர் பருதி இளமாறன் ரோலில் நடிகர் தமன்குமார் நடிப்பும் சூப்பர். பல இடங்களில் ஒரு அறிமுக ஹீரோ போல் இல்லாமல் நல்ல எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குநருக்கு பாராட்டு: இரண்டு வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் நல்ல ஒரு திரைக்கதையாக உருவாக்கியுள்ள இயக்குனர் மணி வர்மனுக்கு தனி பாராட்டுக்கள். படத்தின் எடிட்டிங் ஸ்டைல் மற்றும் இசை படத்திற்கு கூடுதல் பக்கபலமாக அமைந்தது. அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எந்த படமும் பெரியதாக வெற்றி பெறாத நிலையில் ஒரு நொடி திரைப்படம் நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











