Hit List Review: விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிப்பு எப்படி?.. ஹிட் லிஸ்ட் பிரபலங்கள் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக நடித்துள்ள ஹிட் லிஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. அந்த படத்தின் பிரீமியர் காட்சி நேற்று வெளியிடப்பட்ட நிலையில், படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி விஜய் கனிஷ்காவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தனது தயாரிப்பு படத்தின் மூலம் அறிமுகம் செய்துள்ளார். கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

ஹிட் லிஸ்ட் படத்தில் சரத்குமார், கௌதம் மேனன், அபி நட்சத்திரா, சமுத்திரகனி, ஸ்முருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, முனீஸ் காந்த், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சேரன் விமர்சனம்: விஜய் கனிஷ்கா இயக்குநர் விக்ரமனின் மகனாக இருந்தாலும் இந்த படத்துக்காக ஏகப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு அதன் பின்னர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். படத்திலும் முதலில் எடுத்த உடனே ஃபைட் செய்து பலரை அடித்து பறக்க விடவில்லை. அடிவாங்கி அடிவாங்கி பின்னர் எழும் எழுச்சி நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார் என விஜய் கனிஷ்கா பாராட்டியுள்ளார்.
பேரரசு விமர்சனம்: இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் சமீபத்தில் வெளியான எந்த ஒரு படத்திலும் இருந்திருக்காது. அந்த அளவுக்கு கே.எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குநர்கள் இருவரும் படத்தின் திரைக்கதை மற்றும் மேக்கிங்கை சார்பாக செய்துள்ளனர் என விமர்சித்துள்ளார்.
ஆர்.வி. உதயகுமார் பாராட்டு: இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் விஜய் கனிஷ்கா தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக வருவார் என்றும் இந்த வாரம் வெளியான படங்களில் ஹிட் லிஸ்ட் நம்பர் ஒன் லிஸ்ட்டுக்கு வரும் என்றும் அவர் பாராட்டினார்.
சரத்குமார் பேச்சு: ஹிட் லிஸ்ட் படத்துக்கு மிகப்பெரிய பலமாக சரத்குமாரின் நடிப்பு உள்ளது. சமீபகாலமாக இளம் நடிகர்களுடன் இணைந்து போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சரத்குமார் அசத்தி வருகிறார். போர் தொழில் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில் அமிதாஷ் நடித்த பரம்பொருள் படத்திலும் சரத்குமார் நடித்திருந்தார். விஜய் கனிஷ்கா நடித்துள்ள ஹிட் லிஸ்ட் படத்திலும் சரத்குமாருக்கு காப் ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு பேசிய சரத்குமார் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைப்பை கொட்டி இருக்கிறார் விஜய் கனிஷ்கா. இயக்குநர் விக்ரமன் மகன் என்பதால் மட்டும் அவரை பாராட்டவில்லை, அவர் சினிமாவுக்காக பல்வேறு விஷயங்களை செய்து விட்டு நடிக்க வந்திருக்கிறார். முதல் படத்திலேயே நல்லா நடித்திருக்கிறார் அதனால் பாராட்டுகிறேன் எனக் கூறியுள்ளார்.
ஹிட் லிஸ்ட் ஹிட் அடிக்குமா?: இயக்குநர் சரண், கே.எஸ். ரவிக்குமார், இயக்குநர் வெங்கடேஷ் என தமிழ் சினிமாவில் பல சீனியர் நடிகர்களும் இயக்குநர் விக்ரமன் மகனை அறிமுகப்படுத்தும் விழாவாகவே ஹிட் லிஸ்ட் படத்தின் ப்ரீமியர் ஷோ நிகழ்ச்சியை மாற்றி விட்டனர். அனைவருக்கும் விஜய் கனிஷ்கா மற்றும் இயக்குநர் விக்ரமன் நன்றி தெரிவித்தனர். இந்த படத்தில் நீட் பிரச்சனை தொடர்பான விஷயங்களும் உள்ள நிலையில், படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கின்றனர். தியேட்டரில் படத்தை பார்த்து விட்டு ரசிகர்களும் இதே கருத்தை சொன்னால் தான் விஜய் கனிஷ்காவுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











