twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெனாலிராமன் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: வடிவேலு, மீனாக்ஷி தீக்ஷித், ராதாரவி, மனோபாலா

    இசை: டி இமான்

    ஒளிப்பதிவு: ராம்நாத் ஷெட்டி

    தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம்

    இயக்கம்: யுவராஜ் தயாளன்

    திரை நகைச்சுவையில் உச்சத்தில் இருந்து திடீரென ஒதுக்கப்பட்ட வடிவேலுவின் மறு வருகை இந்த தெனாலிராமன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. இதோ... மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் அதே ஆர்ப்பாட்ட வடிவேலு.

    இரண்டரை மணி நேரமும் வடிவேலுவின் சிரிப்பு மழையை எதிர்ப்பார்த்து படத்துக்குச் சென்ற ரசிகர்களுக்கு, இந்தப் படம் திருப்தி தந்திருக்கிறதா... பார்ப்போம்!

    விகட நகரப் பேரரசன் மாமன்னனுக்கு 36 மனைவிகள், 52 வாரிசுகள். இந்த பெருங்குடும்பத்தையும் தன் சுகத்தையும் கவனிப்பதிலேயே பெரும் நேரத்தைச் செலவிடும் மாமன்னன், நாட்டைப் பற்றி கிஞ்சித்தும் நினைப்பதில்லை. அவரது நவரத்ன அமைச்சர்களோ, மகா ஊழல் பேர்வழிகள், சோம்பேறிகள், நாட்டையே அந்நியனுக்கு விற்பவர்கள். தங்களுக்குள் நேர்மையாக இருந்த ஒரு அமைச்சரை போட்டுத் தள்ளவும் உடந்தையாக இருக்கிறார்கள்.

    செத்துப் போன அந்த அமைச்சருக்குப் பதில், தடைகளைக் கடந்து தேர்வாகிறான் தெனாலிராமன். புரட்சிக் குழுவைச் சேர்ந்த அவன், மன்னனைக் கொல்லத்தான் தந்திரமாக வருகிறான். ஆனால் மன்னனின் இளகிய மனதைப் புரிந்து கொள்கிறான். தனது மதியூகத்தால் மன்னனுக்கு நெருக்கமாகிறான். மன்னன் மகள் இளவரசியின் இதயத்திலும் இடம்பிடிக்கிறான்.

    தெனாலிராமனால் தங்கள் ஊழல்கள் அம்பலமாவது உறுதியானதும், மன்னனையும் வடிவேலுவையும் சதி செய்து பிரிக்கிறார்கள் மற்ற அமைச்சர்கள். ஆனால் சதியைப் புரிந்து தெனாலிராமனை மீண்டும் அரண்மனைக்குள் அழைத்துக் கொள்கிறார் மன்னர்.

    அப்போதுதான் நாட்டில் மக்கள் படும் அவலங்கள், திட்டங்கள் மக்களைப் போய்ச் சேராதது, சீன வணிகர்களிடம் நாட்டின் பொருளாதாரமே விற்கப்பட்டிருப்பதையெல்லாம் எடுத்துச் சொல்கிறான் தெனாலிராமன். நம்ப மறுக்கும் மன்னனை ஒரு நாள் மக்களோடு வாழ்ந்து பார்க்கச் சொல்கிறான் தெனாலி. மன்னனோடு பத்து நாள் தங்குவதாகச் சபதம் போட்டு அரண்மனையிலிருந்து வெளியேறுகிறார்.

    மக்கள் படும் துன்பங்களை நேரில் பார்க்கும் மன்னன், அடுத்து என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.

    கிட்டத்தட்ட இம்சை அரசன் 23-ம் புலிக்கேசியின் ஜெராக்ஸாக திரைக்கதை அமைப்பு. அதைத்தாண்டி வடிவேலு வெளியில் வர விரும்பவில்லை போலத் தெரிகிறது. இம்சை அரசனின் வெற்றிக்குக் காரணமே, அந்த நேரத்தில் அது புதுசாக வந்ததுதான்.

    பெரிய இடைவெளிக்குப் பிறகு வருகிறார் வடிவேலு... அதுவும் கோடை நேரம்... குழந்தைகள்தான் அவரது பெரிய ரசிகர்கள்.. குடும்பம் குடும்பமாகப் பார்க்க வருவார்கள்... காட்சிக்குக் காட்சி சிரிப்பில் அரங்கம் அதிர வேண்டாமா... ம்ஹூம்!

    படம் முழுக்க வசனங்கள்... வள வளவென்று காதைப் பதம் பார்க்கின்றன. வடிவேலுவின் பலம் வசனங்களில் இல்லையே!

    மன்னனாகவும், தெனாலிராமனாகவும் வடிவேலு. இரண்டு பாத்திரங்களுமே புத்திசாலித்தனமானவை. அதனால்தான் எங்குமே அவரது இயல்பான நகைச்சுவை வெளியில் வர வாய்ப்பே அமையவில்லை. ஆனால் வடிவேலுவின் நடிப்புத் திறன், உடல் மொழி... அவரது சொத்தான குரல் அப்படியேதான் இருக்கிறது.

    குடும்ப சுகத்தில் திளைக்கும் மாமன்னனை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். பானைக்குள் யானை போக வேண்டும் என அடம்பிடிப்பதிலும், ஒரு அமைச்சரின் தாய்மொழி தெலுங்கு என்பதைக் கண்டுபிடிப்பதிலும் தெனாலிராம வடிவேலு மிளிர்கிறார்.

    நாயகியாக வரும் மீனாக்ஷி தீக்ஷித் முகத்தைக் காட்டுவதை விட முன்னழகைக் காட்டுவதற்குத்தான் சிரத்தை எடுத்திருக்கிறார்கள். முகம் சுமார்தான்! பெரிதாக நடிப்பைக் காட்ட வேண்டிய அவசியமும் படத்தில் அவருக்கு இல்லை.

    ராதாரவி, பாலா சிங், ஜிஎம் குமார், மனோபாலா, ஜோ மல்லூரி, சந்தான பாரதி, தேவதர்ஷினி, ராஜேஷ், போஸ் வெங்கட், மன்சூர் அலிகான் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகவே செய்து கொடுத்திருக்கிறார்கள்.

    ஒரு சரித்திரப் படத்தை உருவாக்குவது சாமானிய விஷயமல்ல. ஆடம்பர செட்கள், அன்றைய கிராமங்கள், மக்களின் தோற்றங்களை அப்படியே கொண்டு வருவது பெரிய சாகசம். அந்த வகையில் இந்தப் படத்தை வரவேற்க வேண்டியதுதான்.

    Tenaliraman Review

    இமானின் இசை பரவாயில்லை ரகம்தான். பாடல்களை இன்னும் கூட இனிமையாகக் கொடுத்திருக்கலாம்.

    ஆனால் ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு அருமையோ அருமை. அதுவும் வடிவேலு நடந்து வர, முன்னாள் ஒரு பறவை பறந்து வரும் காட்சியும், அந்த க்ளைமாக்ஸ் நிகழும் பள்ளத்தாக்கு காட்சியும் பிரமாதம்.

    இந்தப் படம் வடிவேலு என்ற பெருங்கலைஞனின் மறுவருகையின் தொடக்கம்தான். அவரை ரசித்து ரசித்து திரைக்கதை உருவாக்கும் படைப்பாளிகளுடன் அவர் மீண்டும் இணையப் போகும் படங்களில் மீண்டும் அந்த நகைச்சுவை சாம்ராஜ்யம் விரியும் என்ற நம்பிக்கை இருக்கிறது!

    நகைச்சுவைக் காட்சிகள் குறைவு... அல்லது இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், வடிவேலுவுக்காக இந்த தெனாலிராமனை குழந்தைகளோடு ஒருமுறை பார்க்கலாம்!

    English summary
    Vadivelu's comeback movie Tenaliraman is a neat and clean entertainer, but with less comical scenes. But it never stops one to enjoy the movie. Go and watch it for Vadivelu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X