twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாண்டவம் - திரை விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.5/5
    எஸ். ஷங்கர்

    நடிப்பு: விக்ரம், எமி ஜாக்ஸன், அனுஷ்கா, சந்தானம், ஜெகபதிபாபு, நாசர்
    இசை: ஜிவி பிரகாஷ்குமார்
    ஒளிப்பதிவு: நீரவ் ஷா
    பிஆர்ஓ: ஜான்சன்
    தயாரிப்பு: யுடிவி
    எழுத்து - இயக்கம்: விஜய்

    ஏகப்பட்ட பரபரப்பைக் கிளப்பியபடி வெளியாகியிருக்கும் தாண்டவம், ஒரு வழக்கமான பழி வாங்கல் கதைதான். ஆனால் அதற்கு லண்டன் லொகேஷன், கலர் கலராக ஹீரோயின்கள், ஸ்டைலிஷ் மேக்கிங் என கோட்டிங் கொடுத்து, பார்க்க வைத்துவிடுகிறார் இயக்குநர் விஜய்.

    இந்தியாவின் முதன்மையான ரா அதிகாரிகளுள் ஒருவரான விக்ரமுக்கு, தீவிரவாதிகளைக் களையெடுக்கும் வேலை. அவருடைய சக அதிகாரி ஜெகபதிபாபு.

    திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை விஷயமாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே வில்லன்கள் சதியில் மனைவியை இழக்கிறார்.. கூடவே தன் இரு கண்களையும்!

    இதற்குக் காரணமான 5 வில்லன்களை கண்தெரியாத விக்ரம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

    இந்தக் கதைதான் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் பல முறை அடித்துத் துவைக்கப்பட்ட சமாச்சாரமாச்சே... அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்... வழக்கு.. பஞ்சாயத்து.. ராஜினாமாக்கள்? என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

    தெரிந்த கதை, யூகிக்கும் காட்சி நகர்வுகளைக் கூட சுவாரஸ்யமாய் சொல்வது ஒரு திறமைதான். அந்த வகையில் இயக்குநர் விஜய் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

    விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார் என்பது எவரெஸ்டில் எக்கச்சக்க பனி என்பது மாதிரி ரொம்ப வழக்கமான சொல்லாடல். ஆனால் அவர் முகத்தில் எட்டிப் பார்க்கும் முதுமை டூயட் காட்சிகளில் நெருடுகிறது. எக்கோலொகேஷன் முறையில், காதுகளைக் கண்களாக அவர் பாவிக்கும் காட்சிகளில் சில ஓஹோ ரகம்.. சில காதுல பூ சமாச்சாரம்.

    அனுஷ்கா, எமி ஜாக்ஸன், லட்சுமி ராய் என மூன்று ஹீரோயின்கள். மூவரில் அனுஷ்காவுக்கே வாய்ப்புகளும் கைத்தட்டல்களும் அதிகம்.

    படத்தில் ஒரு இளைப்பாறல் என்றால் அது டாக்சி ட்ரைவராக சந்தானம் வரும் காட்சிகள்.

    வெட்டி ஆபீசராக வருகிறார் நாசர்.

    தன்னை வளைக்கும் லண்டன் போலீசை, நிராயுதபாணியாக இருக்கும் விக்ரம் சுட்டுக் கொல்லும் காட்சி, சந்தானம் காமெடியைவிட டாப்!!

    அதேபோல, அந்த தீவிரவாதிகளை அழிக்கப் போடும் பிளானை பென் ட்ரைவில் அனுப்புவது. 'என்னப்பா... இன்னும் கடுதாசி காலத்திலேயே இருக்கீங்களே' என்ற கமெண்டடிக்கும் அளவுக்கு இப்படி சில காட்சிகள். தவிர்த்திருக்கலாம்.

    படத்தில் ஈர்க்கும் விஷயம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. வேண்டா வெறுப்பாக கேட்க வைக்கும் விஷயம் ஜிவி பிரகாஷின் இசை. கிராமத்துப் பாடல் என்ற பெயரில் அவர் 'படுத்தியிருக்கும்' அனிச்சம் பூவழகியைக் கேட்ட பிறகு... 'தம்பி, நீங்க இன்னும் நல்ல கிராமிய இசை கேட்கணும்!'

    ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களைச் சந்தித்ததாலோ என்னமோ பெரிய ஈர்ப்போ எதிர்ப்பார்ப்போ இல்லாமல்தான் தாண்டவம் படத்தைப் பார்க்க நேர்ந்தது.

    அதுகூட ஒருவிதத்தில் நல்லதுதான். தாண்டவம் ஆனந்த தாண்டவமாக இல்லையென்றாலும், மோசமான ஆட்டம் என்று சொல்லும்படி இல்லை. கதையில் சறுக்கினாலும், காட்சிப்படுத்திய விதத்தில் பார்வையாளர்கள் கவனத்தை வென்றிருக்கிறார் விஜய்!

    English summary
    Director Vijay's latest directorial flick Thaandavam is attracting the viewers by its stylish making.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X