For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தகராறு - விமர்சனம்

  By Shankar
  |

  எஸ் ஷங்கர்

  Rating:
  3.5/5

  நடிப்பு: அருள்நிதி, பூர்ணா, பவன், சுலீல் குமார், ஜெயப்பிரகாஷ், முருகதாஸ், அருள்தாஸ்

  இசை: தரண்குமார், பிரவீண் சத்யா

  ஒளிப்பதிவு: தில் ராஜ்

  தயாரிப்பு; தயாநிதி அழகிரி

  இயக்கம்: கணேஷ் விநாயக்

  'ஆக்ஷன் த்ரில்லரா... இப்படி இருக்கணும்டா' என்று மெச்சும் அளவுக்கு வந்திருக்கும் இன்னொரு அசத்தல் படம் தகராறு (சின்னச் சின்ன நெருடல்கள் இருந்தாலும்!).

  ஒரு கொலையில் பிடிக்கிற வேகம், பரபரவென க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது. சின்னச் சின்ன தகராறுகள், பெரிய வில்லங்கங்களாக மாறி, கொலைகளில் முடிவதை காட்சிப்படுத்தியிருப்பதில் ஒரு த்ரில்லருக்கான நேர்த்தி தெரிகிறது.

  மதுரைல அருள்நிதி, சுலீல் குமார், பவன், முருகதாஸ் என நாலு நண்பர்கள். அவர்களுக்கு துணையாய் பாவா லட்சுமணன். தொழில் சின்னச் சின்ன திருட்டுகள். இவர்களில் அருள்நிதிக்கு கந்துவட்டி ஜெயப்பிரகாஷ் மகள் பூர்ணா மீது காதல். இந்தக் காதல் நட்பையே பலி வாங்குகிறது. எப்படி என்பதுதான் புத்திசாலித்தனமான விறுவிறு க்ளைமாக்ஸ்.

  இடைவேளைக்கு முன்பே மூன்று நான்கு பெரிய தகராறுகளில் சிக்கிக் கொள்கிறது அருள்நிதி அண்ட் கோ. அதன் விளைவாக உயிருக்குயிரான நண்பனை பலி கொடுக்கிறார்கள். அந்த கொலையைச் செய்தது யாராக இருக்கும் என்ற பரபர தேடல் ஒவ்வொன்றும் சப்பென்று முடிய, உண்மைக் கொலையாளி தெரிய வரும் காட்சி, சதக் கென்று கத்தி இறங்குவது மாதிரி ஷார்ப்!

  காதலுக்காக வழிவது, நட்புக்காக கண்ணீர்விடுவது, தகராறு என்று வந்ததும் மின்னலாய் தாக்குவது... என சகலமும் சரியாய் செய்ய வருகிறது அருள்நிதிக்கு. டான்ஸ் ஆடக் கூட முயன்றிருக்கிறார். சொன்னமாதிரியே அருள்நிதியும் முன்னணி ஹீரோக்களின் வரிசைக்கு வந்துவிட்டார் இந்தப் படம் மூலம்!

  Thagararu - Review

  பூர்ணா கலக்கியிருக்கிறார். பாவாடை தாவணியிலும், புடவையிலும் பார்க்க அம்சமாக இருக்கிறார். அழகு, நடிப்பு, மதுரைக்காரப் பெண்ணுக்கே உரிய தைரியமும் அலட்சியமும் கலந்த உடல்மொழி... வெல்டன். சமீப நாட்களில் வந்த படங்களில் நடிப்பிலும் அழகிலும் ரசிக்கும்படியாக இருந்தது பூர்ணாதான் என்றால் மிகையல்ல!

  அருள்நிதியின் நண்பர்களாக வரும் தருண் சத்ரியா என்கிற சுலீல் குமார், பவன், முருகதாஸ் மூவருக்கமே சமமான வாய்ப்புகள். மூவருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.

  சுலீல் குமாருக்கு அந்த முறுக்கு மீசையும் முரட்டுப் பார்வையும் பக்காவாகப் பொருந்துகிறது. நண்பன் மீது அவர் காட்டும் முரட்டுப் பாசம் மனதைத் தொடுகிறது.

  Thagararu - Review

  நட்பைக் கூட முரட்டுத்தனமாகவே காட்டும் பவன் நடிப்பு அருமை. நல்ல நடிகர் வெறும் வில்லனாகவே இருந்துவிட்டார் இத்தனை நாளாய். அவ்வப்போது கைப்பிள்ளையாக வந்து, கடையில் சம்பவம் முடிக்கும் முருகதாஸும் மனதைக் கவர்கிறார்.

  நண்பர்களுக்கு உதவும் பாவா லட்சுமணன், தன்னைத் தாக்கியவர்களையும் இரண்டுமுறை மன்னிக்கும் அருள்தாஸ், அந்த ஆக்ரோஷ இன்ஸ்பெக்டர், கந்துவட்டி ஜெயப்பிரகாஷ் (அவர் மனைவியாக வருபவருக்கு அடுத்தடுத்த படங்களில் வசனங்களே வைக்காமல் இருந்தால் காது தப்பும்!)... என அனைவருமே தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

  சண்டைக் காட்சிகள் அமைத்தவருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். மிகையான சண்டைகள்தான் என்றாலும், செம விறுவிறுப்பு. குறிப்பாக அருள்தாஸ் மற்றும் இன்பெக்டருடன் நண்பர்கள் மோதும் காட்சிகளில் அனல் பறக்கிறது.

  Thagararu - Review

  இருக்கையில் உட்கார்ந்திருந்தாலும், காட்சிகளோடு நாமும் சேர்ந்து ஓடிக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறார்கள் ஒளிப்பதிவாளர் தில்ராஜும் பின்னணி இசைத்த பிரவீண் சத்யாவும். எடிட்டர் சுரேஷும் தன் கைவண்ணத்தை கச்சிதமாகக் காட்டியுள்ளார். தருண் இசையில் திருட்டுப் பயபுள்ள... இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

  குறை என்று பார்த்தால், சுப்பிரமணியபுரம் மற்றும் ரேணிகுண்டாவை சில காட்சிகள் நினைவுபடுத்துவதுதான்.

  மற்றபடி தேர்ந்த இயக்குநரின் நேர்த்தி தெரிகிறது புதியவரான கணேஷ் விநாயக் இயக்கத்தில். வாழ்த்தி வரவேற்போம்.

  தகராறு.. நேர்த்தியான ஆக்ஷன் த்ரில்லர்!

  English summary
  Arulnithi - Poorna starrer Thagararu is a sleek and technically good thriller directed by debutant Ganesh Vinayak.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X