twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைமுறைகள்- விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    4.0/5

    நடிப்பு: பாலு மகேந்திரா, சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் கார்த்திக், இயக்குநர் எம் சசிகுமார்

    இசை: இளையராஜா

    தயாரிப்பு: எம் சசிகுமார்

    எழுத்து- ஒளிப்பதிவு- எடிட்டிங்- இயக்கம்: பாலு மகேந்திரா

    இது 'கமர்ஷியல்', இது 'பேரலல்' என்றெல்லாம் நாமாகத்தான் வரையறை வகுத்துக் கொண்டு படம் என்ற பெயரில் நம்மை நாமே படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    உண்மையில் நல்ல சினிமாவுக்கு இலக்கணம் ஏதும் தேவையில்லை. கதை என்ற சட்டகம் எதுவும் கூட வேண்டாம்.

    நிகழ்வுகள்... அதைப் பதிவு செய்யும் விதம், அதற்குத் தேவையான அளவு குறைந்தபட்ச தொழில்நுட்பம் இருந்தால் கூடப் போதும் என இன்றைய தலைமுறைக்கு கிட்டத்தட்ட ட்யூஷன் எடுத்திருக்கிறார் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனான பாலுமகேந்திரா, தனது தலைமுறைகள் மூலம்.


    தமிழ், தமிழ் கிராமங்கள், தமிழர் அடையாளங்கள், தமிழர் பழக்க வழக்கங்கள் எல்லாம் தொலைந்து தொலைந்து தொலைந்து... நன்கு தமிழ் தெரிந்த கணவனும் மனைவியும் முற்றாக ஆங்கிலத்திலேயே உரையாடி, அடுத்த தலைமுறை பிள்ளையின் தாய் மொழியையும் கொல்லும் அவலம் பார்த்து ஆதங்கப்படும் ஒரு ஓய்வு பெற்ற பள்ளிக்கூட வாத்தியாரின் கிழப் பருவத்து நாட்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் பாலுமகேந்திரா.

    இந்த வாழ்க்கைக்கு இனி திரும்பத்தான் முடியுமா என்ற மலைப்பான கேள்வியுடன் கனத்த மவுனத்தைச் சுமந்து வெளியேறுகிறோம்.

    உள்ளது உள்ளபடியான பதிவு இது. தாத்தாக்களின் கைகளைப் பிடித்து நடந்த நாட்கள், தாத்தாக்கள் செதுக்கிக் கொடுத்த பொம்மைகளுடன் பொழுது போக்கிய பால்யம், ஆறும் பசும் வயல்களும் சுத்தக் காற்றும் சுவாசித்த கிராமத்துத் தருணங்களை மனதில் தேக்கியிருக்கும் யாரையும் தலைமுறைகள் தளும்ப வைக்கும்.

    இயக்குநர் பாலு மகேந்திராதான் இந்தப் படத்தின் முதன்மை பாத்திரம். வாழ்ந்திருக்கிறார். அந்தக் கண்களும், ஏக்கம் சுமந்த பார்வைகளும், ஒரு கலாச்சார சீரழிவைப் பார்த்து நிற்கும் கையாலாகாத்தனமும்.. கண்களிலேயே இன்னும் நிற்கின்றன!

    அவரது மகனாக நடித்திருக்கும் சசிகுமார், மருமகளாக வரும் ரம்யா சங்கர், ஊர் மனிதர்களாக தோன்றும் லட்சுமணன், அந்த பாதிரியார்.. எந்தப் பாத்திரத்தையும் சினிமாவில் பார்க்கிற உணர்வே இல்லை.

    பேரனாக வரும் சிறுவன் கார்த்திக் அற்புதம். ஒரு காட்சியில் வந்தாலும் படத்தில் நிறைந்திருக்கிறார் இயக்குநர் எம் சசிகுமார்.

    படத்தில் இரண்டு காட்சிகளில் சசிகுமாரும் ரம்யாவும் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள், அதுவும் குடும்ப விஷயங்களை. இத்தனைக்கும் கதைப்படி இருவருக்கும் தமிழ் நன்கு தெரியும். இந்தக் காட்சி மனதில் எரிச்சலைக் கிளப்புவது நிஜம். ஆனால், இதோ... பக்கத்து வீட்டில், மகன்- மகள் தமிழ் பேசிவிடக் கூடாது என்று தண்டனை முறையையே அறிவித்துள்ள பெற்றோரை நினைத்துப் பார்த்தால், பாலு மகேந்திரா சரியாகவே இந்த சமூக மாற்றங்களைக் கவனித்து வருகிறார் என்பது புரிந்தது.

    அதிகமில்லை, அளந்து அளந்து பேசும் பாலுமகேந்திராத்தனமான வசனங்கள்தான். ஆனால் அது போதுமானதாகவே இருக்கிறது இந்தப் படத்துக்கு.. வளவள என பேசாமல் காட்சிகளைப் பேச வைப்பதுதானே சினிமா மொழி!

    விறுவிறுப்பான திரைக்கதை இல்லை.. அதிரடியாக எந்தத் திருப்பமும் இல்லை. ஆனால் இவை ஏதுமில்லாமலேயே, தன் உணர்வுகளை ஒரு ரசிகனுக்குள் கடத்த முயலும் என்பதைக் காட்டியிருக்கிறார் பாலு.

    35 எம்எம்மில் மீண்டும் காட்சிகளைப் பார்ப்பது கொஞ்சம் புதுசாகத்தான் இருந்தது. அதுவே ஒரு எளிய கவிதைத்தனம் சேர்க்கிறது படத்துக்கு. இயற்கை தந்த ஒளியில், எந்த உறுத்தலான கூடுதல் நுட்பமும் சேர்க்காமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    இளையராஜாவின் இசை இந்தப் படத்தில் நிஜமான ஒரு சோதனை முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

    வசனங்கள் பேசும் இடங்களில் இசைக்கு வேலையில்லை. காற்றும், நதியும், பறவைகளும் சலசலத்து சங்கமிக்கும் காட்சிகளிலும் இசைக் கருவிகள் அமைதி காக்கின்றன. ஆனால் பாத்திரங்கள் பேசிக் கொள்ளாத காட்சிகளில் மட்டும் உறுத்தாமல் ஒரு தென்றலைப் போல வந்து போகிறது ராஜாவின் இசை... எது நிஜமான பின்னணி இசை என்பதற்கு இளம் தலைமுறையினருக்கு வகுப்பெடுத்திருக்கிறார் இசைஞானி!

    Thalaimuraigal review

    'அய்யோ தமிழும் தமிழ் கிராமங்களும் கலாச்சாரமும் அழிகிறதே... வீறு கொண்டெழுங்கள்' என்ற பிரச்சார தொனி இல்லாமல், ஆனால் அந்த மாதிரி உணர்வை பார்க்கும் நமக்குள் ஏற்படுத்தியிருக்கிறது பாலுமகேந்திராவின் தலைமுறைகள்.

    வணிக ரீதியிலான பலன்களை இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிட்டு, இந்தப் படத்துக்கு தயாரிப்பாளராக முன்வந்த சசிகுமார் பாராட்டுக்குரியவர்.

    English summary
    Balu Mahendra's Thalaimuraigal is a sensation movie that worries on the the present leaning trend in Tamil language and culture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X