Thalaivan Thalaivi Review: தலைவன் தலைவி விமர்சனம்.. பரோட்டாவும் சால்னாவும் போல சந்தோஷமா வாழுங்க!
சென்னை: தலைவன் தலைவி தலைப்புக்கு ஏற்றமாறு தாறுமாறான படத்தை இயக்குநர் பாண்டிராஜ் கொடுத்துள்ளார். சூர்யா, பிரியங்கா மோகனை வைத்து கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் ஆக்ஷன் மோடில் சென்று அடிவாங்கிய நிலையில், எங்கே இந்த படத்திலும் அதுபோன்ற அசம்பாவிதங்கள் வந்துவிடுமோ என்கிற பதற்றத்தை இடைவேளை காட்சி கொடுத்தாலும், இந்த முறை துண்டு மிஸ் ஆகாது என படையப்பா ரேஞ்சுக்கு பக்காவான படத்தைக் கொடுத்து மாஸ் காட்டியுள்ளார் இயக்குநர்.
விஜய் சேதுபதிக்கு மகாராஜா படத்துக்குப் பிறகு செம மாஸான படமாக இந்த தலைவன் தலைவி அமைந்திருக்கிறது. கடைசியாக வெளியான ஏஸ் படம் மிஸ் ஆனது போல ஆகவில்லை. திருச்சிற்றம்பலம் படத்துக்குப் பிறகு நித்யா மேனனுக்கும் தமிழ் சினிமாவில் செம வொர்த்தான படமாக உள்ளது. காதலிக்க நேரமில்லை இந்த ஆண்டு வெளியாகி கவுத்ததை போல கவுக்கவில்லை.

மாமன் படத்தில் சூரி இருந்தும் காமெடியே இல்லாமல், குடும்ப உறவுகள் குறித்து பாசமலர் படம் போல பாசத்தை பொழிந்து எடுத்த படமே கிராம மக்களை டச் செய்து பல ஊர்களிலும் ஓடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தலைவன் தலைவி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. சரி, இந்த படத்தின் கதை, பிளஸ் மற்றும் மைனஸ்களை விரிவாக பார்க்கலாம் வாங்க..
தலைவன் தலைவி கதை: பரோட்டா மாஸ்டர் ஆகாச வீரனுக்கும் (விஜய் சேதுபதி), பேரரசிக்கும் (நித்யா மேனன்) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆகாச வீரனுக்குத் தெரியாமல் குலதெய்வம் கோயிலில் குழந்தைக்கு மொட்டை போட அழைத்து வர, பாதி மொட்டை போட்டுக் கொண்டிருக்கும் போது ஆகாச வீரன் அங்கே வந்து என் மகள் மகிழினிக்கு நீ யாருடா மொட்டை அடிப்பது என முடித்திருத்தும் நபரான சோமனை (சென்ராயன்) அடித்து விடுகிறார். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏன் பிரிய நினைக்கின்றனர். மீண்டும் மனைவியுடன் சேர ஆகாச வீரன் எடுக்கும் முயற்சிகள் கைகொடுத்ததா? அனைத்துக்கும் யார் காரணம்? என ஏகப்பட்ட குடும்பங்களில் நடக்கும் கதைகளை கொத்து புரோட்டா போட்டு கொடுத்துள்ள படம் தான் இந்த தலைவன் தலைவி. பரோட்டா சூரி மட்டுமே இதில் மிஸ்ஸிங்.
படம் எப்படி இருக்கு?: பேரரசியை பெண் பார்த்துவிட்டு பரோட்டா பார்சலையும் கொடுத்து மயக்கி விடுகிறார் ஆகாச வீரன். ஏற்கனவே ரசிகர்களுக்குத் தெரிந்த பன் பரோட்டா, கிளி பரோட்டா, கொத்து பரோட்டாவை எல்லாம் தாண்டி புதுசாக ஆகாச வீரனின் ஸ்பெஷலான ஆகாச பரோட்டா எல்லாம் செய்து சாப்பாட்டு ராமியான பேரரசியை கவுத்துவிடுகிறார். ஆனால், இந்த சம்பந்தம் பேரரசியின் அண்ணனான ஆர்கே சுரேஷுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏதோ ஜென்ம பகை இருப்பது போல காட்டுகின்றனர். அது என்ன என்பதை நீங்களே படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
விஜய் சேதுபதி வெறும் பரோட்டா மாஸ்டர் மட்டுமல்ல அவங்க குடும்பமே ஐட்டங்காரங்க என சிலர் ஏற்றிவிட நித்யா மேனனின் அப்பாவான செம்பன் வினோத் ஜோஸ் மற்றும் ஆர்கே சுரேஷ் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர். ஆனால், குடும்பத்தை மீறி ஆகாச வீரன் தான் வேண்டும் என ஓடி வரும் நித்யா மேனனும் அந்த பட்டாசு சேஸிங் ஃபைட்டும் தீபாவளி பண்டிகையை இப்போதே கொண்டு வந்தது போல உள்ளது.
வழக்கம் போல மருமகளுக்கு ஏற்படும் மாமியார், நாத்தனார் பிரச்சனைகள் தான் இந்த கதைக்கும் வில்லனாக மாறுகிறது. விஜய் சேதுபதியின் அம்மா பொட்டுவாக தீபா நடிப்பில் மிரட்டியுள்ளார். டாக்டர் படத்தில் அப்படி நடித்த தீபாவா இது? என வியக்க வைக்கிறார். அவருக்கு மேலே ஒரு படி சென்று விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்துள்ள நம்ம பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியனும் நாத்தனார் கொடுமைகளை நல்லா காட்ட படம் சூடு பிடிக்கிறது. அதன் பிறகு வண்டி புறப்பட்டு விட்டது என தீபா கிண்டல் செய்ய நித்யா மேனன் அம்மா வீட்டுக்கு கிளம்பிப் போவதுமாக படம் நகர்கிறது. கடைசியில், விஜய் சேதுபதி அவர் வேண்டாம் என சொல்லக் காரணம் என்ன? கடைசி வரை தன்னுடைய மனைவியுடன் சேர விஜய் சேதுபதி போராடுவது ஏன்? கோர்ட்டில் இருவருக்கும் டைவர்ஸ் கிடைக்கிறதா? இல்லையா? என குடும்ப பிரச்சனைகளை கையாண்ட விதமும் ரசிகர்களுக்கு போரடிக்காத வகையில் காமெடியுடன் கலந்து சொன்ன விதமும் சூப்பர்.
பிளஸ்: பாண்டிராஜ் ரசிகர்களின் பல்ஸ் புரிந்து எடுத்துள்ள விதம் படத்திற்கு பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. கொஞ்சம் லெந்தாக போனால் சீரியலாக மாறிவிடும் அபாயம் உள்ள கதையை அளவான மீட்டருடன் ஆக்ஷன் படம் என்கிற டோனுக்குள் கொண்டு வந்து, டிராக் மாறி சென்றால் குடும்ப ஆடியன்ஸை தக்க வைக்க முடியாதே என்கிற கவனத்துடன் கையாண்ட விதம் சிறப்பு. விஜய் சேதுபதி ஒரு பக்கம், நித்யா மேனன் ஒரு பக்கம் நடிப்பில் அசத்த இன்னொரு பக்கம் விஜய் சேதுபதியின் அம்மா தீபா, நித்யா மேனனின் அப்பா செம்பன் வினோத் என அனைவரது நடிப்பும் அல்டிமேட். குல தெய்வ கோயில் லொகேஷனிலே படம் நகர்ந்தாலும், அதை அழகாக படமாக்கிய விதத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணனும் தூள் கிளப்பி தூண்களாக மாறியுள்ளனர். பாதி மொட்டையுடன் அழாமல் அந்த குழந்தை நடித்திருப்பதும் அவ்வளவு அழகாக உள்ளது. அதற்கு நிச்சயம் பாண்டிராஜை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
மைனஸ்: விஜய் சேதுபதி, நித்யா மேனனின் காட்சிகளை தாண்டி சீரியல் போல சில இடங்களில் படம் சறுக்குவதையும் பார்க்க முடிகிறது. ஆர்கே சுரேஷுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகள், இடைவேளை காட்சிக்கு முன்பாக அருவா எடுத்துக் கொண்டு விஜய் சேதுபதி வருவது, அந்த துப்பாக்கி சீன் எல்லாம் கொஞ்சம் மைனஸ் ஆக தெரிகிறது. ஆனால் மொத்தத்தில், பேப்பருக்கு கொடுக்கும் மதிப்பை விட மனுஷங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதும் ச்சி.. ச்சின்னு சொல்றதும் இந்த வாய் தான்.. சிவ சிவன்னு சொல்றதும் இந்த வாய் தான் என வரும் வசனமும் எல்லா குடும்ப சண்டைக்கும் ஒரு கேவலமான சப்பை காரணம் தான் இருக்கும் என போகிற போக்கில் சொல்வதும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. படத்தை பார்த்துட்டு பரோட்டா கடைக்கு வண்டியை விடுங்க!


Click it and Unblock the Notifications











