Thangalaan Review: தங்கலான் விமர்சனம்.. ரஞ்சித்தின் அரசியல்.. விக்ரமின் நடிப்பு மிரட்டுது.. ஆனால்?
நடிகர்கள்: சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
இயக்கம்: பா. ரஞ்சித்
ரேட்டிங்: 3.5/5
சென்னை: தங்கத்தை தேடி எடுக்க வெள்ளையர்களுக்கு உதவும் தங்கலானாக சியான் விக்ரம் படம் முழுவதும் தனது ஒட்டுமொத்த நடிப்பையும் வெளிக்காட்டி மிரட்டி எடுத்து விட்டார். இந்த படத்தை சியான் விக்ரமின் நடிப்புக்காக மட்டுமே ரசிகர்கள் தாராளமாக தியேட்டர்களுக்கு சென்று பார்க்கலாம்.
பா. ரஞ்சித் ஏன் கோலார் தங்க சுரங்க கதையை கையிலெடுத்தார் என்பதற்கு படம் முழுவதும் அவர் தனது சாதிய அரசியல் பற்றிய வரலாற்றை புத்தர் மற்றும் நாட்டார் வழிபாட்டு முறையில் ஓங்கி ஒலித்திருக்கிறார்.

சியான் விக்ரம் ஒரு ஹீரோ என்றால் இன்னொரு ஹீரோவாக ஜி.வி. பிரகாஷ் தனது பின்னணி இசையால் படத்தை முதல் காட்சியில் இருந்து கடைசி எண்ட் கிரெடிட்ஸ் வரை பின்னணி இசையால் தாங்கி பிடித்திருக்கிறார். உண்மையான பூர்வகுடி மக்களின் வாழ்வியலையும் அவர்கள் படும் வலியையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியையும் உணர்த்தும் கதையில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
தங்கலான் கதை: கோலார் பகுதியில் தங்கத்தை தேடி பல அரசர்கள் அலைந்த நிலையில், ஆங்கிலேயர்களும் தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். வட ஆற்காடு பகுதியில் வேப்பூர் கிராமத்தில் உள்ள மக்கள் தான் தங்கத்தை எடுக்க சரியான ஆட்கள் என ஆங்கிலேய துரையான கிளெமண்ட் (டேனியல் கால்டாகிரோன்) தங்கலான் (சியான் விக்ரம்) இருக்கும் கிராமத்துக்கு வருகிறான். தங்கலான் தனது மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் தனது குழந்தைகள், மக்கள் என விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால், அந்த பகுதியில் உள்ள ஜமீன் (முத்துகுமார்) மக்களிடம் இருந்து நிலத்தை அபகரித்து அவர்களை அந்த நிலத்திலேயே அடிமைகளாக வேலை வாங்கி வருகிறார். இந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் வெள்ளைக்காரனுக்கு தங்கம் தேடுவதில் உதவி செய்ய வேண்டும் என பசுபதி, ஹரி உள்ளிட்ட சிலருடன் தங்கலான் ஆனை மலைக்கு செல்கிறார்.

தங்கத்தை பற்றியும் அதை காக்கும் நாகர் இன தலைவி ஆரத்தி பற்றியும் தனது குழந்தைகளுக்கு விக்ரம் கதை சொல்லும் வழியாக தங்கலானின் பாட்டன் காடயன் ஆரத்தியை வீழ்த்தி சோழ மன்னனுக்கு எப்படி தங்கத்தை எடுத்துக் கொடுத்தான் என்கிற கதையை காட்டுகின்றனர்.
தங்கத்தை எடுத்துக் கொடுத்தால் வெள்ளைக்காரன் நம்மை மேன்மைப்படுத்துவான், நம் அடிமை விலங்கு அகன்று போகும் என தனது மக்களுடன் போராடும் தங்கலானுக்கு தங்கம் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் பேசும் அரசியல்: தங்கலான் படத்தின் மூலம் தான் சொல்ல வந்த அரசியலை பா. ரஞ்சித் பேசியிருக்கிறார். கோலார் தங்க வயலில் பட்டியலின மக்கள் எப்படி வேலை பார்த்து தங்கத்தை எடுத்துக் கொடுத்தனர் என்கிற கதையுடன் புத்தர் சிலை துண்டிக்கப்பட்டது, உழைக்கும் மக்களுக்கே நிலம் சொந்தம், ரவிக்கை அணியாத பெண்கள் ஆடை அணிய வைக்கும் காட்சி, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும், இந்த நிலத்தின் பூர்வ குடிகள் நாங்கள் தான், வர்ணாசிரமம் எப்படி மூத்த குடி மக்களை பட்டியலின மக்களாக மாற்றியது என அனைத்து அரசியலையும் ஆணித்தரமாக பேசியிருக்கிறார் பா. ரஞ்சித்.
பலம்: தங்கலான் படத்தின் பெரும்பலம் சியான் விக்ரம் தான். தங்கலானாகவும் காடையனாகவும், ஆரன், திப்பு சுல்தான் என இன்னும் பல பரிணாமங்களில் சியான் விக்ரமை காட்டியுள்ள விதமும் அவரும் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் இந்த ஒரே படத்தில் கொட்டி நடித்திருக்கும் நடிப்புக்காகவே படத்தை தாராளமாக பார்க்கலாம். பார்வதியுடன் கொஞ்சுவது, அந்த வயித்தில் இருந்து நெஞ்சுக்கு கையை கொண்டு செல்லும் காட்சி என ரொமான்ஸ் காட்சியிலும் மனைவி கேட்ட சட்டையை வாங்கிக் கொடுத்து விட்டு, இதை போட்டுக் கொண்டால் என் புள்ளைங்க எப்படி பால் குடிக்கும், நான் தான் மூத்த பிள்ளை என பேசும் வசனங்கள் எல்லாமே அடிபொலி.

மஞ்சள் பேயாக காட்டப்படும் தங்கம், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற வசனத்தை சரியாக பயன்படுத்திய இடம், ஆரத்தியாக நடித்த மாளவிகா மோகனன், அவரை காட்டும் இடங்களில் வரும் சிஜி காட்சிகள் என அந்த பகுதியும் சிறப்பாகவே உள்ளது. கிளெமண்ட் துறையாக வரும் டேனியலின் நடிப்பும் பூணூல் மாட்டிக் கொண்டு வைகுண்டத்துக்கு போக வேண்டும் என அலப்பறை செய்யும் கெங்குவாக நடித்துள்ள பசுபதியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
பலவீனம்: ஆஸ்கர் விருது கிடைக்கக் கூடிய நடிப்பை சியான் விக்ரம் கொடுத்திருக்கிறார். படத்திற்கு தேவையான கூஸ்பம்ப்ஸ் இசையை ஜி.வி. பிரகாஷ் கொடுத்திருக்கிறார். மக்களின் துயரத்தை ரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்தியிருந்தாலே இந்த படம் உலகளவில் கொண்டாடக் கூடிய படமாக இருந்திருக்கும். ஆனால், இதில், தேவையில்லாமல், ஆரத்தி, மாயாஜாலன், ஃபேண்டஸி, பேய்க் கதை என பா. ரஞ்சித் திணித்தது பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.
அதிலும், முதல் பாதியில் ஏகப்பட்ட தொய்வு படத்தை ஒரு கட்டத்துக்கு மேல் சோதித்து விடுகிறது. கடைசியில் கிளைமேக்ஸில் சியான் விக்ரம் யார் என சொல்லப்படும் இடமும் பெரிதளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. குறைகளை தாண்டி சியான் விக்ரமின் நடிப்பு மற்றும் இந்த படத்திற்காக உழைப்பை கொட்டியிருக்கும் அத்தனை டெக்னீஷியன்களின் பங்களிப்பு மற்றும் நடிகர்களின் நடிப்புக்காகவே இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். ஹாலிவுட்டில் வெளியான அப்போகலிப்டா, அவதார் படங்களை போல தமிழில் ஒரு பெரும் முயற்சியாக இந்த தங்கலான் பேசப்படும்.


Click it and Unblock the Notifications











