The Family Star Review: தி ஃபேமிலி ஸ்டார் விமர்சனம்.. காட்டு மொக்கை.. வேஸ்ட் பண்ண விஜய் தேவரகொண்டா!
நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர்
இசை: கோபி சுந்தர்
நேரம்: 2h 35m
இயக்கம்: பரசுராம்
சென்னை: அறிமுக இயக்குநர்களை நம்பி படம் பண்ண மாட்டேன் என பயந்து நடுங்கும் விஜய் தேவரகொண்டா கீதா கோவிந்தம் படத்தை தனக்கு கொடுத்த இயக்குநர் பரசுராமை நம்பி மோசம் போன கதை தான் இந்த ஃபேமிலி ஸ்டார்.
மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனியை வைத்து கடைசியாக பரசுராம் எடுத்த கிரிஞ்ச் டிராமாவான சர்காரு வாரி பாட்டா படமே ஓடாத நிலையில், மீண்டும் அவரை நம்பி எப்படி விஜய் தேவரகொண்டா தலையை கொடுத்தார் என்று தான் டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சீதா ராமம், ஹாய் நான்னா படங்களில் வொர்க்கவுட்டான மிருணாள் தாகூர் மேஜிக்காவது இந்த படத்தில் வொர்க்கவுட் ஆனதா என்கிற முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
தி ஃபேமிலி ஸ்டார் கதை: பட்ஜெட் பத்மநாபன் போல ஒரு ரூபாய் செலவு செய்தாலும் பார்த்து பார்த்து செலவு செய்யும் மிடில்கிளாஸ் மாதவனாக கோவர்தன் எனும் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். அவரது வீட்டில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷா குடி வருவது போல மிருணாள் தாகூர் இந்து எனும் கதாபாத்திரத்தில் குடி வருகிறார். ஆரம்பத்தில் இந்துவுக்காக பறந்து பறந்து உருகி உருகி வரும் ஃபேமிலி ஸ்டார் கோவர்தன் ஒரு கட்டத்தில் இந்துவுடைய மோடிவ் தெரிந்துக் கொண்டு அவரை வெறுத்து ஒதுங்க ஆரம்பிக்கிறார். ஆனால், விடாது கருப்பாக இந்து துரத்த இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? என்பது தான் இந்த ஃபேமிலி ஸ்டார் படத்தின் கதை.

திரைக்கதை எப்படி?: ஆரம்பத்தில் லோக்கலில் நடக்கும் ஃபேமிலி டிராமா ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போல இருந்தாலும் நல்லாவே இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கதையை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று கழுத்தில் இயக்குநர் வைக்கும் பிளேடு தான் அய்யோ ஆளவிடுடா சாமி என அலற வைக்கிறது. சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதையை எப்படி உருவாக்க வேண்டும் என இயக்குநர் பரசுராம் இயக்கியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். டிரெய்லரே மொக்கையாக இருந்த நிலையில், படம் படுமொக்கையாக இருப்பது இந்த முறையும் விஜய் தேவரகொண்டாவை நம்பி போன ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தான்.

பிளஸ்: படத்தில் இடம்பெற்றுள்ள 2 பாடல்கள் நன்றாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள படம் என்பதால் புரொடக்ஷன் வேல்யூ அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அது தேவையில்லாத ஆணியாக கதை மற்றும் திரைக்கதை வலுவில்லாமல் இருப்பதால் மாறி விடுகிறது. வழக்கம் போல ஹீரோயினுக்கு போட்டியாக அழகாக இருக்கும் விஜய் தேவரகொண்டா. அவரது அழகில் மயங்கி வெளிநாட்டு பெண்கள் அவரை கடத்திக் கொண்டே செல்வது எல்லாம் டூமச்.

மைனஸ்: ஜகபதி பாபுவின் வழக்கமான நடிப்பு, வெண்ணிலா கிஷோர் எவ்வளவு முயற்சி பண்ணாலும் சிரிப்பே வராத காமெடி, கதை, திரைக்கதை, இயக்கம், ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லா ஏரியாவும் இந்த ஃபேமிலி ஸ்டார் படத்தில் மைனஸ் ஆகத்தான் இருக்கிறது. உங்களுக்கு விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூரை ரொம்ப பிடிக்கும் என்றால் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம். குஷி படம் அளவுக்கு கூட இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











