The Substance Review: இந்த படத்தை பார்த்தா வாந்தி தான் வரும்.. பேராசை பெருநஷ்டம்.. ஐ விக்ரமே தான்!
நடிகர்கள்: டெமி மூர், மார்கரேட் குவாலி
இசை: ராஃபெர்டி
இயக்கம்: கொராலி ஃபர்கீட்
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பிரெஞ்சு இயக்குநரான கொராலி ஃபர்கீட் இயக்கத்தில் வெளியாகியுள்ள தி சப்ஸ்டன்ஸ் (The Substance) படத்தை பற்றித்தான் சோஷியல் மீடியா முழுக்கவே பேச்சாக உள்ளது. வயதான சூப்பர் மாடல் அதன் காரணமாக ஒதுக்கப்படும் நிலையில், இளமையான தோற்றத்துக்கு மாற நினைக்க அவருக்கு கிடைக்கும் ஒரு மருந்தை ஊசி மூலமாக உட்செலுத்த அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதை இரண்டரை மணி நேரம் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஹாரர் த்ரில்லர் படம் போல காட்சிக்கு காட்சி திகிலூட்டும் இந்த படம் ஹாலிவுட்டில் தியேட்டர்களில் பாக்ஸ் ஆபிஸில் கொடுகட்டி பறக்கிறது. கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான இந்த படம் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நிர்வாணக் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருப்பதை தாண்டி படம் பயமுறுத்துவதை பார்க்கவே ரசிகர்கள் இந்த படத்தை ரொம்பவே ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தி சப்ஸ்டன்ஸ் கதை: 50 வயதை கடந்தாலும் பிரபல நடிகை எலிசபெத் ஸ்பார்க்கிள் (டெமி மூர்) கவர்ச்சி உடையில் நடனமாடி ரசிகர்களை கவர்கிறார். ஆனால், அவர் வேலை செய்யும் டிவியின் ஓனர் இனிமேல் உனக்கு வயதாகி விட்டது. வேலையை விட்டு கிளம்பிடு என சொல்ல ஸ்பார்க்கிள் ஸ்பார்க் ஆகிறார். எலிசபெத்துக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் சொல்லும் இடத்துக்கு சென்று பார்க்கும் அவருக்கு ஒரு பென் டிரைவ் கிடைக்கிறது. அதில், ஒரு சப்ஸ்டன்ஸ் எனும் மருந்து குறித்தும் அதை செலுத்திக் கொண்டால் இளமையாக மாறிடலாம் என்றும் கூறப்பட, அதை முயற்சி செய்து பார்க்கிறார். இளமையான தோற்றம் வந்தாலும், அங்கே ஒரு செக் வைப்பது தான் படத்தில் பயங்கரமான ட்விஸ்ட்டே. 7 நாட்களுக்கு இளமையாகவும் 7 நாட்களுக்கு வயதான பெண்ணாகவும் வாழ வேண்டும் என்றும் மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
பேராசை காரணமாக இளமையாக ஆசைப்படும் எலிசபெத் இளமையாக மாறிய பின்னர் மீண்டும் வயதான தோற்றத்துக்கு செல்வாரா? அதை தவிர்க்க நினைக்கும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை படு பயங்கரமான காட்சிகளாக திரையில் காட்டி ரசிகர்களை வாந்தி எடுக்க வைத்து விடுகிறார் இயக்குநர்.
டீ ஏஜிங் பண்ணல: இந்த படத்துக்கு டீ ஏஜிங் பண்ணியிருக்கலாம் என்று ஆரம்பத்தில் தோன்றினாலும், இளமையான நபர் வேறு ஒரு பெண்ணாக தெரிய வேண்டும் என்பதற்காக டீ ஏஜிங்கை தவிர்த்து விட்டு இயக்குநர் இளம் நடிகையான மார்கரேட் குவாலியை Sue கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளது அட்டகாசம்.
சபாஷ் சரியான போட்டி: டெமி மூர் மற்றும் மார்க்கரேட் குவாலி இருவரும் போட்டிப் போட்டு நடித்து மிரட்டியுள்ளனர். இருவரது முழு நிர்வாணக் காட்சிகளும் படத்தை ரசிகர்கள் தனியாக மட்டுமே பார்க்க வைத்து விடுகிறது. டெமி மூரின் உடலை கிழித்துக் கொண்டு மார்கரேட் குவாலி வரும் இடத்தில் இருந்தே அவரது நடிப்பு அட்டகாசம். நடிகைகள் அழகாக தெரிவதற்காக ஏகப்பட்ட காஸ்மெடிக் சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜரி, உதட்டை பெரிதாக்குவது, முன்னழகை பெரிதாக்குவது, பின்னழகை பெரிதாக்குவது என மருத்துவத்தை நாட ஒரு சில நேரங்களில் சில நடிகைகள் அதனால் விளைவுகளை சந்தித்து கஷ்டப்படுவதை எல்லாம் பார்த்திருக்கிறோம். அந்த கதையை மையமாக வைத்து எப்படி இருக்கிறோமோ அதை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றும் பேராசை பெரு நஷ்டம் என்பதையும் இந்த படத்தின் மூலம் இயக்குநர் நெற்றி பொட்டில் அடித்தது போல சொல்லியிருக்கிறார்.
பிளஸ்: லீடு ரோலில் நடித்துள்ள இரு நடிகைகளின் நடிப்பு தான் படத்திற்கு ஹைலைட். சிஜி, பிராஸ்தெடிக் மேக்கப், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைவரும் இந்த படத்துக்காக பக்காவாக வேலை பார்த்துள்ளனர். அடுத்த ஆண்டு ஆஸ்கர் போட்டியில் இந்த படம் இடம்பெறும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
மைனஸ்: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தை போலவே இந்த படத்தின் சில காட்சிகள் உள்ளன. மேலும், அந்த கிளைமேக்ஸ் காட்சி சுத்தமாக இயக்குநர் அதுவரை படத்தை கொண்டு சென்ற விதத்திற்கு முற்றிலும் போங்காட்டமாக மாறிவிட்டது. அந்த காட்சியை ஏதாவது கனவு காட்சியாக மாற்றி இந்த மோசடியில் தன்னை சிக்க வைத்த நபரை கண்டுபிடித்து நடிகை அந்த சிக்கலில் இருந்து தப்பித்து இருந்தால் இன்னமும் படம் சிறப்பாக அமைந்திருக்கும். அமேசான் பிரைம் ஓடிடியில் விரைவில் இந்த படம் வெளியாக காத்திருக்கிறது. ஸ்ட்ரிக்ட்லி ஃபார் அடல்ட் ஒன்லி!


Click it and Unblock the Notifications











