The YinYang Master Review: ராணியை ஆட்டிப் படைக்கும் ராஜநாகம்.. ஓடிடியில் மாஸ் காட்டும் சீனப் படம்!
நடிகர்கள்: சென் குன், சோ சுன்
இயக்கம்: லீ வெய்ரன்
ஓடிடி: நெட்பிளிக்ஸ்
நேரம்: 2 மணி நேரம் 12 நிமிடம்
சென்னை: மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களுக்கும் புராண கதை படங்களுக்கும் எப்போதுமே சீனாவில் ரசிகர்கள் ஏராளம் என்பதால் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் ஏகப்பட்ட சீனப் படங்கள் உருவாகி வருகின்றன.
ப்ரூஸ்லீ, ஜெட்லீ, ஜாக்கி சான் என பல ஸ்டார் நடிகர்கள் உலகளவில் பிரபலம் அடைந்துள்ள நிலையில், ஏகப்பட்ட இளம் சீன நடிகர்களும் பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகின்றனர்.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் The YinYang Master திரைப்படம் பற்றிய முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
தி யின் யாங் மாஸ்டர் படத்தின் கதை: சீனாவின் பிரபல மாஸ்டரிடம் ஹீரோ கிங் மிங் (சென் குன்) சிறு வயதிலேயே ஏகப்பட்ட மந்திரக் கலைகளை கற்க வருகிறார். சிறு பிள்ளையாக வரும் அவருக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிக்க உனது அம்மாவின் குரல் கேட்கிறதா? என காது கொடுத்து டெலிபோர்டேஷன் முறைப்படி கேட்கும் பயிற்சியை கற்றுக் கொடுக்கிறார்.

குழந்தையாக வரும் கிங் மிங் இளைஞராக மாறும் போது அவருக்கு அவரது அம்மாவின் குரல் கேட்கிறது. அப்போது நீ தேர்ந்த சிஷ்யனாக மாறிவிட்டாய் என சொல்லும் போதே, அனகொண்டாவை விட ஆயிரம் மடங்கு பெரிய ஆதி சேஷன் நாகம் போன்ற பிரம்மாண்ட பாம்பு அவர்களை அட்டாக் செய்ய வருகிறது.
அதிலிருந்து சிஷ்யனை காப்பாற்றும் முயற்சியில் அந்த குரு உயிர் இழந்து விடுகிறார். கடைசி நேரத்தில் இந்த நாகத்தை தற்போது சிறை மட்டுமே பிடித்திருக்கிறோம். இதனை முழுமையாக அழிக்க ஒரு ராணியை சென்று பார் என உத்தரவிடுகிறார்.
குரு போயாவின் உத்தரவை ஏற்று அந்த ராஜ்ஜியத்துக்கு கிங் மிங் செல்ல, இவரை போலவே மந்திர சக்திகள் அறிந்த 4 பேர் அந்த ராஜ்ஜியத்துக்கு வருகின்றனர்.

அந்த 4 பேரையும் அந்த நாட்டின் இளவரசி வரவேற்கிறார். அந்த நாட்டில் உள்ள ராணி உடம்பில் தான் அந்த ராஜ நாகம் குடிக் கொண்டு பல ஆண்டுகளாக அவரை உயிருடன் வைத்திருக்கிறது என்கிற ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஹீரோ அங்கே நடக்கும் ஒவ்வொரு மர்மங்களையும் கண்டறிய முயல்கிறார். கடைசியில், யார் உடம்பில் ராஜ நாகம் குடிக் கொண்டிருக்கிறது. அதனை எப்படி ஹீரோ அழிக்கிறார் என ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் செம ஃபேண்டஸி படத்தை இயக்குநர் லீ வெய்ரன் கொடுத்துள்ளார்.
பிளஸ்: சிஜி காட்சிகள் எல்லாம் எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் இருப்பதே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய ஆறுதலாக உள்ளது. ஒரே மாதிரி கதை செல்லாமல், வில்லியின் பின்புலம், அவரது பின் கதை மாஸ்டர் ஏன் தனது சிஷ்யனை இங்கே அனுப்பி வைக்கிறார். அந்த ராஜநாகத்துக்கு ஏன் அந்த பெண் அடைக்கலம் தந்திருக்கிறார் என திரைக்கதையை சிறப்பாக செதுக்கி உள்ளனர்.

ஹீரோவாக நடித்துள்ள சென் குன், வில்லியாக நடித்துள்ள சோ சுன், நண்பராக வரும் வில்லியம் சான் என ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் நடிப்பில் மிரட்டி உள்ளனர். அந்த கிளைமேக்ஸில் வரும் பிரம்மாண்ட ராஜநாகமும் அதை எதிர்த்து ஹீரோவும் கழுகாக மாறி போராடும் அவரது நண்பரின் காட்சிகள் சிஜி மிரட்டல் என்றே சொல்லலாம்.
மைனஸ்: மாயாஜாலம் நிறைந்த படம் என்றாலும், ஒரு இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக படம் செல்வது ஒரு கட்டத்தில் சளிப்பை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸ் காட்சியில் வில்லியின் பாவாடைக்குள் இருந்து பாம்பு வரும் காட்சி எல்லாம் பார்த்தால் பயத்துக்கு பதில் இயக்குநரின் சேட்டை தான் நினைவுக்கு வந்து சிரிக்க வைக்கிறது.

சிஷ்யனின் குருவையும் வில்லனையும் வில்லியின் காதலையும் வைத்து கிளைமேக்ஸில் தலையையே சுற்றி என்ன தான் சொல்ல வரீங்க என என்றே கேட்க வைத்து விடுகிறது. மார்வெலின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தில் இருந்து சில சிஜி காட்சிகள் அப்பட்டமாக சுடப்பட்டதாக இந்த படம் வெளியான போது சர்ச்சைகள் வெடித்தன. ஆனால், அதையெல்லாம் தாண்டி படம் நல்ல கலெக்ஷனையும் அள்ளியுள்ளது.
பார்க்கலாமா? வேண்டாமா? நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெற்றுள்ள இந்த சீனத் திரைப்படத்தில் எந்தவொரு ஆபாசக் காட்சிகளும் இல்லை. பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களை போன்று சீனாவின் புராதன படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்கள் தாராளமாக இந்த படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்!


Click it and Unblock the Notifications











