For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திருமகன் - பட விமர்சனம்

  By Staff
  |

  மீண்டும் ஒரு கிராமத்துப் படம். வீரமும், விவேகமும் நிறைந்த தமிழ் மண்ணின் பாரம்பரியத்தையும், உறவுகளுக்கு அது கொடுக்கும்மரியாதையையும் விளக்கும் வகையில் வீரமகனாய் வந்துள்ளான் திருமகன்.

  கொஞ்ச காலமாக காணாமல் போயிருந் தமிழகத்துப் பட்டி தொட்டிகள் பட்டையைக் கிளப்ப, படையெடுத்துக் கிளம்பி விட்டன.

  பாரதிராஜாவின் முதுகில் ரொம்ப காலமாக பயணித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் வெள்ளந்திக் கிராமங்கள் இப்போது வேறு முதுகுகளுக்கு மாறத்தொடங்கியுள்ளன.

  சேரன், அமீர், பாலா என பலர் படை படையாய் கிளம்ப அந்த வரிசையில் ரத்னகுமாரும், எஸ்.ஜே.சூர்யாவும் சேர்ந்து நடத்தியுள்ள கிராமத்துதிருவிழாதான் இந்த திருமகன்.

  டைட்டிலில் இருந்து வணக்கம் கூறி வெள்ளித் திரையை கீழே இறக்குவது வரை ரண்டக்க ரண்டக்க என நெஞ்சுக்குள் வாடிப்பட்டி அடியோடு,உற்சாகத் துள்ளலோடு படம் பார்க்க வைத்திருக்கிறார்கள் ரத்னகுமாரும், எஸ்.ஜே.சூர்யாவும்.

  பருத்தி வீரன் இப்போதுதான் வந்து பட்டி தொட்டிகளில் புகுந்து அலப்பறை செய்து கொண்டுள்ளான். கூடவே இப்போது திருமகனும் வந்துவிட்டான். கேட்கணுமா கும்மாளத்திற்கு!

  திருமகனில், எஸ்.ஜே.சூர்யாவின் பிளேபாய் இமேஜை அப்படியேத் தூக்கி கடாசி விட்டார் இயக்குநர் ரத்னகுமார். புத்தம் புதிய சூர்யாவை, அடஇது நம்ம சூர்யாவா என்று ஆச்சரியத்தோடு கேட்கும்படியாக முற்றிலும் மாற்றி விட்டார்.

  திருமகன் கதை ரொம்ப சிம்பிள்ண்ணே. தேனி பக்கம் கரிசல் காடு கிராமத்தில் படம் தொடங்குகிறது. அந்த ஊரின் பெரிய மனிதர் மலைச்சாமி(விஜயக்குமார்), ஒரே மகன் தங்கப்பாண்டி (எஸ்.ஜே.சூர்யா). மனிதாபிமானமும், சொன்ன சொல்லைக் காக்க வேண்டும் என்ற வைராக்கியமும், சுத்தமனசுமாய் இருக்கிற நல்ல மனிதர் மலைச்சாமி. கிராமத்து மக்கா, மலைச்சாமி மீது உயிரையே வைத்திருக்கிறார்கள்.

  தங்கப்பாண்டி, விளையாட்டுப் பிள்ளை, எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால் போன போக்கிலும், கண் போன போக்கிலும் உருண்டு, புரண்டுஉல்லாசமாய் சுற்றித் திரியும் ஜல்லிக் கட்டுக் காளை.

  இந்த காளை, ஒரு கன்னியின் கண்களில் சிக்கித் தொக்கிப் போகிறது. அவள் மாயக்கா (மீரா ஜாஸ்மின்). தங்கப் பாண்டிக்கு நேர் எதிராக படுவறுமையான குடும்பத்துப் பெண். பானை செய்து பிழைக்கும் சாதாரண குடும்பத்துப் பெண்.

  தங்கப்பாண்டிக்கு, முறைப் பெண்ணான ராசாத்தியை (ப்ரீத்தி வர்மா) கட்டி வைத்து விட வேண்டும் என அவனுடைய அம்மாவும், சகோதரியும்ஆசைப்படுகிறார்கள். தங்கப்பாண்டிக்கோ மாயக்கா மீது காதல் பிறக்கிறது. மறுபக்கம் ஊரில் ரவுசு பண்ணிக் கொண்டு திரியும் லோக்கல் பெண்மைனாவுக்கும், தங்கப்பாண்டி மீது ஒரு கண். தங்கப்பாண்டியைக் கவிழ்த்து காலடியில் போட ஒரு கணக்காக பின்னாடியே திரிகிறாள்.

  மாயக்கா மீது கொண்ட காதலில் மருகித் தவிக்கிறான் தங்கப்பாண்டி. ஆனால் மலைச்சாமிக்கு இதெல்லாம் தெரியாது. அவர் பாட்டுக்கு, தனதுநண்பனான சிவலிங்கத்திடம் (ராதாரவி) உன் பொண்ணு வைரத்துக்குத்தாண்டா (லக்ஷனா) என் மகன் என்று வாக்கு கொடுத்து விடுகிறார். வைரம்,ஒரு ஊனமுற்ற பெண்.

  தங்கப்பாண்டி ராமர் மாதிரி. தந்தை கிழித்த கோடைத் தாண்ட மாட்டான். என் பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டான். அவன் என் பிள்ளை என்கிறநம்பிக்கையில், சிவலிங்கத்திடம் வாக்கு கொடுத்து விடுகிறார் மலைச்சாமி.

  ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிப் போகிறது. மாயக்காவின் காதல் வீட்டுக்குத் தெரிய வருகிறது. கொந்தளிக்கிறது வீடு. மாயக்காவை மறந்துவிட்டு ராசாத்தியை கட்டிக்கோ என்று அம்மாவும், சகோதரியும் வற்புறுத்துகிறார்கள். மறுபுறம் அப்பா மலைச்சாமியோ, வைரத்தைத்தான்கட்டிக்கணும், நான் வாக்கு கொடுத்துட்டேன் என்று வீராப்பாக நிற்கிறார்.

  இடையில் சிக்கித் தவிக்கும் தங்கப்பாண்டி, அப்பாவிடம் பொறுமையாக பேசி தனது காதலை எடுத்துச் சொல்கிறார். தந்தையும் சமாதானம் அடைந்துமகனின் காதலை ஆசிர்வதிக்கிறார். ஆனால் அடுத்த நாள் காலையில் அவரது பிணம் ஊர்க் கோவிலில் கிடக்கிறது.

  நண்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காக்க முடியாமல் உயிரை விட்டு விடுகிறார் மலைச்சாமி. தந்தை இறந்த பிறகுதான் அவர் கொடுத்தவாக்குறுதி தங்கப்பாண்டிக்குத் தெரிய வருகிறது. உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு முடிவை எடுக்கிறான். தனது காதலியின் உதவியோடு.

  அது என்ன முடிவு, என்ன நடக்கிறது, மாயக்கா - தங்கப்பாண்டி சேர்ந்தார்களா என்பதுதான் படத்தின் முக்கியமான ஏரியா. அதனால் அதை மட்டும்சொல்லாமல் விட்டு விடுகிறோம்.

  படத்தில் யாருமே நடிக்கவில்லை. அச்சு அசலாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக விஜயக்குமார், ராதாரவி, மீரா ஜாஸ்மின், எஸ்.ஜே.சூர்யாஆகியோர் நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். அதிலும் ராதாரவி, விஜயக்குமாரின் நடிப்பு படு அமர்க்களம். கிராமத்து பெருசுகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

  எஸ்.ஜே.சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு மைல்கல். ரஜினிக்கு எப்படி முரட்டுக்காளையோ அதுபோல சூர்யாவுக்கு திருமகன்.

  தன் மீது பற்றிக் கிடக்கும் பிளேபாய் இமேஜே அப்படியே தூள் தூளாக நொறுக்கித் தள்ளி விட்டார் திருமகன் மூலம். என்ன, வசனம்பேசும்போதுதான் எலியை எக்குத் தப்பாக தின்று விட்டு ஏப்பம் விடுவது போல ஒரு கரடுமுரடான சத்தம்! குரல் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லைஎன்பதை சூர்யாவே ஒத்துக் கொள்வார். ஆனாலும் நடிப்பிலும், தோற்றத்திலும் அதை சமாளித்து விடுகிறார்.

  கிளைமாக்ஸ் காட்சியை படு நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக, உருக்கமாக எடுத்திருக்கிறார் சூர்யா. இந்தக் காட்சியை பார்க்கும் யாருக்குமேகண்ணில் தண்ணீர் வராமல் போகாது. அப்படி ஒரு உருக்கம்.

  இன்னொரு முக்கியமான நபர் மீரா ஜாஸ்மின். இத்தனை நாளா எங்கத்தா வச்சிருந்த இப்படி ஒரு நடிப்பை என்று கேட்கும் அளவுக்கு கெளப்பலாகநடித்துள்ளார். சூர்யாவுக்கும், மீராவுக்கும் இடையிலான காதல் காட்சிகளில் மீரா உணர்வுகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆஹாஹா, அசத்தல்!

  சூர்யாவும், மீராவும் படு அன்னியோன்யமாக, இழைந்து, பினைந்து, குழைந்து கலக்கியிருக்கிறார்கள். ரெண்டு பேரும் நடித்தது போலவேதெரியவில்லை, நிஜமான காதலர்களாகவோ வாழ்ந்திருக்கிறார்கள்.

  கண்களிலும், உதட்டசைவிலும், சிரிப்பிலும் காதலை படு அழகாக, கிளாமராக உணர்த்தியிருக்கிறார் மீரா. சூர்யாவும், இவரும் காதலிப்பதைப்பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக வியர்த்துப் போயிருக்கும்!

  படத்தின் இயக்குநர் ரத்னகுமார் என்றாலும் கூட முக்கால்வாசிப் படத்தை சூர்யாதான் இயக்கியுள்ளாராம். கிராமத்துக் கதை என்பதால் அடிதடி,காதல், மோதல், சென்டிமென்ட் என எல்லாவற்றையும் சரிசமமாக கலந்து கொடுத்திருக்கிறார்.

  மாளவிகாவுக்கு கிளாமர் பாத்திரம். கிண்டி எடுத்திருக்கிறார். அவரிடம் நடிப்பை விட துடிப்புதான் ரொம்ப ஜாஸ்தி!

  இளவரசு, மணிவண்ணன், சார்லி ஆகியோரும் படத்தில் உள்ளனர். அவர்களும் தங்கள் பங்குக்கு சத்தாய்த்திருக்கிறார்கள். ப்ஙுத்தி வர்மா, லக்ஷனாஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிம்ப்ளி சூப்பர்ப் ஆக பண்ணியிருக்கிறார்கள் (இந்தப் படத்தை முடித்துக் கொடுத்து விட்டுத்தான்ப்ரீத்தி ஓடிப் போனாராம்!)

  படத்தில் நிறைகள் ஜாஸ்தி, கொஞ்சம் போல குறைகளும் வந்து குஸ்தி போடுகின்றன. இரட்டை அர்த்த வசனங்கள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன(சூர்யா படம் என்பது இதைக் கேட்கும்போதுதான் தெரிகிறது!). அதேபோல சூர்யாவும், மீராவும் கிராமம் முழுக்க சுற்றிச் சுற்றி வந்து காதலித்தாலும்அது ஊரில் உள்ள ஒருத்தருக்கக் கூட தெரியாது என்பது காதில் பூக்கூடையை தூக்கி கவிழ்த்துவதாக உள்ளது.

  கேமராவுக்க வேணு, இசைக்கு தேவா. தேனிசைத் தென்றல் இதில் தெம்மாங்கு புயலாக மாறி பின்னி எடுத்திருக்கிறார். ஆனால் எல்லாப் பாடலுமேராசாவை நினைவுபடுத்தத் தவறவில்லை.

  படத்தின் டைட்டிலில் வரும் பொறந்தது பசும்பொன்னு, இது வீரமுள்ள தமிழ் மண்ணு பாட்டு, தியேட்டரில் விசில் புயலைக் கிளப்புகிறது. தோள்கள்திணவெடுத்து, புஜங்கள் புடைப்பெடுக்க வைக்கும் பாட்டு. வைரமுத்துதான் பாட்டுக்கு அதிபதி. எஸ்.ஜே.சூர்யாவுக்காகவே இந்த பாட்டைஸ்பெஷலாக போட வைத்தாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

  ஜாலியாக ஆரம்பித்து ரகளையாக போகும் படம் முடியும்போது கண்களில் குளம் கட்டி வைத்து, கைக்குட்டையால் ஒற்ற வைத்து விடுகிறது.

  அருமையான மகன்!

  Read more about: review thirumagan
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X