TN 2026 Review - TN 2026 படம் எப்படி இருக்கு?.. ரஜினி, விஜய்க்கு செம அடி.. விமர்சனம் இதோ
சென்னை: தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் தங்க நட்சத்திரம் 2026 (TN 2026). தர்புகா சிவாஅ இசையமைப்பில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, டி.ராஜேந்தர் தொடங்கி லேட்டஸ்ட்டாக விஜய்வரை அந்த லிஸ்ட் நீளும். அப்படி ஒரு நடிகர் தனக்கு இருக்கும் புகழை அரசியலுக்கு பயன்படுத்துவதும் அதனால் வரும் விளைவுகளும்தான் படத்தின் ஒன்லைன். அதனை முடிந்த அளவுக்கு சிறப்பாகவும், சிரிப்பாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். தற்போதைய ட்ரெண்டுக்கு தகுந்தபடி தம்பி ராமையா கதையை பிடித்து கைத்தட்டல்களை அள்ளுகிறார்.

எப்படி இருக்கு படம்: இந்தப் படத்தின் ப்ளஸ் என்றால் சந்தேகமே இல்லாமல் கதையையும், வசனத்தையும் சொல்லலாம். தான் ஒரு கைதேர்ந்த கதாசிரியர் என்பதை தம்பி ராமையா இதில் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அவர் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தையும் இயக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது. ஏற்கனவே காமெடியில் பின்னி பெடலெடுப்பவர் அவர். அவருக்கு காமெடி காட்சிகள் எழுதுவதை பற்றி சொல்லியா தர வேண்டும். கரும்பு தின்ன கூலியா என்பது போல் ஒவ்வொரு வசனத்திலும் பட்டாசை பற்ற வைக்கிறார்.
கவனம் ஈர்க்கும் வசனங்கள்: '200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு சந்தோஷம்; அதில் எனக்கு என்ன சந்தோஷம்', 'மனைவியுடன் பிரச்னை என்றால் டைவர்ஸ் செய்பவன் ஆண் இல்லை. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அனுசரித்து கடைசிவரை மனைவியுடன் இருப்பவன்தான் தமிழ்நாட்டில் ஆண்', 'தமிழ் ஒழுங்காக பேச வரவில்லையென்றால் நீ தமிழ்நாட்டில் பெரிய ஹீரோ', என்பன உள்ளிட்ட பல வசனங்கள் படத்துக்கு மைலேஜ் கூட்டுகின்றன. முக்கியமாக அவர் எழுதிய வசனங்களை எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு உள்ளிட்டோர் பேசுகையில் அது வேறு ஒரு தளத்துக்கு சென்று மேற்கொண்டு சிரிப்பை வரவழைக்கிறது. மூன்று பேர் சேர்ந்து செய்யும் சண்டையும், அதற்கு பின்னணியில் பயன்படுத்தபட்ட பாடலும் ஸ்வீட் சர்ப்ரைஸ்.
நட்டி நடிப்பு சூப்பர்: படத்தின் இன்னொரு ப்ளஸ் என்றால் அது நட்டி நட்ராஜ். கேஷுவலான நடிப்பு, கிரிமினலான நடிப்பு என பிரித்து மேய்கிறார். வடமாநில இளைஞராகவும், பிறகு தமிழ்நாட்டில் வேர் ஊன்றிய நடிகராகவும் அவர் தனது நடிப்பில் காட்டியிருக்கும் வேரியேஷன்கள் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் சில இடங்களில் அவரது பார்வைகளும் பல உணர்வுகளை கடத்துகின்றன. கண்டிப்பாக நட்டியின் கரியரில் TN 2026 படத்துக்கு முக்கிய இடம் கொடுக்கலாம். அதிலும், காவல் துறையினர் தடுக்கும்போது காரிலிருந்து இறங்கி வரும் சீன், ரஜினி வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் ஒன்று. அந்த சீனுக்கு தனது நடிப்பால் பக்காவாக மாஸ் கூட்டியிருக்கிறார்.
ரஜினி, விஜய்க்கு அடியா?: முக்கியமாக இந்தப் படத்தின் ட்ரெய்லர் வந்தபோது இதில் விஜய்யை கிண்டல் அடித்துவிட்டார்கள் என்று பலரும் கொதித்தார்கள். உண்மையில் சொல்லப்போனால் படத்தில் விஜய்யை மட்டுமில்லை ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், சீமான், சல்மான் கான் தொடங்கி இப்போதைய தவெக தொண்டர்கள் வரை அனைவரையுமே வைத்து செய்துவிட்டார்கள். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பும், சிஸ்டம் சரியில்லை என்ற வாதமும், பிறகு உடல்நலத்தை காரணம் காட்டி அரசியல் பிரவேசத்திலிருந்து ஜகா வாங்கியதையும் ஓபனாகவே அடித்துவிட்டார்கள். அதேபோல் மோசமான சினிமா இப்போது இளைஞர்களை எப்படி சீரழிக்கிறது என்பதையும் பொட்டில் அடித்து சொல்லிவிட்டார்கள்.
முக்கியமாக குல்கந்த் குமார் (நட்டி) தனது மனைவியை பிரிவதாக எடுக்கும் முடிவும், அதற்கு தம்பி ராமையா செய்யும் அட்வைஸும் இப்போதைக்கு விஜய் இருக்கும் நிலைமைக்கு அப்படியே ஒத்துப்போகிறது. தவெகவை சேர்ந்த இளைஞர்கள் பொதுவெளியில் நடந்துகொண்டதையும் சிரிப்பு காட்டி விமர்சிக்க மறக்கவில்லை. அதுமட்டுமின்றி அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு தமிழ்நாட்டு பிரச்னையை பற்றி ஒன்றுமே தெரியாது என்ற பிம்பமும் இங்கு இருக்கிறது.
இடைவேளைக்கு முன்னதாக நட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசும் சீனில் அந்தப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தை படத்தில் ஆதரிக்கவே செய்திருக்கிறார்கள். எனவே ட்ரெய்லரை பார்த்து முன்முடிவோடு தியேட்டருக்கு செல்ல வேண்டாம். இசையை பொறுத்தவரை ஹே அலங்காரி பாடல் மட்டும்தான் மனதில் நிற்கிறது. பின்னணி இசை ஓரளவுக்கு ஓகே ரகம்தான். கேமரா ஒர்க்கும் அப்படியாகத்தான் இருந்தது.
அமாவாசை வாடை: படத்தின் பல சீன்களில் அமைதிப்படை படத்தின் அமாவாசை கேரக்டரும், மணிவண்ணன் கேரக்டரும் எட்டி பார்ப்பது உறுத்தலாகவே இருக்கிறது. இதுமாதிரியான கதைகளில் மற்ற பட சீன்களின் தாக்கத்தை மறுக்க முடியாதுதான். அதற்காக இவ்வளவு அப்பட்டமாக இன்னொரு படத்தின் நியாபகம் வரும்படி (செருப்பு மாட்டிவிடும் சீன்) சீனை வைப்பது இயக்குநரின் அனுபவமின்மையை காட்டுகிறது. அந்த ஏரியாவில் மகனுக்கு இன்னும் கொஞ்சம் தந்தை தம்பி ராமையா துணை நின்றிருக்கலாம். அதேசமயம் உமாபதியை முழுவதுமே குறை சொல்லிவிட முடியாது. பல சீன்களில் அவரது ஷாட் ஆங்கிள், ஒரு சீனை ஆரம்பித்து முடித்த விதம் என கவனத்தையும் ஈர்க்கிறார்தான்.
சொதப்பல் க்ளைமேக்ஸ்: முதல் பாதியில் விறுவிறுவென்று சென்ற திரைக்கதை இரண்டாவது பாதியில் நொண்டி அடித்து; கொஞ்ச நேரத்தில் பாதாளத்துக்கு சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரு படத்தின் க்ளைமேக்ஸ் தாக்கத்தை ஏற்படுத்தும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் சில மணி நேரமாவது அந்தப் படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வராமல் இருப்பார்கள். ஆனால் இப்படத்திலோ க்ளைமேக்ஸ் அபத்தத்திலும் அபத்தம்.
திடீரென வரும் வாரிசுகள் தந்தைகளையே கொலை செய்ய துணிவதெல்லாம் நம்பும்படியே இல்லை பாஸ். அனைவரையும் கோர்த்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்லும் நட்டியிடம் உங்களுக்கு தலைவர் ராஜ்ய சபா எம்.பி கொடுக்க சொல்றார் என வசனம் வந்தபோது தியேட்டரில் 'அட ஒரே சீனில் நம்ம ரஜினி, கமலை சொல்றாங்க' என சத்தத்தையும் கேட்க முடிந்தது.
ஒரு ஹீரோவுக்காக தனது சொத்தை எல்லாம் இழக்கும் ஜமீன்தார் மீண்டும் அந்த நடிகருடனேயே சேர்வது, குல்கந்த் குமாரை மன்றாடியார் (எம்ஜிஆர் இடத்தை பிடிப்பார் என்ற காரணத்தை ஏற்க முடியவில்லை) இவ்வளவு வளர்த்துவிடுவதற்கான காரணங்கள், நடிகர் கட்சி ஆரம்பித்ததற்கான காரணங்கள், தலைவருக்கே தெரியாமல் கட்சியினரிடம் பணம் வாங்குவதில் எல்லாம் பெரும்பாலும் லாஜிக்கே இல்லை. சூப்பராக சென்று அருமையாக முடித்திருக்க வேண்டிய படத்தை இயக்குநர் உமாபதி கொஞ்சம் அரைகுறையாகவே சொதப்பிவிட்டார். ஆகமொத்தம் பளபளவென்று பல முறை ஜொலித்திருக்க வேண்டிய இந்த தங்கம்; சில சொதப்பல்களாலும், கலப்படத்தாலும் ஒருமுறை ஜொலிக்கும்படி ஆகிவிட்டது. அதாவது ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications















