For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Tolet Review: தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு செழியனின் 'டூ லெட்' - விமர்சனம்!

  |
  Tolet Movie Review: டு லெட் படம் எப்படி இருக்கு?- வீடியோ

  Rating:
  4.5/5
  Star Cast: ஷீலா, சந்தோஷ் ஸ்ரீராம், தருண்
  Director: செழியன்

  சென்னை: சென்னை பெருநகரில் வாடகை வீடு எனும் நரகத்தில் சிக்கி தவிக்கும் பல ஆயிரம் குடும்பங்களில் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டூ லெட்.

  வீடு, உதிரிப்பூக்கள், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட படங்களின் வரிசையில், தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக உருவாகியிருக்கிறது, 'டூ லெட்'. நிலமற்ற ஏழை, நடுத்தரக் குடும்பங்கள், வாடகை வீடுகளில் படும் பாட்டை பல சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் டூ லெட் அதை சொன்ன விதம் தான், இத்தனை விருதுகள் வாங்க காரணம்.

  Tolet movie review

  2007ம் ஆண்டில் சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையின் அதீத வளர்ச்சியினால், புறநகர் பகுதிகளில் கூட வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்தது. தனியார் நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களாக பணியாற்றிய பலர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தம்பதி தான் டூ லெட் திரைப்படத்தின் இளங்கோ - அமுதா.

  தனக்கான அங்கீகாரத்திற்காக போராடும் சினிமா உதவி இயக்குனர் இளங்கோ (சந்தோஷ்). இவரது காதல் மனைவி அமுதா (ஷீலா). இவர்களின் மகன் சித்தார்த் (தருண்). கிடைக்கும் பணத்தை வைத்து பட்ஜெட் போட்டு வாழும், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பம். வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது, திடீரென வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஹவுஸ் ஓனர். ஒரு மாத கெடுவுக்குள் வீடு மாறியாக வேண்டிய கட்டாயத்தில், தெரு தெருவாய் அழைந்து வீடு தேடுகிறார் இளங்கோ. அப்போது அவர் படும் கஷ்டங்களை உணர்வுப்பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பதிவு செய்திருக்கிறது டு லெட்.

  Tolet movie review

  மாற்று சினிமா என்ற ஒற்றை வார்த்தையில் டூ லெட் படத்தை அடக்கிவிட முடியாது. ஆர்ப்பாட்டம் இல்லை, ஆடம்பரம் இல்லை, 50 வயலின்களின் துணை கொண்டு ஓலமிடமில்லை. ஆனால் இவை அனைத்தையும் உணர வைக்கின்றன படத்தின் காட்சிகள். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி இருப்பார்களோ அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் சந்தோஷும், ஷீலாவும். அவர்களுக்குள்ளான சின்ன சின்ன ரொமான்ஸ்களாகட்டும், சண்டைகளாகட்டும், அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.

  தொடக்கம் முதல் இறுதி வரை போரடிக்காமல் படத்தை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார் இயக்குனர் செழியன். நம்மளில் பல பேர் இந்த கஷ்டத்தை அனுபவித்து தானே மேலே வந்திருப்போம். அதனாலேயே படம் பார்க்கும் போது, நம்மையே இளங்கோவாகவும், அமுதாவாகவும் திரையில் பார்த்து உணர முடிகிறது.

  Tolet movie review

  அதே சமயம், படத்தில் யாரையும் குற்றம் சொல்லவும் இல்லை. ஹவுஸ் ஓனர்களாக வரும் ஒவ்வொருவரும் உண்மையான பாத்திரங்கள். சொந்த வீடு வைத்திருக்கும் ஒரே காரணத்தால், அது இல்லாதவர்களை ஏளனமாக நடத்துபவர்கள் இங்கு ஏராளம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் செழியன். பல இடங்களில் கைத்தட்டல் வாங்கி, சிரிக்க வைக்கின்றார் இயக்குனர்.

  படத்தில் நடிகர்கள் என யாரும் இல்லாதது தான் பெரிய பலம். சந்தோஷ், ஷீலா, தருண், ஆதிரா என அனைவருமே நடிகர்களாக இல்லாமல், அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் படத்துடன் நம்மை எளிதாக பொருத்திக்கொள்ள முடிகிறது.

  Tolet movie review

  வாடகை வீட்டில் வசிக்கும் பிள்ளைகள் சுவரில் கிறுக்க முடிவதில்லை என்பதைக் கூட அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். தன்னுடைய வண்ண ஓவியங்களை சுவரில் இருந்து அழிக்க சிறுவன் போராடும் அந்த காட்சி, வாவ் ஆசம் செழியன்.

  சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும் எத்தனையோ குடும்பங்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன. கமிஷனுக்கு ஆசைப்பட்டு புரோக்கர்கள் சிலர் செய்யும் வேலைகள் தான் வீட்டு வாடகை உயர காரணம் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறது டூ லெட்.

  பின்னணி இசை கோர்ப்பு செய்யாமல், ஒன்றரை மணி நேரம் தான் என்றாலும் படத்தை அலுப்பு ஏற்படாத வகையில் எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். தபாஸ் நாயக்கின் ஒலிக்கலவை படத்திற்கு பெரிய பலமாக விளங்குகிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக சினிமாஸ் பிரேமா செழியனுக்கு வாழ்த்துக்கள்.

  கமலின் 'இந்தியன் 2' கைவிடப்பட்டதா?: முக்கிய விளக்கம் அளித்த லைகா

  சிறந்த திரைப்படத்துக்கான இந்திய சேதிய விருது, இத்தாலி, இந்தோனேசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 32 விருதுகளை வென்ற படம் டூ லெட். இத்தனை பாராட்டுக்களையும், அங்கீகாரத்தையும் பெற்ற டூ லெட் படத்தை, நாமும் பாராட்டி கொண்டாட வேண்டாமா.

  தமிழ் சினிமாவில் மற்றுமொரு உண்மையான படைப்பு 'டூ லெட்'.

  English summary
  The national award winning movie To Let is a tamil film written, directed and filmed by Chezhiyan. Illango is an assistant film director living with his wife Amudha and their five-year-old son Siddharth, in a rented apartment. Their landlady is eager to lease that house to IT professionals for a higher rent, so she suddenly issues the family a 30-day notice to vacate.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X