»   »  உறியடி விமர்சனம்

உறியடி விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.5/5
-எஸ் ஷங்கர்

நடிப்பு: விஜய்குமார், மைம் கோபி, ஹென்னா பெல்லா

ஒளிப்பதிவு: பால் லிவிங்ஸ்டன்

இசை: விஜயகுமார்

தயாரிப்பு: விஜயகுமார்

இயக்கம்: விஜயகுமார்

90 களின் பின்னணியில், சாதி அரசியல் எந்த அளவுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கொஞ்சம் அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

ஒருவன் அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்றால், அவன் முதலில் கையிலெடுப்பது சாதியை. அடுத்து அந்த சாதிக்கும் வேறு சாதிக்கும் மோதலை உருவாக்குவது. அதற்கு மாணவர்களை பெருமளவு பயன்படுத்துவது... மோதலில் அப்பாவிகள் செத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அயோக்கியர்கள் தலைவர்களாகிவிடுவார்கள்.

இந்த சாதி அரசியலைச் சொல்ல வந்திருக்கும் படம் உறியடி.

Uriyadi Review

செத்துப் போன ஒரு சாதித் தலைவருக்கு சிலை வைக்க மாவட்ட ஆட்சியர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதையே ஒரு பிரச்சினையாக்கி கட்சி ஆரம்பிக்க முயற்சிக்கிறது சாதிச் சங்கம். அதில் முக்கிய பொறுப்பில் உள்ள மைம் கோபி, தாபா கடை என்ற பெயரில் ஒரு பார் நடத்தி வருகிறார்.

வகுப்பு நேரத்தைத் தவிர மீதி நேரத்தை இந்த பாரில் குடித்து செலவிடும் கல்லூரி மாணவர்கள் விஜய்குமார் மற்றும் அவரது நண்பர்களை தனது அரசியல் விளையாட்டில் பயன்படுத்தப் பார்க்கிறார் மைம் கோபி.

பாரில் விஜய்குமாரின் நண்பர்களுக்கும் உடன் படிக்கும் சக மாணவர்களுக்கும் சண்டை ஏற்படுகிறது. உள்ளூர் லாட்ஜ் முதலாளி பையனுக்கும் விஜய்குமாரின் நண்பர்களுக்கும் மோதல். இந்த மோதலில் விஜயகுமாரின் நண்பன் கொல்லப்படுகிறான். இதில் மைம் கோபி டபுள் கேம் ஆடுகிறார்.

இந்த பிரச்சினையை வைத்து அரசியலில் பெரிய புள்ளியாக நினைக்கிறார் மைம் கோபி. மாணவர்களுக்கு ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறார். இந்த நச்சு சாதி விளையாட்டில் மாணவர்கள் கதி என்ன என்பதுதான் மீதிக் கதை.

மிக வலுவான கதை. இன்றைய சூழலில் மாணவர்களுக்கு, குறிப்பாக கல்லூரிப் பருவத்தில் உள்ள இளைஞர்களுக்கு எப்படி சாதி நஞ்சு புகட்டப்படுகிறது என்பதை தைரியமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

90களில் உண்மையிலேயே இப்படிச் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கிராமங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களிடம் மெல்ல மெல்ல சாதி வெறியை உசுப்பிவிட்டு மோதவிட்ட நிகழ்வுகளெல்லாம் பலருக்கும் இப்போது மறந்திருக்கும்.

அவற்றை நினைவூட்டும் விதமாக நம்பகத் தன்மையுடன் கூடிய காட்சியமைப்பு படத்தில் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. அதே நேரம் எந்த சாதியையும் குறிப்பிடாமல் எச்சரிக்கையுடன் காட்சிகளைக் கையாண்ட இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

மாணவர்களைத் தூண்டிவிட பெரிய காரணங்கள் தேவையில்லை. ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் அவர்களை ஒரு சின்ன, அல்ப காரணத்துக்காக உசுப்பேற்றினால் போதும்.. ரத்தக் களறியாகிவிடும் அந்த சூழல். இதை பல காட்சிகளில் வெகு இயற்கையாகச் சித்தரித்தாலும், அந்த வன்முறை மனதை ரணமாக்குகிறது.

இரவு நேரம். சாதி வெறிப் பிடித்த ஒரு கும்பலை அந்த கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ளும் காட்சி... பயங்கரம்.

சாதிய அரசியலை வெளுக்கும் காட்சிகள் அபாரம். படத்தில் இப்படி நிறைய அழுத்தமான காட்சிகள் இருந்தாலும், இவற்றை கோர்வையாகச் சொல்வதில் தடுமாறியிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார். இவர்தான் படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் மற்றும் பின்னணி இசையமைப்பாளரும் கூட!

ஒரு நடிகராக இயல்பான நடிப்பைத் தர முனைந்திருக்கிறார் விஜயகுமார். ஒரு புதுமுகம் இந்த அளவு நடித்திருப்பதே ஆச்சர்யம்தான்.

நண்பர்களாக வரும் சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர்.

பிரதான வில்லன் மைம் கோபி பிரமாதமாக நடித்துள்ளார். லாட்ஜ் முதலாளி பையனாக வருபவர் வஞ்சத்தின் உச்சம்.

நாயகி ஹென்னா பெல்லா சில காட்சிகளில் தலைகாட்டுகிறார். அவ்வளவுதான் அவர் வேலை.

பால் லிவிங்ஸ்டானின் ஒளிப்பதிவும் விஜயகுமாரின் பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுக்கிறது. மசாலா கஃபே இசையில் பாரதியாரின் அக்கினி குஞ்சொன்று.. பாடலும் மெட்டும் சிலிர்க்க வைக்கிறது.

வலுவாக அடிக்க முயன்றிருக்கிறார்கள். 'ஜஸ்ட் மிஸ்'தான் என்றாலும் பார்க்கலாம்!

English summary
Debutant Vijayakumar's maiden effort Uriyadi is a raw movie with grippy script and realistic scenes. It is a rustic movie without any cliches of Tamil cine. JKust go for it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil