Vaa Vaathiyaar Blue Sattai Maran Review: வா வாத்தியாரையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ் கிரண், சத்யராஜ், ஆனந்தராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் வா வாத்தியார். படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் படம் ஒருவழியாக நேற்று அதாவது, ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து தங்களது விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் கதையை பொறுத்தவரையில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரண். அவருக்கு எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்று தகவல் வருகிறது, சிறிது நேரத்தில் அவருக்கு பேரன் பிறந்ததாகவும் தகவல் வருகிறது. இதனால் எம்.ஜி.ஆர் தான் தனக்கு பேரனாக பிறந்துள்ளார் என்று நினைத்து எம்.ஜி.ஆரின் குணநலன்களுடன் தனது பேரனை வளர்க்க வேண்டும் என்று வளர்க்கிறார். தனது பேரன் வளர்ந்து போலீஸ் அதிகாரியாக ஆகிறார்.

காவல்துறையில் தனது பேரன் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார் ராஜ் கிரன். ஆனால் பேரன் நம்பியார் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது தெரிந்ததும் மனம் நொந்து போகிறார் ராஜ்கிரண் , இதைத் தெரிந்து கொண்ட கதாநாயகன் என்ன செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
படம் எப்படி இருக்கு?: படத்தில் லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை என்பதால் படக்குழு இறங்கி அடித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி இறங்கி அடிக்கவில்லை. திரைக்கதையில் சொதப்பல், கதை ஒரு கட்டத்திற்கு மேல் நகரவில்லை. வில்லன் கதாபாத்திரமும் மொக்கை. கதையில் சுவாரஸ்யமாக இருக்க வேண்டியதே, தவறு நடக்கும் இடத்தில் எல்லாம் எம்.ஜி.ஆர் வந்து அவற்றை தட்டிக் கேட்பார் என்பது தான். இப்படியான கதையை படமாக்கும் போது, எம்.ஜி.ஆரை அவர்கள் நன்கு ஸ்டடி செய்திருக்க வேண்டும். காரணம், எம்.ஜி.ஆர் அவராகவே சென்று காதலிக்கமாட்டார். அவரைத்தான் பெண்கள் சுற்றி சுற்றி வந்து காதலிப்பார்கள். அதேபோல் சண்டையில் மூன்று அடி வாங்கிவிட்டுத்தான் திருப்பி அடிப்பார். அம்மாவை ஏதாவது சொல்லிவிட்டால், சும்மா விடமாட்டார். ஆனால் இந்த படத்தில் அப்படி எதுவுமே இல்லை.

வேஸ்ட் பண்ணீட்டாங்க: படத்தில் இரண்டே காட்சிகள் தான் நன்றாக இருந்தது, ஒன்று அரசியல்வாதிகள் போன் பேசிக் கொள்ளும் காட்சி, மற்றொன்று ஆனந்தராஜ் அழும் காட்சி, என இரண்டுமே நன்றாக இருந்தது. இந்த கதையில் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சீரியஸான படமோ, காமெடி படமோ எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் இரண்டும் செய்யாமல் வேஸ்ட் செய்துவிட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











