Vaazhai Review: வாழை விமர்சனம்.. மாரி செல்வராஜுக்கு சிறு வயதில் இத்தனை பெரிய சோகம் நடந்திருக்கா?

Rating:
3.5/5

நடிகர்கள்: பொன்வேல், கலையரசன், நிகிலா விமல்
இசை: சந்தோஷ் நாராயணன்
இயக்கம்: மாரி செல்வராஜ்
ரேட்டிங்: 3.5

சென்னை: மாரி செல்வராஜ் தன்னுடைய இளம் வயதில் பட்ட கஷ்டங்களையும் சந்தித்த பெருஞ்சோகத்தையும் அதனால் அவர் மனதில் ஆறாத வடுவாக மாறியுள்ள வலியையும் ஒரு திரைப்படமாக காட்சிப்படுத்தியுள்ள படம் தான் இந்த வாழை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது.

வாழை படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட தெரிந்த முகங்களுடன் பல புதுமுகங்களும் ஊர்மக்களும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையையும் பாடல்களையும் ஓவர்டேக் செய்யும் விதமாக தேவாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Vaazhai  Review  Mari Selvaraj

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை போலவும் வாழை படத்திலும் மிகப்பெரிய அரசியலை தனது வாழ்வில் நடந்த துயரச் சம்பவத்துடன் சேர்த்து பேசியிருக்கும் மாரி செல்வராஜின் இந்த படம் எப்படி இருக்கிறது, அதன் நிறை, குறைகள் என்ன என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

வாழை கதை: சிறு வயதிலேயே அப்பா தவறிவிட்ட நிலையில், அம்மா மற்றும் அக்காவுடன் வளர்ந்து வருகிறான் சிவனணைந்தான்(பொன்வேல்). அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் அவனுக்கு நெருங்கிய நண்பன் என்றால் அது சேகர் (ராகுல்) தான். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையானால் அம்மா மற்றும் அக்காவுடன் சேர்ந்து வாழை தார்களை சுமந்து செல்லும் வேலைக்குச் செல்ல வேண்டும். அப்படி செய்வது அந்த இளம் நாயகனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனாலும், குடும்ப கஷ்டத்துக்காக காய் சுமக்க செல்கிறான். ஒரு நாள் அம்மாவை ஏமாற்றி விட்டு காய் சுமக்க செல்லாமல் பள்ளிக்கு சென்றுவிடும் சிவனணைந்தான் சந்திக்கும் பிரச்சனைகளும், அன்றைய தினத்தில் அந்த ஊரில் நடக்கும் சோகமும் தான் இந்த வாழை படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: சிவனணைந்தான் கதாபாத்திரம் தான் மாரி செல்வராஜின் இளம் வயது கதாபாத்திரம் என அவரே கூறிவிட்டார். ரஜினிகாந்த் ரசிகராகவும் விஜய் ரசிகராகவும் அவரை காட்டுகிறார். ரஜினிகாந்த் ரசிகரான சிவனணைந்தானுக்கும் கமல் ரசிகராக வரும் சேகருக்கும் இடையே ஆரம்பத்திலேயே டாலர் சண்டை நடக்கிறது. அங்கே இருந்தே அந்த இருவருக்கும் இடையே உள்ள நட்பு, நெருக்கம், விளையாடினாலும் அவனுடன் தான் சண்டை போட்டாலும் அவனுடன் தான் என இருக்கிறார். சேகராக நடித்துள்ள ராகுலின் நடிப்பு அபாரம். தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை அந்த சிறுவன் சிரிக்க வைப்பான் என்பது கியாரண்டி.

பூவையும் கொடியையும் வரைந்து தனக்கு பூங்கொடி டீச்சரை பிடித்திருக்கிறது என சிவணைந்தான் சொல்ல, நிகிலா விமல் பூங்கொடி டீச்சராக மாணவர்களுக்கே பிடித்த ஒரு ஆசிரியையாக வருகிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் காதல் படமாக மாறி நிற்கிறது வாழை. ஆனால், அதில், எந்தவொரு களங்கமான காட்சிகளும் இல்லாமல் உருவாக்கியதற்கு பாராட்டுக்கள்.

Vaazhai  Review  Mari Selvaraj

ஒரு ரூபாய் கூலியில் இருந்து 2 ரூபாய் கூலியை உயர்த்தி தரச் சொல்லி போராடும் இளைஞராக கனி எனும் கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார். சிவனணைந்தானின் அக்காவான வேம்பு (திவ்யா துரைசாமி) அந்த ஊர் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சட்டையை அணிந்துக் கொண்டு வாழைத் தாரை சுமந்துக் கொண்டு அந்த சேற்றிலும், சகதியிலும் நடந்துச் செல்லும் அவருக்கு கனி மீது காதல் வருகிறது. கனிக்கும் தான்.

வாழைக்காய் சுமக்க செல்லாமல் டிமிக்கி கொடுக்க காலில் ஊக்கு வைத்து குத்தி முள் குத்தியது என சிவனணைந்தான் பாசாங்கு செய்து விட்டு மாடு மேய்க்க செல்ல, டீச்சரை பார்த்த ஜோரில் மாட்டை கட்டிவிட்டு அவருடன் டிவிஎஸ் 50ல் ஊர் சுற்றி வரும் போது மாடு காணவில்லை. அதன் மூலம் வரும் பிரச்சனையை போல இறுதியில் ஹீரோவுக்கும் ஒரு பிரச்சனை நடக்கிறது.

வயித்துப் பசிக்காக ஒரு வாழை பழத்தை எடுத்துச் சாப்பிட அடி வாங்குகிறான் சிவனணைந்தான். கிளைமேக்ஸில் அவனுக்கும் அவன் ஊர் மக்களுக்கும் ஏற்படும் அந்த பெரும் சோகம் கண்ணீருடனும் கனத்த இதயத்துடனுமே நம்மை தியேட்டரை விட்டு வெளியே வரவழைக்கிறது.

வாழை பேசும் அரசியல்: வாழைக்காய் பறிக்கச் செல்லும் ஆட்களுக்கு தனியாக ஒரு வாகனத்தை கூட ஏற்பாடு செய்துக் கொடுக்க முடியாதபடி முதலாளிகள் நடத்தும் சுரண்டலை கம்யூனிச சித்தாந்தத்துடன் எடுத்து பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு ரூபாய் கூலியை உயர்த்திக் கேட்டதும் கலையரசனுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டி இங்கே எதிர்த்து கேட்டால் அடக்கவும் ஒடுக்கவும் பார்ப்பார்கள் என்கிற அரசியலையும் ஆணித்தரமாக பேசியுள்ளார்.

பிளஸ்: அவர் இளம் வயதில் அனுபவித்த வலிகளை படமாக அதையும் மக்கள் பார்க்க வேண்டிய படமாகவும் பார்க்கும்படியான படமாகவும் எடுத்து வைத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. தேவாவின் தூதுவளை இலை அரைச்சு, பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடல்கள் வைக்கப்பட்ட இடங்கள் அருமை. இளையராஜாவுக்கு நன்றி கார்டு போட்டு விட்டு சக்கரை தேவன் படத்தில் இடம்பெற்ற "மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி" மற்றும், இதயம் படத்தில் இடம்பெற்ற "பூங்கொடி தான் பூத்ததம்மா" பாடல்களை சிவனணைந்தான் கதாபாத்திரம் வாயிலேயே பாடும் காட்சிகளும் கிளாப்ஸ் அள்ளுகின்றன. ரஜினிகாந்த் vs கமல்ஹாசன் ரசிகர் சண்டை தியேட்டரில் சிரிப்பலையை கிளப்புகிறது. கடைசியாக நடக்கும் அந்த அதிர்ச்சியான சம்பவம் மற்றும் அதன் உண்மைப் பின்னணி நெஞ்சை கனக்க வைக்கிறது. தனது அம்மா தன்னை கொடுமைப்படுத்திய காட்சிகளை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவர் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் காட்சிப்படுத்திய விதத்திற்கு தனி பாராட்டுக்கள்.

மைனஸ்: கொட்டுக்காளி படத்தை பார்த்து விட்டு வாழை படத்தை பார்க்கும் போது இந்த படத்திலும் பின்னணி இசை இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் படம் கனெக்ட் ஆகியிருக்குமே என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கிறது. படம் எதை நோக்கி நகர்கிறது, இறுதியில் என்ன ஆகப் போகிறது உள்ளிட்ட காட்சிகளை முன்கூட்டியே கணிக்கும் படியான காட்சிகள் இடம்பெற்றிருப்பதை தவிர்த்து இருக்கலாம். ஒரு எதிர்பாராத சம்பவத்துக்கு முதலாளித்துவ அரசியல் தான் காரணம் என்பதை சற்றே திணித்தது போன்ற உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது. கலையரசனுக்கு சிறப்பான கதாபாத்திரம் என்றாலும் கடைசியில் அவருக்கு நேர்வது அவரை டைப் காஸ்ட் பண்ணுவது போன்ற உணர்வையே கொடுக்கிறது. சில குறைகளை தவிர்த்து விட்டு படம் கடத்துகிற வலியை அனுபவிக்க இந்த படத்தை திரையரங்குகளில் ஒருமுறை பார்க்கலாம். மாரி செல்வராஜ் வாழ்வில் இத்தனை துயரங்கள் நடந்திருக்கிறதா? என்பதையும் புரிந்துக் கொள்ள முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X