twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வை ராஜா வை - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.5/5

    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், விவேக், டாப்சி, சதீஷ், சிறப்புத் தோற்றத்தில் தனுஷ்

    இசை: யுவன் சங்கர் ராஜா

    ஒளிப்பதிவு: வேல்ராஜ்

    தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

    இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

    பொதுவாகவே பெண் இயக்குநர்கள் படம் என்றால் அதில் பொழுதுபோக்கு அம்சங்கள், தொழில்நுட்ப நேர்த்தி அவ்வளவாக சோபிக்காமல் போய்விடும். குறிப்பாக ஒருவித பெண்மைத் தனமே மேலோங்கி இருக்கும்.

    ஆனால் முதல் முறையாக இவற்றைக் கடந்து, ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் அளவுக்கு ஒரு தரமான பொழுதுபோக்குப் படத்தைத் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக முதலிலேயே அவரைப் பாராட்டிவிடுவோம்.

    கதை தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிய கதைக் களம். காஸினோ எனப்படும் சூதாட்ட உலக நிகழ்வுகளை பரபரப்பான பொழுதுபோக்காக்கித் தந்திருக்கிறார் ஐஸ்வர்யா.

    மிடில் க்ளாஸ் பையனான கவுதமுக்கு இயற்கையாகவே எதையும் முன் கணித்துச் சொல்லும் ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது. சிறுவயதில் அதனால் அவன் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறான். எனவே அப்படி ஒரு சக்தி இருப்பதைே மறநந்துவிடுமாறு பெற்றோர் கெஞ்ச, மெல்ல மெல்ல அந்த சக்தியை மறக்கிறான்.

    தன் நண்பன் உதவியுடன் ஒரு செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை ஊழியராகிறார். தன் சைக்கிள் மீது மோதும் தாவரப் பிரியையான ப்ரியா ஆனந்தை, முதல் சந்திப்பிலேயே காதலிக்கிறார். இரு வீட்டிலும் அந்தக் காதல் ஓகே ஆகிவிடுகிறது. வேலை, நண்பன், காதலி என்று நிம்மதி வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் அந்த சக்தி அவருக்குள் தலைதூக்குகிறது.

     வை ராஜா வை

    அலுவலகத்தில் கவுதமும் வேலைப் பார்க்கும் விவேக்குக்கு இவனது சக்தி தெரிந்துவிட, அதை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஒரு முறை ஈடுபடுகிறார்கள். அந்த மேட்சின் ஒவ்வொரு ஓவரிலும் என்ன நடக்கும் சரியாக கவுதம் முன் கணித்துச் சொல்ல, அதன் படியே நடந்து ஒரு கோடி சம்பாதிக்கிறார்கள்.

    பெட்டிங்கில் பணத்தை இழந்த டேனியல் பாலாஜி கொலை வெறியாகிறார். ஜெயித்த பணத்தில் ஜாலியாக கோவா செல்லும் கவுதம் அன்ட் கோவை விரட்டிப் பிடித்து, துப்பாக்கி முனையில் மிரட்டி, மீண்டும் தனக்காக ஒரு சொகுசு கப்பலில் நடக்கும் காசினோவில் சூதாட வைக்கிறார் டேனியல். அங்கு சூதாடி பணத்தை வென்றாலும் ஆபத்து, தோற்றாலும் ஆபத்து... அதிலிருந்து கவுதம் அன்ட் கோ எப்படி தப்பிக்கிறார்கள், டேனியல் பாலாஜி - கவுதம் பகை எப்படித் தீர்க்கிறது என்பது மீதிக் கதை.

    சுவாரஸ்யமான கதை.. அதை இன்னும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா. கமர்ஷியல் வெற்றி தந்த முதல் பெண் இயக்குநர் என கம்பீரமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

     வை ராஜா வை

    மிக இயல்பாக ஆரம்பிக்கும் காட்சிகள், எப்போது விறுவிறுப்பாக மாறியதென்றே தெரியாத அளவுக்கு வேகமெடுக்கின்றன.

    அதுவும் அந்த கிரிக்கெட் சூதாட்டம் நடக்கும் விதம், அதில் புழங்கும் பணம், சொகுசு கப்பல் காஸினோ காட்சிகளெல்லாம் ரசிகர்களுக்கு ரொம்பவே புது அனுபவம். அந்தக் காட்சிகளுக்கு யுவன் அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது.

    கவுதமுக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்துள்ளது வை ராஜா வை. ஆனால் நடிப்பில் இன்னும் அவர் பல படிகள் ஏற வேண்டியிருப்பதை பல காட்சிகளில் பார்க்க முடிகிறது.

    ப்ரியா ஆனந்த், டாப்சி இருவரும் தங்கள் பொறுப்பை சரியாகச் செய்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் வரும் டாப்சி, அந்த காசினோ பற்றி க்ளாஸ் எடுக்கும் விதம் டாப்.

     வை ராஜா வை

    விவேக் இந்தப் படத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அவரது ஒன் லைனர்கள், பஞ்ச் வசனங்கள் அத்தனையிலும் மகா நவீனம். மனிதர் என்னமாய் அப்டேட் ஆகியிருக்கிறார். இந்த பாணியை தொடருங்கள் விவேக். இந்தப் படம் இத்தனை லைவாக அமைய விவேக் முக்கிய காரணம்.

    அடுத்து டேனியல் பாலாஜி. வில்லத்தனத்தில் புதுப் பரிமாணம் காட்டியிருக்கிறார். திருமண வீட்டில் கவுதமை காப்ரா பண்ணும் அவரது ஸ்டைல் செம!

    க்ளைமாக்ஸில் கொக்கி குமாராக வரும் தனுஷை பிரமாதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா.

    படத்தின் இன்னொரு சிறப்பு இரண்டே கால் மணி நேரத்துக்குள் முடிந்துவிடுவது.

    சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும் படத்தை ரசிக்க அவை தடையாக இல்லை.

    வேல்ராஜின் ஒளிப்பதிவும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இயக்குநருக்கு பக்கபலங்கள்.

    வை ராஜா வை.. ஜாலியான சம்மர் ரைடு!

    English summary
    Aishwarya Dhanush's Vai Raja Vai is an interesting summer ride and worth to watch. Just go for it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X