Vanangaan Review: மிஸ் செய்த சூர்யா.. ஸ்கோர் செய்த அருண் விஜய்.. பாலாவின் வணங்கான் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்து இன்று அதாவது, ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் வணங்கான். இந்தப் படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனத்தினை இந்தத் தொகுப்பில் காணலாம். படம் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறுகின்றது. படத்திற்கு பாடல்களை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். படத்திற்கு சாம். சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கலுக்கு அருண் விஜய்யின் மிஷன் சாப்ட்டர் 1 படம் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், வணங்கான் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

சுனாமியால் பெற்றோர்களை இழந்த இரண்டு வெவ்வேறு குழந்தைகள் இணைந்து வளர்கின்றார்கள். அவர்களில் ஒருவர் அருண் விஜய் ஏற்று நடித்துள்ள கோட்டி கதாபாத்திரம், மற்றொருவர் அவரது தங்கை தேவி கதாபாத்திரம். இதில் கோட்டிக்கு பிறவியில் இருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. முறையான வேலை எல்லாம் எதுவும் இல்லாமல், கிடைக்கின்ற அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவர்.

தவறு எனத் தெரிந்தால் கோபப்படக்கூடியவரான அருண் விஜய் மற்றும் அவரது தங்கைக்கு ஆதரவாக, அங்கே இருக்கக்கூடிய அருட்தந்தை உள்ளார். கோட்டி, கோபத்தில் யாரையாவது அடித்து அது போலீஸ் பிரச்னையாகிவிட்டால், அவரை ஜாமீனில் எடுத்து அறிவுரை கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதேபோல், கோட்டி மீது சிறு வயதில் இருந்தே காதல் கொண்டவராக டீனா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இவர் பல மொழிகள் கற்றவராகவும், கன்னியாகுமரியைச் சுற்றிப் பார்க்க வரும் பக்தர்களுக்கு திருவள்ளுவர் குறித்தும் விவேகானந்தர் குறித்தும் விளக்கிக் கூறக்கூடியவராக உள்ளார்.

படத்தின் கதை: எதெற்கெடுத்தாலும் கோபப்படும் கோட்டியை, மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தின் காவலர் பணியில் சேர்த்து விடுகின்றார், அருட்தந்தை. அந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது அன்பிற்குரியவராக மாறுகின்றார். கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண்கள் குளிப்பதை மூன்று பேர் பார்க்கின்றார்கள். இதனைக் கண்டுபிடித்த மாற்றுத் திறனாளி பெண்கள், தாங்கள் குளிப்பதை யாரோ பார்த்துவிட்டார்கள் என கோட்டியிடம் கூற, அதன் பின்னர் கோட்டி அவர்களை கொலை செய்கின்றான். மேலும் காவல் நிலையத்தில் தானே சரண்டரும் ஆகின்றார். கொலைக்கான காரணத்தை சொல்ல மறுக்கும் கோட்டி, அவரிடம் இருந்து உண்மையை வாங்க முயற்சிக்கும் காவல்துறை அதிகாரி சமுத்திரக்கனிக்கு பதில் கிடைத்ததா இறுதியில் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

திரைக்கதை: படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில், பாலா தனது வழக்கமான பாணியைத்தான் பின்பற்றியுள்ளார். குறிப்பாக, சீரியஸான கதையை இலகுவாக்கி கொண்டு செல்ல நகைச்சுவைக் கதாபாத்திரம், சீரியஸான கதாநாயகன், கதாநாயகனுக்கு என்று ஒரு நியாயம், தர்மம் என வழக்கமான திரைகக்தையை கையாண்டு இருந்தாலும் அதில் இன்னும் எதாவது புதுமை புகுத்தியிருக்கலாம். படம் முழுவதும் வரும் சைகை மொழி அதனை ரசிகர்களுக்கு புரியவைக்க ஏதுவான வசனங்களை அமைத்ததும், காட்சிகளை நகர்த்திச் சென்றதும் அருமை.

எப்படி இருக்கு? : சுமாரான கதை, விருவிருப்பான திரைக்கதை இல்லை என்றாலும், பாலா எதாவது, வைத்திருப்பார் என நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அரசியல் நையாண்டி வசனங்கள் கவனம் பெறுகின்றது. அருண் விஜய் மற்றும் அவரது தங்கை கதாபாத்திரத்தில் நடித்த ரிதா என இருவருமே நடிப்பில் 100 சதவீதத்தை கொடுத்துள்ளார்கள். இருவரில் யாராவது ஒருவருக்காவது கட்டாயம் விருது உறுதி. குறிப்பாக க்ளைமேக்ஸில் அருண் விஜய் நடிப்பால் ரசிகர்களை உருக வைக்கின்றார். இந்தப் படத்தை சூர்யா நிஜமாகவே மிஸ் செய்துவிட்டார். முக்கியமான காட்சியில் சமுத்திரக்கனி சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அது போதுமானதாக இல்லை. மிஷ்கின் மிடுக்கான நீதிபதியாக ஸ்கோர் செய்கின்றார். மொத்தத்தில் வணங்கான், இந்த பொங்கலில் கவனிக்கப்பட வேண்டியவன்.


Click it and Unblock the Notifications











