»   »  'வேலைக்காரன்' படம் எப்படி? #VelaikkaranReview

'வேலைக்காரன்' படம் எப்படி? #VelaikkaranReview

By Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil
வேலைக்காரனில் விசுவாசம் - படம் எப்படி ட்விட்டர் விமர்சனம்...வீடியோ
Rating:
2.5/5
Star Cast: சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில்
Director: மோகன் ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் நடிக்க மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், ஸ்நேகா, ரோபோ சங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, சார்லி, தம்பி ராமையா உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு குறைந்த காலத்திலேயே தமிழ் சினிமாவில் மிகப்பெரும் மார்க்கெட் உருவானது. அவரது படங்களை மினிமம் கியாரண்டியோடு வெளியிடலாம் என நம்பிப் படமெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

குழந்தைகள், பெண்கள் என ஃபேமிலி ஆடியன்ஸையும் கணிசமாக வைத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு 'வேலைக்காரன்' படம் இன்னும் வளர்ச்சியைத் தருமா? வாங்க பார்க்கலாம்...

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் படங்கள் இதுவரை ஒன்று கூட தயாரிப்பாளர்களின் கையைக் கடித்ததில்லை. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்ளிட்ட சில படங்கள் செம வசூல் அள்ளின. சில படங்கள் தோல்வியடையாமல் தப்பித்துக் கொண்டன. இன்றைய முன்னணி நடிகர்கள் பலரும் வெற்றியைத் தக்கவைக்க தவித்துக்கோன்டிருக்கும் சூழலிலும், தனது படங்களுக்கான மார்க்கெட்டை ஸ்ட்ராங்காக வைத்திருக்கிறார் சிவா. மாஸ் நாயகர்களுக்கான ஓப்பனிங் அவரது படங்களுக்கும் கிடைக்கிறது. அந்த வகையில், 'வேலைக்காரன்' படம் ரசிகர்களின் பயங்கரமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கிறது.

வேலைக்காரன் - கதைக்களம்

வேலைக்காரன் - கதைக்களம்

சென்னை கொலைகார குப்பம் என மருவிய கூலிக்கார குப்பத்தைச் சேர்ந்தவர் அறிவு (சிவகார்த்திகேயன்). தான் வாழும், தான் சார்ந்த பகுதியை முன்னேற்றிவிடத்துடிக்கும் ஒரு படித்த இளைஞன். அந்தப் பகுதியில் எல்லாமுமாக இருக்கும் தாதா பிரகாஷ்ராஜ் அந்தப் பகுதி மக்களை தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதை பொறுக்கமுடியாமல் அவரை மறைமுகமாக எதிர்ப்பதற்காக ஒரு கம்யூனிட்டி ரேடியோவை தொடங்குகிறார். அந்த எஃப்.எம் மூலம் பிரகாஷ்ராஜ் பற்றிய உண்மைகளை அவ்வப்போது அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். அவர் மக்களை சுரண்டுவதையும், அவரால் குப்பத்து மக்களுக்கு விளைந்த தீமைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறார்.

வேலைக்கும் போகும் சிவா

வேலைக்கும் போகும் சிவா

குடும்பச் சூழலின் காரணமாக சிவகார்த்திகேயனுக்கு நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தியாவின் டாப் நிறுவனம் ஒன்றில் விற்பனை அதிகாரியாக வேலைக்குச் சேர்கிறார்.. அங்கு உயரதிகாரியாக இருக்கும் ஃபகத் பாசில் சிவகார்த்திகேயனுக்கு வேலையில் சில நுணுக்கங்களையும், வளர்ச்சிக்கான வழிகளையும் கற்றுத் தருகிறார். ஃபகத் பாசிலுக்கு நெருக்கமானவராகவும் மாறிவிடுகிறார் சிவா. இப்படி இருக்கையில், சிவகார்த்திகேயனின் நண்பனான விஜய் வசந்த் பிரகாஷ்ராஜால் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்ற பிரகாஷ்ராஜும் எதிரியால் குத்தப்பட்டு மரணத் தருவாயில் இருக்கிறார். 'கூலிப்படையில் இருப்பவன் மட்டும் கொலைகாரன் இல்லை நீயும்தான் கார்ப்பரேட் கொலைகாரன்' என சிவாவை குழப்புகிறார் பிரகாஷ்ராஜ்.

அதிர்ச்சியாகும் சிவா

அதிர்ச்சியாகும் சிவா

தனது நண்பனை பிரகாஷ்ராஜ் கொன்றதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் பெரும் அதிர்ச்சி அடைகிறார். அதன் பின்னே, சமூகத்தின் மீதும், கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் பார்வை மாறுகிறது. சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்க்கு தீங்கு செய்துகொன்டிருப்பதை உணர்கிறார். இவை அத்தனையும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சதி வேலை என அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஒரு கூலிப் படைக்கும், கார்ப்பரேட் நிறுவனத்திற்குமான ஒற்றுமைகளை முடிச்சுப் போட்டுப் பார்க்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதத்தை கையில் எடுக்கிறார்.

ஊழியர்கள்

ஊழியர்கள்

நிறுவனங்களின் பெரும் பலம் அவற்றின் ஊழியர்கள். ஊழியர்களே நிறுவனத்தின் நல்லவைக்கும், தீயவைக்கும் நேரடிக் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பிட்ட நிறுவனத்தால் நுகர்வோர் பாதிக்கப்பட்டால், அதில் ஊழியர்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது என்பது புரிய வருகிறது. கார்ப்பரேட் வளர்ச்சி எனும் சுழலில் சிக்கி வருங்கால சமூகத்தையே அழித்துக் கொண்டிருப்பதில் நாமும் ஒரு ஆள் என உணர்ந்து கார்ப்பரேட் தீமைகளுக்கு எதிராக வேலைக்காரர்களைத் திரட்டுகிறார். கார்ப்பரேட் மூளையோடு செயல்படும் ஃபகத் பாசிலின் திட்டங்களை அவர் எப்படி முறியடித்து வேலைக்காரர்களுக்கும், சமூகத்திற்கும் நியாயம் செய்கிறார் என்பதே மீதிக் கதை.

வித்தியாசமாக இறங்கிய சிவா

வித்தியாசமாக இறங்கிய சிவா

கிராமத்து கதையோ.. சிட்டி சப்ஜெக்டோ.. ஹீரோயினோடு காதல், பிரிவு, கொஞ்சம் சென்டிமென்ட், நான்கு பாடல்கள், அதில் ஒன்று காதல் தோல்விப் பாடல் என வழக்கமான ரூட்டில் பயணிக்காமல் இந்த முறை கொஞ்சம் இறங்கி அடித்திருக்கிறார் சிவா. சிவகார்த்திகேயன் பேசுவதை ரசிகர்கள் தம்மில் ஒருவர் பேசுவதாகத்தான் பார்க்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போலவே வசனங்களையும் நான்கு அடியாட்களைத் தெறிக்கவிட்டு அவர்கள் மேல் ஒற்றைக் காலை வைத்து மாஸாக பேசுவது போல அல்லாமல், சாதாரண நபராகவே பேசுகிறார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

ஃபகத் பாசில் அசத்தல்

ஃபகத் பாசில் அசத்தல்

ஃபகத் பாசில் கார்ப்பரேட் முதலாளியாக ஸ்மார்ட் நடிப்பு. எம்.என்.சி கம்பெனிக்கான பெர்ஃபெக்ட் ட்ரெஸ் கோடில் மலையாள ஃபகத் அத்தனை கச்சிதம். கார்ப்பரேட்டுகள் உடலால் செய்யும் வேலைகளை விட மூளையால் செய்வதே அதிகம் என உணர்த்தும் ஸ்மார்ட் வொர்க்கை படத்திலும் கையாண்டிருக்கிறார். அதிர்ச்சி, கோபம், சிரிப்பு அத்தனையும் மெல்லியதாக இருந்தாலும், அவரது கேரக்டருக்கு செமையாக செட் ஆகிறது. இந்தப் படத்திற்கு அவரே டப்பிங்கும் பேசியிருக்கிறார். மலையாள வாடை இல்லாமல் சுத்தமான கார்ப்பரேட் லாங்வேஜ் அசத்தல். இந்தப் படத்தில் மினி கோடம்பாக்கமே நடித்திருக்கிறது. நடிகர்கள் லிஸ்ட்டே ஒரு பத்தி வரும் அளவுக்கு நிறைய தெரிந்த முகங்கள். அத்தனை பேரும் குறைசொல்லமுடியாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

கார்ப்பரேட் சதி

கார்ப்பரேட் சதி

நடுத்தர வர்க்கத்தினரிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி நுழைகின்றன, தங்களை நோக்கி மக்களை எளிதில் எவ்வாறு ஈர்க்கின்றன என டீட்டெயிலாகவே சொல்லியிருக்கிறார்கள் படத்தில். மக்களுக்கு உற்பத்தி பொருளின் மீது ஆசையைத் தூண்டுவதற்கான மார்க்கெட்டிங் டேக்டிக்ஸ், நுகர்வு கலாச்சாரம் பெருகியதற்கான சைக்காலஜிக்கல் ஸ்ட்ராடஜி என ஒரு மேலாண்மைப் பாடமே நடத்தியிருக்கிறார் மோகன் ராஜா. கமர்ஷியல் ஆடியன்ஸ் பெற்றுள்ள நடிகரின் படத்தில் இந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுவது பலருக்கும் சென்றடையும் என்கிற விதத்தில் இதை சமூக நோக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

உணவு அரசியல்

உணவு அரசியல்

உணவு அரசியல் பற்றியும், நாம் அன்றாடம் சாப்பிடும் பொருட்களுக்குப் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் சதிகளையும் ஓரளவுக்கு நேர்மையாகவே சாடியிருக்கிறார்கள். பொதுமக்களுக்கு கெமிக்கல் கலந்த உணவுகளை விற்பனை செய்துவிட்டு, பெரும் முதலாளிகள் இயற்கை உணவுகளை நாடும் முரணையும் வசனமாக வைத்திருக்கிறார்கள். உணவு என்பது மாபெரும் வணிகமாகிவிட்ட இந்தச் சூழலில், மக்களைக் குறிவைக்கும் கார்ப்பரேட்கள் பற்றிய ஒரு எச்சரிக்கைப் பதிவாக இந்தப் படம் வந்திருக்கிறது. 'தனி ஒருவன்' படத்தில் மருத்துவ உலகின் க்ரைம் பற்றிப் பேசிய மோகன் ராஜா இதில் உணவு அரசியலை செம்மையாக படமாக்கியிருக்கிறார்.

குப்பத்து செட்

குப்பத்து செட்

செட் காட்சிகள் என நம்பமுடியாத அளவுக்கு ரியலாகவே குப்பத்து பகுதிகளை உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ். நெருக்கமான வீடுகள், மரங்கள், பூசப்படாத சுவர்கள் என குப்பத்து பகுதி மக்களின் வாழ்வியலை நேர்த்தியாகக் காட்டியிருந்தது செட். அந்தப் பகுதிகளை தத்ரூபமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. எடிட்டிங்கில் சிறப்பாக உழைத்திருக்கிறார் ரூபன். கலை இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும் அவ்வளவு உழைத்த படக்குழு திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது

அனிருத் இசை

அனிருத் இசை

பின்னணி இசை, பாடல்களில் இசையமைப்பாளர் அனிருத் கலக்கியிருக்கிறார். 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் ஆடியோ வெளிவந்தபோதே வெறித்தன ஹிட் அடித்தது எல்லோருக்கும் தெரியும். தியேட்டரிலும் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் விசில் பறக்கிறது. 'எழு வேலைக்காரா' பாடல் படத்தின் இறுதியில் வருகிறது. படம் முடியும்போது இருக்கையை விட்டு எழுந்தவர்களையும், நிற்கவைத்திருக்கிறது அனிருத்தின் அதிரடி இசை.

நல்ல படம்

நல்ல படம்

மேக்கிங்கில் நன்கு மெனக்கெட்ட படக்குழுவினர் திரைக்கதையை இன்னும் வலுவாக்கி த்ரில்லாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அதிகம் தொய்வில்லாத காட்சிகளின் மூலம் ஈர்த்திருக்கிறார் மோகன் ராஜா. ஹீரோயின் நயன்தாராவுக்கும் படத்தில் அதிக ஸ்கோப் இல்லை. சிவா - நயன்தாரா ரொமான்ஸ் காட்சிகள், காதல் காட்சிகள் வேகத்தைக் குறைக்கும் எனத் தவிர்த்திருக்கலாம். "விசுவாசம் என்பது முதலாளிக்கு விசுவாசமாக இருப்பது அல்ல... வேலைக்கு விசுவாசமாக இருப்பது" என்பது போல ஆங்காங்கே சூப்பபரான வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மக்களுக்குத் தேவையான நல்ல சமூகக் கருத்தை நேர்மையாகச் சொல்லி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வென்றிருக்கிறான் இந்த 'வேலைக்காரன்'.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Read 'Velaikkaran' cinema review here. Sivakarthikeyan and Nayanthara starring Velaikkaran id directed by Mohan raja. 'Velaikkaran' speaks Food politics and corporate tactics loudly. How is 'Velaikkaran' movie? Read now.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more