Venom: The Last Dance Review: வெனம் - தி லாஸ்ட் டான்ஸ் விமர்சனம்.. எதிர்பார்த்த அளவுக்கு இருக்கா?
நடிகர்கள்: டாம் ஹார்டி, சிவெட்டல் எஜியோஃபர், ஜுனோ டெம்பிள்
இசை: டேன் டீக்கன்
இயக்கம்: கெல்லி மார்செல்
சென்னை: டாம் ஹார்டி திரைக்கதை எழுதி, தயாரித்து நடித்துள்ள வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் இன்று உலகம் முழுவதும் வெளியானது. மார்வெல் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் புரொடக்ஷன் வேல்யூ அதிகம் கொண்ட படமான இந்த படம் உருவானாலும், கதை மற்றும் திரைக்கதையில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாததால் ரசிகர்களை இந்த படமும் ரொம்பவே ஏமாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் வெனம் சீரிஸின் 3வது மற்றும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது பாகத்தின் இறுதியில் டாம் ஹார்டி இறப்பது போல காட்சிகள் இருந்த நிலையில், அவரை மீண்டும் வெனம் காப்பாற்றி எப்படி கதையை நகர்த்துகிறது என்றும் மல்டிவெர்ஸில் இந்த படத்தையும் கோர்த்து விட்டு மார்வெல் என்னவெல்லாம் மாயாஜாலம் செய்துள்ளது என்பது குறித்தும் விரிவாக இங்கே பார்க்கலாம்.
வெனம்: தி லாஸ்ட் டான்ஸ் கதை: டாம் ஹார்டி நடிப்பில் வெளியான வெனம் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் 2ம் பாகத்தின் கதையே ரசிகர்களை கடுப்பேற்றிய நிலையில், 3வது பாகத்தின் கதை 2ம் பாகத்தை விட சற்றே சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால், ஏற்கனவே பார்த்த பல மல்டிவெர்ஸ் படங்களில் இடம்பெற்ற அந்த வாய்டு இடமும், அனைத்து உலகத்துக்கான கடவுள், ஏகப்பட்ட வேரியண்டுகள் என இந்த படத்திலும் அதே டெம்பிளேட் தான்.

எடி கதாபாத்திரத்தில் மீண்டும் அசத்தியுள்ளார் டாம் ஹார்டி. எடி மற்றும் வெனம் இரண்டுமே இணைந்து இருந்தால் தான் ஒரு கோடக்ஸ் உருவாகும் என்றும் அந்த கோடக்ஸ் தான் 'நல்' எனும் கடவுளுக்குத் தேவை அதற்காக அவர் ஏவி விடும் பல்லி போன்ற விசித்ர ஏலியன்களிடம் இருந்து ஹீரோ தப்பித்தாரா? கடைசியில் 'நல்' நினைத்தது நடந்ததா? வெனம் லாஸ்ட் டான்ஸ் என்பதால் எடி மற்றும் வெனம் என இருவருக்கும் என்ன நேர்ந்தது? என்கிற முடிவுடன் கடைசி படத்திலும் 2 போஸ்ட் கிரெடிட்ஸ் வைத்துள்ளனர்.
படம் எப்படி இருக்கு?: முதல் 15 நிமிட படத்தை மிஸ் செய்யாமல் ரசிகர்கள் பார்த்து விட்டால் தான் கொடுத்த காசுக்கு வொர்த்தாக இருக்கும். லேட்டாக போய் விட வேண்டாம். முதல் பாதி முழுவதுமே அட்டகாசமாக படம் நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ரம்பம் போட ஆரம்பித்து விடுகின்றனர். கிளைமேக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும் எமோஷனல் கனெக்ட் பெரிதாக ஒட்டவில்லை. மொத்தமாகவே படம் ஆன் அண்ட் ஆஃபாகவே உள்ளது.

பிளஸ்: கெல்லி மார்செல் முடிந்தவரை ரசிகர்களை என்கேஜாக வைத்திருக்க வேண்டும் என நினைத்து ஆரம்பத்திலேயே சரவெடி காட்சிகளை இறக்கியது படத்திற்கு பலமாக அமைந்தது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, சிஜி என அனைத்துமே அசத்தல். டாம் ஹார்டி மற்றும் 2012 படத்தில் நாயகனாக நடித்த சிவெட்டல் எஜியோஃபர் இந்த படத்திற்கு பெரிய பிளஸ். வெனம் செய்யும் அட்டகாசங்கள், ஐமேக்ஸ் 3டி எல்லாமே சிறப்பாகவே உள்ளது. சிம்பியார்ட்ஸின் கடவுள் மற்றும் அவர் அனுப்பும் ஏலியன்களின் அட்டகாசங்கள், ஒரு காட்சியில் சிம்பியார்ட்கள் அனைத்தையும் ஒரு இடத்தில் காட்டப்படும் இடம் என ஏகப்பட்ட பிளஸ்கள் உள்ளன.
மைனஸ்: திரைக்கதையில் அதிலும் இரண்டாம் பாதியில் தான் ஆங்காங்கே பல பிரச்சனைகள் வருகின்றன. நிறைய காட்சிகள் தேவையில்லாமல் லேக் அடிக்கின்றன. மெய்யழகன் உள்ளிட்ட தமிழ் படங்களை சமீப காலமாக ட்ரிம் செய்வது போல இந்த படத்தையும் கொஞ்சம் எடிட்டர் கருணை காட்டாமல் ட்ரிம் செய்திருக்கலாம். வெனம் ரசிகர்களையே இந்த படம் ஓரளவுக்குத்தான் திருப்திப்படுத்துகிறது. நார்மல் ரசிகர்களுக்கு படம் எந்தளவுக்கு வொர்க்கவுட் ஆகும் என்பது கேள்விக்குறிதான். ஆபாசக் காட்சிகள் இல்லாத நிலையில், குழந்தைகள் இந்த படத்தை ரொம்பவே என்ஜாய் செய்வார்கள் என்பது உறுதியாக தெரிகிறது. ஸ்பைடர்மேன் வருவார் போஸ்ட் கிரெடிட்டில் என்று எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்.


Click it and Unblock the Notifications











