Vettaiyan Review: வேட்டையன் விமர்சனம்.. என்கவுன்ட்டரை ஆதரிக்குதா? எதிர்க்குதா?.. படம் பார்க்கலாமா?
நடிகர்கள்: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர்
இசை: அனிருத்
இயக்கம்: த.செ. ஞானவேல்
சென்னை: ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படமான வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சியாக வெளியானது. அதிகாலையில் இருந்தே வேட்டையன் படத்துக்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்த நிலையில், படமும் பாசிட்டிவாகவே உள்ளது.
போலீஸ் அராஜகத்துக்கு எதிராக ஜெய்பீம் படத்தை இயக்குநர் என்னப்பா என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்தை நடிக்க வைத்து என்கவுன்ட்டரை ஆதரிக்கிறார். இந்த படத்தை வெளியிடவே கூடாது என சிலர் வழக்குகள் தொடுத்தனர்.

ஆனால், வேட்டையன் படத்தை பார்க்கும் ரசிகர்கள் இந்த படம் என்ன விஷயத்தை பேசுகிறது என்றும் த.செ. ஞானவேல் தன்னுடைய சமூக அக்கறையை எந்தளவுக்கு காட்டியிருக்கிறார் என்பதை பார்க்கும் போது நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. வேட்டையன் திரைப்படம் கமர்ஷியல் படமா? கதையம்சம் கொண்ட படமா? என்பது குறித்து விரிவான விமர்சனத்தை இங்கே காணலாம்.
வேட்டையன் கதை: அதியன் கதாபாத்திரத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக மாஸ் காட்சிகளை வைத்து நானும் ரஜினி ரசிகன் தான் என நிரூபித்துள்ள ஞானவேல் என்னிடம் நல்ல இன்வெஸ்டிகேஷன் கதையும் இருக்கு என்பதை படமாக எடுத்துக் காட்டியுள்ளார். அதியன் மற்றும் அவரது மனைவி என்கவுன்ட்டர் செய்தால் அந்த பழி மற்றும் பாவம் தங்கள் குழந்தைகளை வந்து சேரும் என்பதற்காக குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை என சொல்லும் இடத்திலேயே ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தை சிறப்பாக இயக்குநர் செதுக்கி விட்டார்.
பள்ளியில் போதைப் பொருள் பதுக்கும் நபர்களை காட்டிக் கொடுக்கும் போல்டான ஆசிரியையாக வரும் துஷாரா விஜயன் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார். அவருடைய வழக்கை அவசரமாக முடிக்க வேண்டும் என்பதற்காக பலாத்காரம் செய்த நபர் என குற்றம்சுமத்தப்படும் நபரை தேடி பிடித்து வேட்டையாடுகிறார் வேட்டையன்.
ஆனால், அது என்கவுன்ட்டர் இல்லை மர்டர் என்பதை நீதிபதி அமிதாப் பச்சன் ரஜினிகாந்துக்கு உணர்த்தும் இடத்தில் இடைவேளை ஆரம்பமாகிறது. அதன் பின்னர், சரண்யா டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த துஷாராவின் கொலை வழக்கை எப்படி கண்டு பிடிக்கிறார். உண்மையான வில்லன் யாரு? ரஜினிகாந்த் அவரை என்கவுன்ட்டர் செய்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: என்கவுன்ட்டர் சரியான தீர்வு அல்ல என்பதை உணர்த்தும் பவர்ஃபுல்லான ஜட்ஜ் ரோலில் அமிதாப் பச்சன் நடித்து மாஸ் காட்டியுள்ளார். குற்றவாளிகளை தண்டித்து குற்றங்களை குறைக்கும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தின் நடிப்பு வேறலெவல். வயதான நிலையிலும் ரஜினிகாந்தின் சில மாஸ் காட்சிகளில் அவரை யங்காகவும் எனர்ஜியாகவும் இயக்குநர் காட்டியிருப்பது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ் தான்.
ஆக்ஷன், பாடல், நடனம், பகத் ஃபாசிலை வைத்து காமெடி, ராணா டகுபதியை வைத்து ஆன்லைன் கல்வியில் நடக்கும் ஊழல் மற்றும் தொழிலதிபர்கள் இந்த நாட்டையும் நீதித்துறையும் எப்படி எல்லாம் வளைக்கின்றனர் என ஒவ்வொரு ஏரியாவிலும் புகுந்து இயக்குநர் ஞானவேல் தைரியமாக சிக்ஸர் அடித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கும் பேட்டரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பகத் ஃபாசிலுக்கும் இடையே ப்ரீ கிளைமேக்ஸில் வரும் அந்த உணர்வுப்பூர்வமான காட்சியில் பகத் ஃபாசில் ஸ்கோர் செய்துள்ளார். அவருக்கு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுக்கும் காட்சியில் ரித்திகா சிங்கிடம் மெல்லிய காதல் உணர்வு வெளிப்படுவதும் சிறப்பு.
கிளைமேக்ஸில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயத்தை கொடுக்காமல், ஞானவேல் தன்னுடைய அறத்தை நிலைநாட்டியது தான் படம் மக்கள் மனதில் நீடித்து நிற்கும் என்பதை உணர்த்துகிறது. ஹீரோக்களுக்கான பில்டப் படங்களாக இல்லாமல், நல்ல கதைகளில் ஹீரோக்களை பயன்படுத்தும் போது தான் அந்த ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஆக முடியும்.
பிளஸ்: அனிருத்தின் இசை படம் முழுக்க எங்கெல்லாம் அண்டர் பிளே பண்ண வேண்டுமோ அங்கெல்லாம் அடக்கி வாசித்து விட்டு எங்கெல்லாம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த வேண்டுமோ அங்கெல்லாம் இறங்கி அடித்திருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அவரது பிஜிஎம் மற்றும் பாடல் வெறித்தனம். அமிதாப் பச்சனை ஊறுகாய்க்காக தொடாமல் அவருக்கான கதாபாத்திரத்தையும் சிறப்பாக எழுதி BUDS Act உள்ளிட்ட விஷயத்தை அவர் சொல்லும் இடங்களில் எல்லாம் வேறலெவல் அப்ளாஸை அள்ளுகிறது படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் காட்சிகள் எல்லாம் குறி வச்சா இரை விழணும் வசனமும் மஞ்சு வாரியருக்கு வைக்கப்பட்ட அந்தவொரு மாஸ் காட்சியும் படத்திற்கு பலம்.
துஷாரா விஜயனின் நடிப்பு மற்றும் அந்த பலாத்கார காட்சியை படமாக்கப்பட்ட விதமும் அந்த கொலையை திரும்ப திரும்ப எடிட்டர் பயன்படுத்தி படம் முழுக்க அவருக்கு நேர்ந்த கொடுமைகளை ரசிகர்களிடம் கடத்திய விதமும் கண்கலங்க வைத்து விடுகிறது. ஃபகத் ஃபாசில் ரஜினிகாந்துக்கு துப்புக் கொடுக்கும் திருடனாக வந்து ரசிகர்களை ஆரம்பத்தில் இருந்து போரடிக்காமல் காமெடி செய்து சிரிக்க வைத்து கடைசியில் அழவும் வைத்து விடுகிறார். குப்பத்து ஆட்கள், கலர் அடித்த தலையுடன் இருந்தால் அக்யூஸ்ட் என்கிற எண்ணத்துக்கு எல்லாம் சவுக்கடி கொடுத்திருக்கிறார். என்கவுன்ட்டரை கடைசியில் ஆதரிக்காமல் நீதியை நிலைநாட்டி ஜெயித்துக் காட்டியுள்ளார் ஞானவேல்.

மைனஸ்: ராணா டகுபதியை பார்த்தாலே எரிச்சல் அடைய வைக்கும் அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை செதுக்கியிருப்பதும் அவர் முறைக்கும் காட்சிகளில் பாகுபலி பல்வாள் தேவனை மீண்டும் பார்த்த உணர்வு கொடுப்பது சிறப்பு. ஆனால், அவரது போர்ஷனில் ரைட்டப் பல இடங்களில் படத்தை முடிக்கும் அவசரத்தில் எழுதப்பட்டதை போலத்தான் தோன்றுகிறது. அவ்வளவு பெரிய தொழிலதிபர் இன்னும் என்னவெல்லாம் செய்திருப்பார் என்பதை டீட்டெய்லாகவும் வில்லன் போர்ஷனை கொஞ்சம் சீரியஸாகவும் கொடுக்காமல் துணிவு வில்லன் போல மாற்றியது படத்தின் குறையாக பார்க்கப்படுகிறது.
மேலும், சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள் அதற்கு இயக்குநர் ரஜினிஸத்தை பூசி அனிருத்தை துணைக்கு வைத்துக் கொண்டு கமர்ஷியல் படமாக கட்டிக் கொடுத்திருக்கிறார். ஒரு சில குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இது ஒரு தரமான படம் தான். ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் தாராளமாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











