Vidamuyarchi Review: விடாமுயற்சி விமர்சனம்.. ஆப்பரேஷன் சக்சஸ்.. ஆனால் பேஷன்ட்?.. படம் எப்படி?
நடிகர்கள்: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன்
இசை: அனிருத்
இயக்கம்: மகிழ் திருமேனி
சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 2 ஆண்டுகள் கழித்து அஜித் குமாரின் படம் வருகிறது என்றதுமே ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்க்கத் தொடங்கினர். ஆனால், இயக்குநர் மகிழ் திருமேனி அளித்த பேட்டிகளின் மூலம் இந்த படத்தில் மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனம் என எந்தவொரு கமர்ஷியல் அம்சமும் இருக்காது என்பது ரசிகர்களுக்கு தெளிவாக தெரிந்து விட்டது.
எப்படி இருந்தாலும், படம் தரமாக ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பிரேக்டவுன் படத்தின் அப்பட்டமான ரீமேக்காக மட்டுமே படம் இருந்தது ரொம்பவே அதிர்ச்சியை அளித்தது.

சில கார் ஸ்டன்ட் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் 2ம் பாதியில் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்குமே தவிர ஒட்டுமொத்த படமாக பார்த்தால் ரொம்பவே ஃபிளாட்டான பழைய டெம்பிளேட் கதை தான் என்பதால் படம் பல இடங்களில் டல் அடிக்கிறது. விடாமுயற்சி படத்தில் எதெல்லாம் பிளஸ், எதெல்லாம் மைனஸ் என்பது குறித்து விளக்கமாக இங்கே பார்க்கலாம் வாங்க..
விடாமுயற்சி கதை: அர்ஜுன் (அஜித் குமார்), கயல் (த்ரிஷா) இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். 12 ஆண்டுகள் கழித்து கயலுக்கு இன்னொருவர் மீது காதல் ஏற்பட்டு விட்டதால் அர்ஜுனை பிரிய முடிவு செய்கிறார். விவாகரத்துக்கு அப்ளை செய்த நிலையில், விவாகரத்து வழக்கு முடியும் வரை அம்மா வீட்டுக்குப் போறேன் என்று சொல்ல, சாலை வழியாக காரில் போகலாம். கடைசி ரோடு ட்ரிப் என அழைத்துச் செல்லும் அஜித்தின் கார் பிரேக்டவுன் ஆக உதவ வரும் அர்ஜுன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஜோடி த்ரிஷாவை கடத்த அதற்கு பின்னணியில் இருப்பது யார்? காணாமல் போன தனது மனைவியை அஜித் கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை. பிரேக்டவுன் பார்த்தவர்களுக்கு இந்த படத்தின் கதை நன்றாகவே அத்துப்படி ஆகியிருக்கும் என்பது தனிக்கதை.

படம் எப்படி இருக்கு?: 12 வருஷத்துக்கு முன்பு அஜித், த்ரிஷா காதலிக்கும் காட்சிகள் மற்றும் சவதீகா பாடல் வரை தியேட்டரில் ரசிகர்கள் "கடவுளே அஜித்தே" என கோஷம்போட்டு ஆரவாரம் செய்த நிலையில், அந்த பாடல் முடிந்து அஜித்தை த்ரிஷா டைவர்ஸ் பண்ணப் போறேன் என்று சொன்னதுமே ப்யூஸ் போன பல்பாக ரசிகர்கள் அமைதியாக இடைவேளை காட்சியில் கூட எந்தவொரு ஆர்வமும் இன்றி படம் டெட் ஸ்லோவாகவே நகர்வது படத்திற்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.
அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா நன்றாக நடித்தாலும் அவர்கள் சொல்வதை படத்தில் வரும் கதாபாத்திரங்களே நம்புவதாக இல்லை. ரசிகர்கள் அதை எப்படி நம்புவார்கள் என்று இயக்குநர் யோசித்து இப்படியொரு விஷயத்தை புகுத்தினார் என்றே தெரியவில்லை. ரெஜினா கசாண்ட்ராவுக்கான ஃபிளாஷ்பேக் எல்லாம் கூட தேவையில்லாத ஆணி தான்.
பிளஸ்: அஜித் குமார் மட்டுமே இந்த படத்தை முடிந்தவரை தாங்கிப் பிடித்திருக்கிறார். ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா எல்லாம் அவரை போட்டு அந்த அடி அடிக்கும் போது ரசிகர்களுக்கே ரத்தம் கொதிக்கிறது. தலை முடியை பிடித்து இழுப்பது, பூமர் என சொல்லி அசிங்கப்படுத்துவது போன்ற காட்சிகளில் அஜித் குமார் அண்டர்பிளே செய்து நடித்திருப்பது மிகப்பெரிய பிளஸ் தான். இடைவேளைக்குப் பிறகும் படத்தில் வரும் கார் ஸ்டன்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் எல்லாமே அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. கிளைமேக்ஸில் ரெஜினா கசாண்ட்ராவுக்கு ஏற்படும் அந்த முடிவு சீன் மிரட்டல்.

மைனஸ்: த்ரிஷாவின் கதாபாத்திரம் படத்தில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த பிரகாஷ் யார் என்பதையும் கடைசி வரை காட்டவே இல்லை. 24 படத்தின் இடைவேளை காட்சியில் சூர்யாவை சுட்டு வீழ்த்தும் போது இருந்த ஹைப் இந்த படத்தில் சீரியலில் ஏமாற்றும் எபிசோடு கட் போலவே இருந்தது அபத்தத்தின் உச்சம். அஜர்பைஜான் சாலைகளை காட்டிய விதம் மற்றும் காருக்குள் ஆரவ் மற்றும் அவரது கேங்குடன் சண்டையிடும் ஒரு சீன் சிறப்பாக இருந்தது. அஜித் ரசிகர்கள் ஒருமுறை இந்த படத்தை பார்க்கலாம். பிரேக் டவுனை சரியாக ரீமேக் செய்துள்ளார் மகிழ் திருமேனி. ஆப்பரேஷன் சக்சஸ், ஆனால், பேஷன்ட் டெத் கதையாகத்தான் விடாமுயற்சி படம் உள்ளது.


Click it and Unblock the Notifications











