Viduthalai 2 Review: விடுதலை 2 விமர்சனம்.. அரசியல் பாடத்தை நடத்திய வெற்றிமாறன்.. தரமா இருக்கா?
நடிகர்கள்: சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர்
இசை: இளையராஜா
இயக்கம்: வெற்றிமாறன்
ரேட்டிங்:
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியை கதையின் நாயகனாக கொண்டு உருவான விடுதலை முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி என்பதை உணர்த்தியிருந்தார். அவருடைய கைதுடன் முதல் பாகம் நிறைவடைய 2ம் பாகத்தில் பெருமாள் வாத்தியார் ஏன் வன்முறையை கையில் எடுக்கிறார். அந்த ரயில் விபத்துக்கான காரணம் என்ன? அவருடைய இளமைப் பருவம், காதல் குடும்பம், மீண்டும் அவர் தப்பிப்பது மற்றும் கடைசியில் அவருக்கு என்ன ஆகிறது என்பதை 2ம் பாகத்தில் செதுக்கியிருக்கிறார் வெற்றிமாறன்.
எண்டர்டெயின்மென்ட் விரும்பிகளுக்கு நிச்சயம் விடுதலை 2 திரைப்படம் ஒரு நல்ல சுவாரஸ்யமான படமாக இருக்க வாய்ப்பில்லை. இயக்குநர் வெற்றிமாறன் சொல்ல வந்த அரசியலை முதல் காட்சியில் இருந்து ஆரம்பித்து படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சூரி செய்யும் சம்பவம் வரை கொண்டு சென்றிருக்கிறார்.

உலகளவில் எத்தனையோ அரசியல் படங்கள் வெளியாகி உள்ளன. அரசு இப்படித்தான் செயல்படுகிறது. தீவிரவாதம் முளைக்க இதுதான் காரணம் என ஆணித்தரமாக வெற்றிமாறன் படமாக கொடுக்காமல் பாடமாகவே இந்த படத்தைக் கொடுத்துள்ளார். அது எந்தளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது? எங்கெல்லாம் போர் அடிக்குது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
விடுதலை 2 கதை: கான்ஸ்டபிள் குமரேசன் (சூரி) பெருமாள் வாத்தியாரை (விஜய் சேதுபதி) பிடிக்க உதவிய நிலையில், போலீஸ் அதிகாரியான கெளதம் மேனன் பெருமாள் வாத்தியாரை விசாரிக்கும் இடத்தில் இருந்து படத்தை ஆரம்பிக்காமல் வாத்தியாராக இருந்த பெருமாள் கருப்பனுக்கு (கென் கருணாஸ்) நேரும் கொடுமை காரணமாக தனது பெயரையே கருப்பன் என மாற்றிக் கொண்டு பண்ணையார்த்தனத்துக்கு எதிராக புரட்சி செய்கிறார். தோழராக வரும் ஆடுகளம் கிஷோரின் அரசியல் சித்தாந்தங்களை கற்றுக் கொண்டு தோழராக மாறும் விஜய் சேதுபதி ஆடுகளம் கிஷோரின் கொலைக்குப் பிறகு மக்கள் படையை பயங்கரவாத இயக்கமாக மாற்றுகிறார். அவர் கைது பற்றி செய்தி வெளியான நிலையில், வெளியே நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் போலீஸாரிடம் இருந்து தனது மக்கள் படை மூலம் தப்பிச் செல்லும் பெருமாள் வாத்தியாருக்கு கடைசியாக என்ன ஆகிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக மிரட்டிய குமரேசன் என்ன ஆனார் என்ன செய்தார் என்கிற கிளைமேக்ஸ் உடன் விடுதலை 2 கதை முடிகிறது.

படம் எப்படி இருக்கு?: பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி தனது நடிப்பால் மிரட்டுகிறார். ஆரம்பத்தில் வரும் கருப்பன் (கென் கருணாஸ்) போர்ஷன் தான் படத்திற்கு பெரிய பலமாக அமைகிறது. பண்ணையார்கள் தங்கள் வயலில் கூலி வேலை செய்யும் பெண்களை படுக்கைக்கு கொண்டு சென்று கெடுப்பதை எதிர்த்து பண்ணையார் ஒருவரை கென் கருணாஸ் வெட்டும் காட்சிகளிலேயே படத்தின் ஃபயர் பற்றிக் கொள்கிறது. ஆனால், கென் கருணாஸ் கொல்லப்படும் இடத்தில், அவரை காப்பாற்ற போராடும் பெருமாள் வாத்தியாரையும் பண்ணையாரான போஸ் வெங்கட் குத்திவிடுகிறார். அதில் இருந்து அவரை தோழராக வரும் ஆடுகளம் கிஷோர் காப்பாற்றுகிறார்.
கரும்பு தொழிற்சாலையில் நடக்கும் பிரச்சனையை சரி செய்ய விஜய் சேதுபதியை அனுப்ப அந்த நிறுவனத்தின் ஓனர் மகளான மஞ்சு வாரியரும் தோழராக புரட்சி பேசி வருகிறார். அவருடன் விஜய் சேதுபதிக்கு காதல் மலர்ந்து திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு வாழ்கிறார். ஒரு கட்டத்தில் ஆயுதம் எடுத்துசிண்டிகேட் ஆட்களை அழித்தொழிக்கும் புரட்சியில் ஈடுபடும் விஜய் சேதுபதி மக்கள் இயக்கத் தலைவராக மாறுகிறார்.

முதல் பாகத்தில் காட்டப்பட்ட அந்த கோரமான ரயில் விபத்துக்கு குண்டு வைத்தது நாங்கள் தான் என்றும் ஆனால், அதன் பின்னர் இருக்கும் அரசாங்கத்தின் சதியை அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் மக்களாட்சி என்கிற பெயரில் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் நடத்தும் வன்முறைகளை தோலுரித்துக்காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.
பிளஸ்: வேல்ராஜின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் இசையும் படத்துக்கு பெரும் பலமாக உள்ளது. அந்த பனி நிறைந்த காட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் புல்லரிக்குது. ஆக்ஷன் போர்ஷன், மக்களுக்கு ஆரசியல் பாடம் நடத்தும் இடங்கள், விஜய் சேதுபதியின் நடிப்பு, சூரி, ராஜீவ் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் என நடிகர்கள் எல்லாம் அப்படியே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெருமாள் வாத்தியாரின் அரசியல் சித்தாத்தம் குமரேசனை எப்படி மாற்றுகிறது என்கிற இடம் தான் இந்த படத்திற்கு உயிர்நாடி. அதை கச்சிதமாக காட்டி வெற்றிக் கண்டுள்ளார் வெற்றிமாறன். சேத்தன் மலையில் இருந்து விழப்போகும் காட்சி எல்லாம் மிரட்டலின் உச்சம். ஆனால், அதன் பின்னரும் அவருடைய கதாபாத்திரம் செய்யும் செயல்களை பார்த்தால் சில ஜென்மங்கள் எல்லாம் திருந்தவே திருந்தாது என்பதை ஆழமாக பதிய வைத்துள்ளார் இயக்குநர்.

மைனஸ்: சாதிய அரசியலை அசுரன் படத்திற்கு பிறகு மீண்டும் கையில் எடுத்துள்ளார் வெற்றிமாறன். முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும் கதை மற்றும் திரைக்கதை இல்லாமல் பல இடங்களில் தொய்வு தென்படுகிறது. விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் லவ் டிராக், கடைசியில் சுற்றவிடும் கிளைமேக்ஸ் என ஆங்காங்கே குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. சூரிக்கு முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு 2ம் பாகத்தில் முக்கியத்துவமே இல்லாமல் போய்விட்டது மிகப்பெரிய மைனஸ். கற்பனை கதை என்று ஆரம்பத்திலேயே வெற்றிமாறன் அழுத்தம் திருத்தமாக வாய்ஸ் ஓவரில் சொன்னாலும் இது ஒரு வரலாற்று பதிவாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய ஆழமான எண்ணம் என்று தெரிகிறது. விடுதலை படம் அளவுக்கு க்ரிப்பிங்காக இந்த படம் இல்லை என்றாலும், கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு தான்.


Click it and Unblock the Notifications











