Muthu Engira Kaattaan Review: விஜய்சேதுபதியின் முத்து என்கிற காட்டான்.. சூப்பரா.. சுமாரா? விமர்சனம்!
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் 'முத்து என்கிற காட்டான்' வெப் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, பார்வையாளர்களை மெதுவாகக் கட்டிப்போட்டு ரசிகர்களுக்கு ஒரு த்ரில்லான அனுபவமாக மாறியுள்ளது. இது சாதாரண குற்ற விசாரணை கதையாக மட்டுமில்லாமல் ஒரு மனிதன் வாழ்க்கையில் நடந்த பல புதிர்களை சொல்லும் கதையாக உள்ளது. தற்போது 'முத்து என்கிற காட்டான்' வெப் தொடரின் விமர்சனத்தை பார்க்கலாம்.
கதை ஆரம்பிக்கும் போது, ஒரு போலீஸ் நிலையத்தில் எந்தவிதமான வழக்குகளும் இல்லாததால் மூடப்பட இருக்கிறது. அந்த நேரத்தில் தான் காட்டுப்பகுதி ஒன்றில் துண்டிக்கப்பட்ட முத்து (விஜய்சேதுபதி)யின் தலை கிடக்கிறது. அதன் அருகிலேயே ஒரு பையில் பணமும், தன்னை அடக்க செய்யும்படி ஒரு கடிதமும் உள்ளது. அந்தத் தலை யாருடையது? அந்த மர்ம மனிதன் யார் என போலீசார் விசாரணையை நடத்தும் போது தான். அது முத்து என்பதும், ஒவ்வொருவரும் முத்துவைப் பற்றி ஒவ்வொரு கதையை சொல்கின்றனர்.

முத்து என்கிற காட்டான்: ஒருவர் முத்து கண்மணி டான்ஸ் குழுவில் பாதுகாவலராக இருந்தார் என்றும், வாட்ச் மெக்கானிக் என்றும், கேரளாவில் யானை பாகன், ஆட்டுபுழுக்கை வியாபாரி என பல தகவல் வருகிறது. அதோடு மட்டுமில்லாமல், முத்து பணத்தை தண்ணீர் போல செலவழித்து அனைவருக்கும் பணத்தை கொடுக்கும் நல்ல மனிதர் என அனைவரும் புகழ்ந்தாலும், ஒரு சிலர் அவனை காட்டான் என்கின்றனர். நல்ல மனிதன் முத்து எப்படி காட்டானாக மாறினார் என்பதை அடுத்தடுத்த எபிசோடுகள் விரிவாக சொல்கின்றனர்.
தனித்துவமான கதை: 10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில் வடிவேல் முருகன், முத்துகுமார், சிங்கம்புலி ஆகியோர் கடுமையான போலீசாக இல்லாமல், மனிதநேயத்துடன் நடக்கும் அதிகாரிகளாக நடித்துள்ளனர். மேலும், சத்தமில்லா காட்சிகள், கிராமத்து இயற்கை ஒலிகள் க்ளைமாக்ஸில் எதிர்பாராத ஆக்ஷன் என மணிகண்டன் கதை சொல்லும் விதத்தில் தனித்துவத்தை காட்டியுள்ளார்.
மைனஸ்: வெப் தொடர் ஆரம்பிக்கும் போது அடுத்து என்ன? யார் தலை அது? விஜய் சேதுபதியை கொன்றது யார் என விறுவிறுப்பாக சென்றாலும், கதைக்குள் கதை என்பது போல, விஜே பார்வதியின் குடும்ப வாழ்க்கை, ஆட்டு கதை என சில தேவையில்லாத கதையை சொல்லி ஆடியன்சை கடுப்பாக்கி உள்ளனர். சொல்லவந்ததை சுத்தி வளைத்து சொல்லாமல் நேரடியாக சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.
பிளஸ்: Julian Barnes எழுதிய The Sense of an Ending என்ற நாவலைப் போல, ஒருவரின் வாழ்க்கையின் உண்மை ஒரே பார்வையில் இருக்காது என்பதை இந்த தொடரில் அழகாக சொல்லப்பட்டுள்ளது. மொத்தத்தில் 'முத்து என்கிற காட்டான்' என்கிற வெப்தொடர் ஒரு மனிதனை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதையே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











