Vithaikkaaran Review: வித்தைக்காரன் விமர்சனம்.. ஹீரோவாக சதீஷ் மேஜிக் வொர்க்கவுட் ஆனதா?
நடிகர்கள்: சதீஷ், சிம்ரன் குப்தா
இசை: வெங்கட் பரத்
நேரம்: 2 மணி நேரம் 8 நிமிடங்கள்
இயக்கம்: வெங்கி
சென்னை: இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், மதுசூதன் ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் வித்தைக்காரன். இந்த படத்தில் சதீஷ் மேஜிக் மேனாக நடித்திருக்கிறார். அதற்காகவே இந்த படத்திற்கு வித்தைக்காரன் என தலைப்பு வைத்துள்ளனர்.
ஓ மை கோஸ்ட், கான்ஜுரிங் கண்ணப்பன் என வரிசையாக ஹீரோவாக நடித்து வருகிறார் சதீஷ். அவர் ஹீரோவாக நடித்து இன்று வெளியாகி உள்ள வித்தைக்காரன் திரைப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? இல்லையா? என்பது குறித்து இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..

வித்தைக்காரன் கதை: சதீஷ் இந்த படத்தில் மேஜிக் மேன் ஆகவும் விமான நிலையத்தில் குப்பை அள்ளுபவராகவும் நடித்திருக்கிறார். அயன் படத்தில் வருவது போல விமான நிலையத்தில் தங்கத்தையும் வைரத்தையும் கடத்தும் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு, அவர்களுடன் இவருக்கு பிரச்சனை எப்படி வெடிக்கிறது. அதை இவர் எப்படி டீல் செய்து நாயகனாக ஜெயிக்கிறார் என்பது தான் இந்த வித்தைக்காரன் படத்தின் கதை.
சிரிக்க வைக்கிறாரா சதீஷ்?: சினிமாவில் அவர் காமெடி பண்ணாலே பெரிதாக ரசிகர்கள் சிரிக்க முடியாத அளவுக்குத்தான் காமெடி காட்சிகளில் நடித்து வந்தார். சன்னி லியோன், தர்ஷா குப்தாவுடன் அவர் நடித்த ஓ மை கோஸ்ட் படம் ஓடவே இல்லை. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் ஹீரோவாக சதீஷுக்கு ஒரு நல்ல பேய் படமாகவே அமைந்தது. அந்த படத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தார். ஆனால், மீண்டும் வித்தைக்காரன் படத்தில் நல்ல காமெடி காட்சிகள் ரொம்பவே மிஸ்ஸிங் ஆகி ரசிகர்களை சோதிக்கின்றன.
பிளஸ்: நடிகர் சதீஷ் நடிப்பில் கொஞ்சம் கொஞ்சம் முன்னேற முயற்சிப்பது படத்துக்கு பிளஸ். ஆனந்த்ராஜ் டாலர் அழகு எனும் கதாபாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த காமெடியனாக வந்து தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். அதன் பின்னர் ஜான் விஜய் கொடுத்த கதாபாத்திரத்திற்கு எப்போதும் போல ஓவர் ஆக்டிங்கை அள்ளித் தெளித்து சென்றிருக்கிறார். ஹீரோயினாக சிம்ரன் குப்தா வந்து போகிறார். வெங்கட் பரத் இசையில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் சுமார் ரகம் தான்.
மைனஸ்: முதல் பாதி முழுக்கவே படம் பல இடங்களில் சொதப்பிய நிலையில், இரண்டாம் பாதி முழுக்க விமான நிலையத்திலேயே கதை நகர்கிறது. திரைக்கதையில் பல இடங்களில் இயக்குநர் சொதப்பிய நிலையில், சரியாக காமெடி காட்சிகளும் ரகளையாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் அளவுக்கு செட்டாகவில்லை. ஏற்கனவே இந்த ஆண்டு வெளியான பல படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை தழுவி வரும் இந்த வாரம் வெளியான பல படங்கள் இதே ரகத்திலேயே இருப்பதால் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் செல்வதையே நிறுத்தி விடுவார்களோ என்கிற அச்சமும் எழுந்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஹீரோவாக மாற விரும்பும் சதீஷ் இன்னமும் சிறப்பான கதைகளையும் இயக்குநர்களையும் தேர்வு செய்து நடித்தால் ஹிட் கொடுப்பார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











