With Love Public Review: வித் லவ் பப்ளிக் விமர்சனம்.. ரஜினி சொன்னது ஒர்க் அவுட் ஆச்சா? படம் எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ள படம் வித் லவ். படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கி உள்ளார். படத்தை எம்.ஆர்.பி நிறுவனமும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் சீயோன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். சான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் இன்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
ரசிகர் ஒருவர் கூறுகையில், " குடும்பத்துடன் பார்க்க தரமான படம். படம் முழுக்க ஜாலியாக உள்ளது. படத்தின் முதல் பாதி முழுக்க சிறப்பாக உள்ளது. பின்னணி இசை மிகவும் பிரமாதமாக உள்ளது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டு இசையமைத்துள்ளார். காட்சிக்கு காட்சி வித்தியாசப்படுத்திக் கொடுத்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இன்னொரு ரசிகர் கூறுகையில், " நான் 80களில் பிறந்தவன். இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் படத்தை பிரமாதமாக, தரமாக எடுத்துள்ளார்கள். மிகவும் நிறைவாக உள்ளது. தயாரிப்பாளர்கள் இது போன்ற கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்தால் படத்தை கொண்டாட நாங்கள் தயாராக இருக்கிறோம். மாஸான படம் எடுக்கிறேன் என்று மாஸ் கதாநாயகர்கள் பின்னால் சென்று மோசமான படங்களை கொடுக்க வேண்டாம். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நவீன இசைஞானி என்ற படத்தை கொடுக்கிறேன். அதற்கு அவர் பொருத்தமானவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்தியான படம்: ரசிகை ஒருவர் கூறுகையில், " குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்க்கலாம். படம் தொடங்கியதில் இருந்து கடைசி வரை மிகவும் நன்றாக உள்ளது. திரைக்கதை நன்றாக உள்ளது. படம் பார்த்து முடிக்கும் போது திருப்தியான படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. ஃபீல் குட் படம்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரே சிரிப்பு: இன்னொரு ரசிகர் கூறுகையில், " மற்ற காதல் படங்களில் இருந்து இந்த படம் வித்தியாச படவில்லை. ஆனால் நமது கடந்த கால நினைவுகளை மொத்தமாக திருப்பிப் பார்ப்பது போல இருக்கிறது. சூப்பர் ஸ்டார் சொன்னது போல அபிஷன் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான். கடைசி 15 நிமிடங்கள் தியேட்டரில் கைத்தட்டல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தைப் பார்க்கலாம், திரைக்கதை கொஞ்சம் மாறி இருந்தாலும் படம் சொதப்பி இருக்கும். ஆனால் அப்படி ஆகவில்லை, கிளைமாக்ஸ் அனைவருக்கும் பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.

எக்ஸ் லவ்வருடன் பாருங்க: படத்தில் எல்லாமே உள்ளது. படம் கட்டாயம் நன்றாக ஓடும் என்று நினைக்கிறேன். இது போன்ற படத்திற்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும். படம் பார்த்த எனது நண்பர் ஒரு காட்சியில் அழுதுவிட்டார். நடிப்பு, இசை, திரைக்கதை, பாடல்கள், பின்னணி இசை என மொத்தமாகவே படம் ஃபீல் குட் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு ரசிகரோ எக்ஸ் லவ்வருடனும் இந்த படத்தை பார்க்கலாம், லவ்வருடனும் இந்த படத்தை பார்க்கலாம், குடும்பமாகவும் இந்த படத்தை பார்க்கலாம் என்று விமர்சித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இருந்து இது போன்ற பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருப்பதால் படக்குழுவினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











