With Love Review: வித் லவ் விமர்சனம்.. காதலை போல காதல் பிரிவும் மீண்டும் கிடைக்கும் சந்திப்பும் அழகுதான்!
சென்னை: மக்களை சினிமா தியேட்டருக்குள் கொண்டு வரவேண்டும் என்றால் கண்டிப்பாக போர் அடிக்கும் கருத்து சொல்லும் படங்களை விட காமெடி கலந்து சிரிக்க வைக்கும் காதல் படங்கள் கை கொடுக்கும் என்பதை நன்றாகவே புரிந்துக் கொண்டு அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ள படம் தான் 'வித் லவ்'.
இலங்கை அகதிகளின் வலியை வேதனையுடன் பல படங்கள் சொல்லி வந்த நிலையில், அந்த கதையையும் அந்த மக்களையும் நம் சொந்தங்கள் என்பதை அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும்படி 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைக் கொடுத்த அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

மலையாள படங்களில் ஜாலியாகவும் சீரியஸாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜனின் எனர்ஜியுடன் வெளியாகி உள்ள இந்த 'வித் லவ்' எப்படி இருக்கு என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
'வித் லவ்' கதை
செளந்தர்யா ரஜினிகாந்தின் Zion நிறுவனமும் குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தயாரித்த MRP Entertainment நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள 'வித் லவ்' திரைப்படத்தை மதன் இயக்க அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு இளமை ததும்பும் வகையில் இசையமைத்துள்ளார்.
சத்யாவுக்கு (அபிஷன் ஜீவிந்த்) பெண் தேடும் படலத்தில் அவங்க அக்கா ஈடுபட, சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் மோனிஷாவை (அனஸ்வரா ராஜன்) பார்க்க அனுப்புகின்றனர். இருவரும் திருச்சியில் ஒரே பள்ளியில் படித்திருந்தாலும் வேறு நபர்களை அந்த காலக்கட்டத்தில் காதலித்தனர். அதன் கதையை இருவரும் சொல்லி முடிக்க அதன் பின்னர், மோனிஷா, நாம ஏன் நம்மளோட ஃபர்ஸ்ட் லவ்வை கண்டுபிடித்து புரபோஸ் பண்ணக் கூடாது என குண்டை தூக்கிப் போடுகிறார். அதன் பின்னர், அவருடன் டிராவல் செய்யும் ஹீரோ எப்படியாவது மோனிஷாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்க கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?
அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக முதல் காட்சியில் இருந்தே முத்திரையை பதிவு செய்ய நன்றாகவே முயற்சித்துள்ளார். மீசை தாடி வைத்த இளைஞனாகவும் க்ளீன் ஷேவ் உடன் பள்ளி மாணவனாகவும் கலக்கியுள்ளார். பள்ளியில் முஸ்லீம் மாணவியை காதலிக்கும் காட்சிகளும் அன்ஷிதாவாக நடித்துள்ள அந்த நடிகையின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
அபிஷன் ஜீவிந்தை தனது நடிப்பு அனுபவத்தால் அசால்ட்டாக தூக்கி சாப்பிடுகிறார் அனஸ்வரா ராஜன். படம் முழுக்க பாசிட்டிவ் எனர்ஜியையும் ஒரு வித வைபையும் கொடுப்பது அவரது துள்ளலான நடிப்பு தான். பிரேமலு படத்தை மமிதா பைஜுவுக்காக ரசிகர்கள் பார்த்தது போல இந்த படத்தையும் அனஸ்வராவுக்காக பார்ப்பார்கள் என்றே தெரிகிறது.

பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதலை சொல்லக் கூட முடியாமல் தயக்கம் காட்டிக் கொண்டே பல காதல்கள் வெற்றி பெறுவதில்லை என்பதையும் மீண்டும் பழைய காதலர்களை சந்தித்துப் பேசினால் கிடைக்கும் அனுபவத்தையும் திரைக்கதை மூலமாக இயக்குநர் மதன் அழகாக செதுக்கியுள்ளார்.
திருச்சியின் பல இடங்கள் குறித்து வரும் ரெஃபரன்ஸ், யுவன் சங்கர் ராஜா ரெஃபரன்ஸ், ஃபிளேம்ஸ், ஸ்லாம் புக் காட்சிகள் என ரசித்து ரசித்து பல விஷயங்களை படமாக்கியுள்ளனர். முதல் பாதி ஏதோ இரண்டு கதைகளையும் போரடிக்காமல் மட்டும் சொல்லி விட வேண்டும் என்கிற வேகத்துடன் ஓடியது போல இருந்தது. சித்தப்பு சரவணன் கதாபாத்திரம் பழைய காதலை தாண்டி ஆசிரியர்களையும் நினைவுப்படுத்துவது சூப்பர்.
ஆனால், இரண்டாவது பாதியில் வரும் அந்த அஜித் பட டைட்டிலில் உருவான பாடல் (தேவா) காட்சிகளுக்குப் பிறகு படம் கடைசி வரை தனது டெம்போவை குறைத்துக் கொள்ளாமல் சென்று ரசிக்க வைத்து விட்டது. ஆக்ஷன் ஹீரோ போல பலரை பந்தாடுவது போன்ற காட்சிகளை வைக்காமல் அடிப்பதும், சுத்துப் போட்டால் மான் கராத்தேவை பயன்படுத்தி ஓடுவதுமாக அபிஷன் ஜீவிந்த் அடிக்கடி சிரிக்க வைத்து விடுகிறார். கிளைமேக்ஸிலும் தான் சாகப் போகிறேன் என அவர் கூட்டும் அலப்பறை அட்டகாசம்.

பிளஸ்
ஷான் ரோல்டன் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. பாடல் வரிகளும், பாடல்களும் ரொம்பவே ஃபிரெஷ்ஷாக உள்ளது. கண்டிப்பாக ஜென் ஸி கிட்ஸை டார்கெட் செய்தே உருவாக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் லென்ஸ் வெளியே ஒவ்வொரு ஃபிரேமும் ரொம்பவே அழகாக காட்சியளிக்கிறது.
திருச்சியின் அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார். எதிர்பாராத விதமாக ரயிலில் வரும் சர்ப்ரைஸ் கேமியோ காட்சி கண்டிப்பாக ரசிகர்களை கனெக்ட் செய்து விடும். அனஸ்வரா ராஜனின் கதாபாத்திரத்தை போல்டாக வடிவமைத்தது, ஒரு பிரச்னை இருந்தால் பேசி தீர்க்க வேண்டும் என சொல்லும் இடங்கள். அவளோட டெஷிஷனை மதி என அக்கா ஆர்ஜே ஆனந்தி சொல்லும் இடமெல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறது. ஆரம்பத்தில் இருந்தே ஹீரோ அதிகமாக சிகரெட் பிடிப்பது போல காட்டும் காட்சிகள் இரிடேட் செய்தாலும், கடைசியில் அதற்கு ஒரு குட்டி ஸ்டோரி வைத்து எண்ட் கார்டு போட்ட விதம் நிச்சயமாக இயக்குநரின் சமூக அக்கறையை வெளிக்காட்டுகிறது.
மைனஸ்
முதல் காதலை உருகி உருகி காதலித்தும் கைகூடாத நிலையில் பலரது கதை இருக்க முதல் காதல் செய்ததே தெரியாத விதத்தில் இருக்கும் காதலர்களின் கதையை கையில் எடுத்துக் கொண்டு படமாக்கியது பெரிய குறையாகவே உள்ளது. முதல் பாதியில் இரு காதல் கதைகளை வேக வேகமாக சொல்லப்பட்டதும் அதில் எந்தவொரு அழுத்தமும் ஆழமும் இல்லாதது மைனஸ் ஆக தெரிகிறது. முதல் பாதியை கடந்து 2ம் பாதியில் சத்யா - அன்ஷிதா சந்திக்கும் காட்சி அந்த குறைகளை நிவர்த்தி செய்வது அழகு. தாராளமாக இந்த காதலர் தின வாரத்தில் 'வித் லவ்' படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











