ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா அவன் பேச்சை அவனே கேட்க மாட்டான்: கே.ஜி.எஃப் விமர்சனம்
Recommended Video

சென்னை: கே.ஜி.எஃப். படம் யஷ் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ரெட்டி உள்ளிட்டோர் நடித்த கே.ஜி.எஃப். படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இன்று ரிலீஸாகியுள்ளது.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த ராக்கி(யஷ்) பணம் மற்றும் அதிகாரம் படைத்த நபராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். மும்பை தெருக்களில் சுற்றித் திரிந்த ராக்கி கோலார் தங்க வயலுக்கு வருகிறார். பெரிய கனவுகளுடன் கோலார் தங்க வயலுக்கு வரும் யஷின் லட்சிய பயணம் தான் கதை.

இதில் காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து கொடுத்துள்ளார் பிரசாந்த். தேசிய அளவில் அதிகம் பேசப்பட்ட கன்னட படம் கே.ஜி.எஃப். அதனாலேயே படத்திற்கு கண்டபடி எதிர்பார்ப்பு எகிறியது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது. முதல் பாதி விறுவிறுவென சென்றாலும் நீளமாக உள்ளது. இருப்பினும் இரண்டாம் பாதி அதை சரி செய்துவிடுகிறது.
திரைக்கதை அமைத்த விதம் படத்திற்கு பிளஸ் பாயிண்ட். ராக்கியின் வளர்ச்சியை பார்க்க பார்க்க ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தியேட்டர்களில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. 1951ம் ஆண்டில் இருந்து 2018ம் ஆண்டு வரை கதை பயணிக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்திய விதம் நன்றாக இருந்தது.

படத்திற்கு இசையும், விஷுவல் எஃபெக்ட்ஸும் பக்கபலம். யஷின் கடின உழைப்பை திரையில் பார்க்க முடிகிறது. யஷ் ராக்கியாக நடிக்கவில்லை அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நினைத்ததை முடிக்கும் வரை ஓய மாட்டான் ராக்கி என்று காட்டியுள்ளார்கள். முதல் பாகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதால் இரண்டாம் பாகத்தில் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தை யஷ் தன் தோள்களில் தாங்குகிறார். படம் முழுக்க யஷ் மட்டுமே வருகிறார். ஹீரோயின் உள்பட பிற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. பாவம் அவர்களுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். ஆக மொத்தம் கே.ஜி.எஃப். மாஸ்.


Click it and Unblock the Notifications











