»   »  யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை - விமர்சனம்

யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
0.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: சிங்கம்புலி, விஜய் ஆர் நாகராஜ், ப்ரியா மேனன்

ஒளிப்பதிவு: கிச்சாஸ்

இசை: ஆதிஷ் உத்ரியன்

தயாரிப்பு: கேடிஎப்சிஎஸ் கிரியேஷன்ஸ்

இயக்கம்: சுவாமி ராஜா

ஊர்ப் பக்கம் சரளமாகப் புழங்கும், சற்று நகைச்சுவையாகக் கையாளப்படும் வழக்குச் சொல்லையே தலைப்பாக்கியிருக்கிறார்கள். சிங்கம்புலிதான் பிரதான காமெடியன். சரி, சிரிப்பு வந்தா சரிதானே என்று தியேட்டருக்குப் போனால்... ஆத்தீ!

வடக்குப் பட்டி, தெற்குப் பட்டி என இரண்டு கிராமங்கள். இரண்டு கிராம பஞ்சாயத்து பெரிசுகளுக்கும் பகை. இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். காதலைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் 'சொம்பு திருடன்' சிங்கம்புலி. முயற்சி பலித்ததா என்பதுதான் கதை. படிக்கும்போது கண்ணியமாகத் தெரியும் இந்தக் கதையை கண்றாவியாகப் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

Yokkiyan Varaan Sombai Thooki Ulla Vai Review

அதுவும் இரண்டு பஞ்சாயத்துகளின் பகைக்கு காரணம் என்று ஒன்றைச் சொல்கிறார்களே... கருமம்டா. கணவர்களுக்காக அவர்களின் மனைவிமார்கள் போடும் சபதம் இருக்கிறதே... எவ்வளவு வக்கிரமாக சிந்திக்கிறார்கள் சினிமாக்காரர்கள் என்று தலையிலடித்துக் கொள்ள வைக்கிறது.

சினிமா என்பது பொழுதுபோக்கு சமாச்சாரம்தானே என என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயம் கொஞ்சமேனும் நாகரிகத்தோடு இருக்க வேண்டும் அல்லவா... அதைப் பற்றியெல்லாம் இம்மியளவுக்குக் கூட இயக்குநரோ, பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இன்னொரு இயக்குநரான சிங்கம்புலியோ கவலைப்படவில்லை.

சிங்கம் புலி படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார். அவரும் காமெடி என்று நினைத்து என்னென்னமோ செய்கிறார். ஆனால் பார்க்கும் நமக்குத்தான் சிரிப்பு வர மறுக்கிறது.

போர்வை நாட்டாமையாக வரும் நபர் செய்யும் காரியங்கள் அருவருப்பாக உள்ளன.

Yokkiyan Varaan Sombai Thooki Ulla Vai Review

நாயகன், நாயகி இருவருமே புதுசு. நடிக்கத் தடுமாறியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு மேக்கப்பையாவது ஒழுங்காகப் போட்டிருக்கலாம்.

இசை, காமிரா எல்லாமே சுமார்தான். இந்தப் படத்துக்கு இதுவே ஜாஸ்தி என்று நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

அத்தனை சினிமா மேடைகளிலும் சின்னப் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள் சினிமாக்காரர்கள். கிடைக்கிற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி சின்ன பட்ஜெட்டில் நல்லப் படம் கொடுத்தால் கேட்காமலேயே ஆதரவு தருவார்கள் மக்கள்.

யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை மாதிரி குப்பையாகக் கொட்டினால் எப்படிப் பார்ப்பார்கள்?

English summary
Yokkiyan Varaan Sombai Thooki Ulla Vai is an awkward movie in the name of comedy. An avoidable flick.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil