ரசிகர்களிடம் சிக்கிய நமீதா!

நடிகைகள் எல்லாம் இப்போது ஜவுளிக் கடை திறப்பு, நகைக் கடை திறப்பு ஆகியவற்றிலும் பிசியாக உள்ளனர். அதிலும் பிரபல நடிகைகளுக்கு இதுபோன்ற திறப்பு விழாக்களுக்கு அதிக அளவில் டிமாண்ட் உள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் ஒரு நகைக் கடையைத் திறந்து வைக்க நமீதா அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக நமீதா தூத்துக்குடி சென்றார்.
கருப்பு நிற டிரஸ்ஸில் வழக்கம் போல கவர்ச்சிகரமாக வந்த நமீதாவைப் பார்த்து கூட்டம் கூடி விட்டது. நமீதாவும் சும்மா இருக்காமல் ரசிகர்களைப் பார்த்து பறக்கும் முத்தங்களை அள்ளி விட்டார். இதையடுத்து பெரும் திரளான ரசிகர்கள் நமீதாவை சுற்றி சூழ்ந்து கொண்டனர்.
இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் நமீதா சிக்கிக் கொண்டார். ஆனால் அசம்பாவிதமாக எதுவும் நடைபெறும் முன்பு போலீஸார் உள்ளே பாய்ந்து லேசான தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்து, நமீதாவை மீட்டு கடைக்குள் அழைத்துச் சென்றனர்.
ஆனால் ரசிகர்களை அடிக்காதீர்கள் என்று நமீதா போலீஸாரிடம் கேட்டுக் கொண்டனர். பின்னர் கடையைத் திறந்து வைத்து விட்டு சென்றார் நமீதா.
முன்னதாக செய்தியாளர்களிடம் சில வார்த்தைகள் பேசினார் நமீதா. அப்போது அவர் கூறுகையில், தமிழ் திரையுலகத்தை எனக்கு இட்லி சாப்பிடுவது போன்று மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் ரசிகர்களை எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்.
தமிழ் திரையுலக நடிகை குஷ்புவிற்கு ஏற்கனவே ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர். இதன்படி பார்க்கும்போது தமிழ் திரையுலக ரசிகர்கள் எனக்காக கோயில் கட்டுவதாக சொல்வதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இவ்வாறு கட்டப்படும் கோயிலானது வித்தியாசமாக இருக்க வேண்டும்.
அக்கோயிலில் ஏழை மாணவர்கள் வந்து படிக்கும் வகையில் மின்விளக்குகள், மின்விசிறிகள் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களின் படிப்பிற்கு தேவையான வசதிகள் எல்லாம் அங்கு இருக்க வேண்டும். எனக்காக கட்டப்படும் கோயிலானது அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். எல்லோரும் அக்கோயிலை பயன்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
அரசியல்...?
அரசியலா...அய்யோ எனக்கு வேண்டவே வேண்டாம். ஆளை விட்டால் போதும் (இப்படி சொல்லியபடி தனது இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி சிரித்து கொண்டே பெரிய கும்பிடு போட்டார்). ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஆர்வம் இருக்கலாம். எனக்கு விளையாட்டில்தான் அதிக ஆர்வம் உண்டு என்றார் நமீதா.


Click it and Unblock the Notifications











