முழுக்க முழுக்க மரத்திலேயே ஒரு ஸ்டன்ட்!
தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க மரத்தின் மீது ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கியுள்ளனர் புலிவேஷம் படத்துக்காக.
ஆர். கே. வேர்ல்ட்ஸ் தயாரிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் ஆர்.கே. நடிக்கும் புலிவேஷம் படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படாத சிறப்பான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
சண்டைக்காட்சிகள் இதுவரை ரெஸ்டாரண்டில், பாழடைந்த குடோன்களில் , படமாக்கப்பட்டிருக்கும். கையில் கிடைத்ததை எல்லாம் அடித்து நொறுக்கி துவம்சம் செய்வார்கள். ஆனால் முதல் முறையாக மரத்தில், மரத்தை விட்டு இறங்காமலேயே எதிரிகளை அடித்து வீழ்த்தும் காட்சிகள் அதிக சிரமம் எடுத்து படமாக்கப்பட்டது.
காட்சிப்படி கதாநாயகன் கதாநாயகியை அழைத்துக்கொண்டு சென்னை வரும் போது தங்க இடமில்லாமல் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதில் கதாநாயகியை தங்க வைக்கிறான். அவள் மீது பாசம் அதிகம் கொண்ட கதாநாயகன் அவளின் உறக்கத்திற்கு யாரும் தடையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவன்.
வில்லன் அடியாட்கள் கொடுக்கும் தொந்தரவை மரத்திலிருந்து இறங்காமலேயே முழுக்க பெரிய மரக் கிளைகளில் தாவித் தாவி அவள் விழிக்கா வண்ணம் எதிரிகளை வீழ்த்தும் காட்சிகள் படமாக்கப்பட்டது.
புலி வேஷம் படத்துக்காக இக்காட்சிகள் படமாக்கப்பட அமைப்புள்ள ஒரு மரத்தை மகாபலிபுரம் அருகே கண்டு பிடித்து அதில் ஐந்து நாட்கள் படமாக்கப்பட்டது. புதிய வகை லேட்டஸ்ட் கேமராவான "ஸ்கார்பியோ'' கேமரா இதற்கு பயன் படுத்தப்பட்டது. சண்டைக் காட்சிகளை மாஸ்டர் ராஜசேகர் அமைத்தார்.
இது குறித்து சண்டை பயிற்சி இயக்குனர் ராஜசேகர் கூறும் பொழுது இயக்குனர் வாசு சார் இப்படியொரு காட்சியை சொன்னபோது உண்மையிலேயே இது சண்டைக் காட்சிகளில் நிச்சயம் புதியதொரு அமைப்பு என்று பட்டது.
ஆனால் படமாக்குவது சண்டைக் கலைஞர்களுக்கு ரிஸ்க்தான். சாதாரண தரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். மரத்தில் சண்டை செய்யும் பொழுது நினைத்த படி துள்ளிக் குதிக்கவோ அடிபட்டு விழுவதோ கிளைகளில் சிக்கி பலமாக காயம் படநேரிடும். ஆனாலும் ரிஸ்க் எடுத்து படமாக்கினோம் 25 சண்டைக் கலைஞர்கள் இதில் பயன்படுத்தப்பட்டனர்.
ஆர்.கே சார் ஐந்து நாட்களில் அதிக நேரம் மரத்திலேயே இருந்தார். ரிஸ்க் எடுத்து சிறப்பாக செய்தார். இந்த காட்சி நிச்சயம் பேசப்படும் என்றார்.
புலி வேஷம் படத்தின் நாயகனாக ஆர்.கே நடிக்க, நாயகிகளாக சதா ,திவ்யா விஸ்வநாத் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக கார்த்திக் நடிக்கிறார்.
இவர்கள் தவிர மன்சூரலிகான், கஞ்சாகருப்பு, எம்.எஸ் பாஸ்கர், ஆசிஷ் வித்யார்த்தி, இளவரசு, மயில்சாமி, மனோபாலா, ஒ.ஏ கே சுந்தர் என நட்சத்திர பட்டாளத்தின் பங்களிப்புடன் புலிவேஷம் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications











