twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆறாவது வனம் படத்துக்காக ஊரையே காலிசெய்த மக்கள்!

    By Staff
    |

    Aaravathu Vanam
    'ஒரு நாள் ஷூட்டிங் நடத்தணும்... உங்க ஊரைக் காலி பண்ணிக் கொடுப்பீங்களா' என்று கேட்டால் எந்த கிராமத்து மக்களாவது ஒப்புக் கொள்வார்களா?.

    கடுப்புடன் கட்டையால் அடிக்க வருவார்கள்... ஆனால் ஒரே ஒரு கிராமம் இந்த கோரிக்கைக்கு மனமுவந்து ஒப்புக் கொண்டது. அந்த கிராமம் சிங்கராம் பாளையம். கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது.

    'ஆறாவது வனம்' படப்பிடிப்புக்காக தங்கள் கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள் ஒரு நாள் முழுக்க ஊருக்குள்ளேயே வராமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து 'ஆறாவது வனம்' இயக்குநர் புவனேஷ் கூறியதாவது:

    "பாண்டவர்கள் தங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் துன்பத்தை அனுபவித்தது ஆறாவது வனத்தில் நாடோடிகளாய் அலைந்த காலகட்டம்தான். அதற்கு இணையான கஷ்டத்தை ஒரு கிராமத்தினர் அனுபவிக்கிறார்கள்... எல்லாம் காதல் சமாச்சாரத்தால்.

    ஒரு இளம் ஜோடியின் காதலுக்காக ஒட்டுமொத்த மக்களும் ஊரைக் காலிபண்ணிக் கொண்டு போக, கடைசியில் அந்த ஊரில் இரண்டே இரண்டு பேர் மட்டும் மிஞ்சுகிறார்கள். இப்போதும் அந்த கிராமம் அப்படியே இருக்கிறது. இன்று வரை அந்த இருவர் மட்டுமே அந்த ஊரில் வசிக்கிறார்கள்.

    இந்த உண்மைச் சம்பவம்தான் ஆறாவது வனம்.

    இந்த கதைக்கு உயிரூட்ட சம்பந்தப்பட்ட அந்த கிராமத்துக்கே போய் படமாக்க எண்ணினோம்.

    ஆனால் அந்த கிராமத்தில் மிச்சமிருக்கும் அந்த இருவர் கடைசி வரை இதற்கு அனுமதி மறுத்துவிட்டார்கள்.

    வேறு வழி இல்லாததால், பொருத்தமான வேறொரு கிராமம் தேடியபோது இந்த சிங்கராம்பாளையம் கண்ணில் பட்டது. கதைக்குப் பொருத்தமாகவும் இருந்தது.

    ஷூட்டிங்குக்காக ஊரை ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு மட்டும் காலி செய்து தர முடியுமா என்று அந்த மக்களைக் கேட்டபோது முதலில் கடுமையாகக் கோபப்பட்டனர். எங்க ஊரை காலி பண்ணச் சொல்ல நீ யாருய்யா என்றுதான் கேட்டார்கள்.

    ஆனால் அவர்களுக்கு பொறுமையாக, அந்த உண்மைக் காதல் சம்பவத்தையும் இப்போது ஏற்பட்டுள்ள ஷூட்டிங் சிக்கலையும் சொன்னோம். அவர்கள் ஊர்க்கூட்டம் நடத்தி ஒருமனதாக எங்களுக்கு ஒத்துழைக்க முடிவு செய்தார்கள். பெரியவர் சிறியவர் குழந்தைகள் என்ற பேதமில்லாமல் அனைவரும் எங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறிய காட்சி கண்ணில் நீரை வரவழைத்தது. அவர்களுக்கு நன்றி சொல்லக் கூட நா எழவில்லை.

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார்கள் சிங்கராம்பாளையம் மக்கள்.

    தமிழ் சினிமாவில் இதற்கு முன் வேறு எந்தப் படத்துக்காவது மக்கள் இந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்..." என்றார் இயக்குநர் புவனேஷ்.

    ஆறாவது வனத்தின் நாயகனாக கன்னட நடிகர் பூஷன் நடிக்கிறார். நாயகியாக கேரளாவைச் சேர்ந்த வித்யா அறிமுகமாகிறார்.

    கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புவனேஷ். எம்பிஜி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிப்பவர் தியாகராஜன்.

    இசையமைப்பாளராக ஹரிபாபு அறிமுகமாகிறார். ஹாலிவுட்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சியான் எடிட்டராக அறிமுகமாகிறார்.

    விரைவில் திரைக்கு வருகிறது ஆறாவது வனம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X