'உளறல் நாயகன்' ஆகாஷ்!- சுனேனா கடுப்பு

சில மாதங்களுக்கு முன் இவர் நடித்து ஒரு படம் வெளியானது. பெயர் அடடா என்ன அழகு. 'அடடா என்ன கொடுமை என்று பெயர் சூட்ட வேண்டிய படம்யா இது!' என ரசிகர்களை நோகடித்த படம் இது.
இந்தப் படத்தில் இவர் தனது பெயரை ஆகாஷ் ஜெய் என மாற்றிக் கொண்டார். இதை பிரஸ் மீட் வைத்து வேறு அறிவித்தார். ஆனால் இப்போதோ, அப்படி பெயர் மாறியதே தனக்குத் தெரியாது என கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகப் பேசுகிறார்.
"இந்தப் பெயர் மாற்றத்தில் எனக்கு உடன்பாடே இல்லை. அவர்களாகவே மாற்றி வைத்துக் கொண்டார்கள்(!). அந்தப் படத்தில் நடிக்க எனக்குப் பிடிக்கவே இல்லை. ஆனால் நடித்துவிட்டேன். நாடோடிகள் கதையை என்னிடம்தான் சொன்னார்கள். ஆனால் நான் ஓகே சொல்வதற்குள் வேறு நாயகனை வைத்து எடுத்து ரிலீஸ் செய்துவிட்டார்கள்..."
இப்படியெல்லாம் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அடுக்கிக்கொண்டே போனார் ஆகாஷ்.
இதில் குறுக்குக் கேள்வி கேட்பதற்குள், இன்னொரு விஷயத்தைச் சொன்னார். அதாவது வரவிருக்கிற அவரது படம் ஒன்றில், நடிகை சுனேனா படுக்கைக் காட்சியில் படுநெருக்கமாக நடித்திருக்கிறாராம். கேமராவுக்கே வெட்கம் வரும் அளவுக்கு இவரும் சுனேனாவும் காதல் விளையாட்டுக்களை நடத்தியதாக பரபரப்பாக பேட்டி கொடுத்தார்.
இந்த விஷயம் தெரியவந்ததும் சுனேனா கொதித்துப் போய்விட்டார்.
"எனக்கு விவரம் தெரியாத சமயத்தில் ஒப்புக் கொண்ட படம் அது. இவர் ஒரு நடிகர் என நம்பி அவர் சொன்ன மாதிரியெல்லாம் நடித்தேன். ஆனாலும் படுக்கைக் காட்சியில் நடிக்கவில்லை. என்னை வைத்து நாலு சீன்கள் எடுத்துவிட்டு, இப்போது வேறு டூப் வைத்து திட்டமிட்டதுபோல ஆபாசக் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். வியாபாரத்துக்காக என் பெயரை தப்பாகப் பயன்படுத்தி உளறிக் கொட்டுகிறார்... நான் ஏற்கெனவே இதுபற்றி விளக்கமும் கொடுத்திருக்கிறேன்", என்கிறார் சுனேனா.


Click it and Unblock the Notifications











